வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது: திடுக்கிடவைக்கும் பெர்ன்ஸ்டீனின் சமீபத்திய ஆய்வுமுடிவு

பரந்த அளவிலான வர்த்தகம் மற்றும் பொருளாதார அளவுருக்களில் இந்தியா, சீனாவை விட 16.5 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாகப் பிரபல தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டீனின் சமீபத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
காப்புரிமை, அந்நிய நேரடி முதலீடு, அந்நியச் செலாவணி இருப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களைப் பகுப்பாய்வு செய்த பெர்ன்ஸ்டீன் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இந்த இடைவெளியைத் தெரிவித்துள்ளது. காப்புரிமையைப் பொறுத்தவரை, இந்தியா சீனாவை விட 21 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரையில் இந்தியா சீனாவை விட 20 ஆண்டுகள் பின்தங்கியிருக்கிறது என்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் 19 ஆண்டுகள், ஏற்றுமதியில் 17 ஆண்டுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் வருமானத்தில் 15 ஆண்டுகள் என இந்தியா பின்தங்கியுள்ளது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும் நுகர்வு செலவில், 13 ஆண்டுகளும் மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தில் 16 ஆண்டுகள் இந்தியா பின்தங்கி உள்ளதாகவும் தெரிய வருகிறது. பெர்ன்ஸ்டீனின் இந்தப் பகுப்பாய்வு இந்திய ரிசர்வ் வங்கி, சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், உலக வங்கி மற்றும் உலக அறிவுசார் சொத்து அமைப்பு ஆகியவற்றின் தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலகில் 11-வது இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு, இந்தியாவின் $3.53 டிரில்லியன் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இங்கிலாந்தின் $3.38 டிரில்லியனை விட அதிகரித்து இந்தியாவை ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தக் கணக்கீடுகள் யாவும் சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பிடப்பட்ட எண்களை அடிப்படையாகக் கொண்டவை. இருப்பினும், ஜிடிபி எண்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், அவை தொடர்ச்சியான திருத்தங்களுக்கு உட்படுகின்றன. மேலும் இறுதித் தரவுகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தாமதமாகவே வருகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேசிய உற்பத்தியின் முதல் மதிப்பீடுகள் பால்பார்க் புள்ளிவிவரங்கள், மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்குத் திருத்தங்களுக்கு உட்பட்டவை. ஒரு நாட்டின் ஜிடிபி என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் நடப்பு ஆண்டு விலைகளின் அடிப்படையில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், அதேசமயம் உண்மையான ஜிடிபி என்பது ஒரு நாட்டின் பணவீக்கம் சரிசெய்யப்பட்ட ஜிடிபி ஆகும். ஜூலை மாதம் வெளியிடப்பட்ட டெக்கான் ஹெரால்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன தெரியுமா? “அனைத்து உயர் வருமானம் கொண்ட நாடுகளும் குறைந்த ஜிடிபி வளர்ச்சி சுற்றுப்பாதையில் நுழைந்திருக்கின்றன. அதேவேளை வளரும் நாடுகள் அதிக ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. கடந்த 2013-2022 ஆம் ஆண்டுகளில், வளரும் நாடான இந்தியா, ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது. இருப்பினும், தனிநபர் வருமானத்தில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது”, என அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
அது சரி, சீனாவுடனான இந்த இடைவெளியை இந்தியா குறைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். எப்படி தெரியுமா? வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 10 டிரில்லியன் டாலர்களை எட்டுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. இது அடையக்கூடிய இலக்குதான் என்றும் இதை அடைந்துவிட்டால் இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையேயான இந்த இடைவெளி குறையும் என்கிறார்கள் அவர்கள். இதே போல் பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையும், சீன வளர்ச்சியின் மந்தநிலையை இந்தியா பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2021 இல் 8.4 சதவீதமாக இருந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2022 இல் 3% மட்டுமே அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியோ 7 சதவீதம். அதன் வேகமான இந்த வளர்ச்சி இனி வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் பதட்டங்கள் இந்தியாவிற்குச் சில புதிய மற்றும் நல்ல வழிகளைத் திறந்து வைத்துள்ளன. சீனாவில் உற்பத்தி செய்யும் பல உலகளாவிய நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் சவால்களைத் தவிர்க்க முனைவதும், இந்தியா ஆப்பிள் போன்ற நிறுவனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய வைத்து அதன் பெரும் பகுதியை ஏற்றுமதி செய்வதற்குத் தயாராக இருப்பதும் கவனிக்கத்தக்கது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் கூறுகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர் அருண் குமார் இது குறித்துக் கூறுகையில் “பிசினஸ் ஸ்டாண்டர்ட் கூற்றுப்படி, சீனாவை விடக் குறைவான தொழிலாளர் செலவுகளுடன் இந்தியாவும் வளர்ந்து வரும் இளம் பணியாளர்களைக் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவை ஒப்பிடும்போது ஒரு தொழிலாளிக்கு சீனாவின் உற்பத்தித் திறன் மிக அதிகமாக உள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரை, இந்தியா தனது மூலப்பொருள் தேவைகளுக்காக சீனாவைப் பெரிதும் சார்ந்துள்ளது. மேலும் “உலகின் உற்பத்தி மையமாக” சீனா மாறியுள்ளது, ஏனெனில் சீனாவால் அதிக அளவில் பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. அதன் விளைவாக அவற்றை மலிவாக விற்க முடிகிறது. அவற்றை மலிவான விலைக்கு விற்பதன் மூலம், அது ஆதிக்கம் செலுத்துகிறது” என்றார். மேலும், இந்தியாவில் மனிதவளம் அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற போதுமான மற்றும் தரமான வேலைகள் இல்லை. எனவே, போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றால், மக்கள் தொகைப் பெருக்கமே இந்தியாவின் பின்தங்கலுக்குப் பொறுப்பாகிவிடும் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.