fbpx
LOADING

Type to search

இந்தியா சிறப்புக் கட்டுரைகள் பல்பொருள்

சிறுத்தைகளின் மரண தேசமா இந்தியா?

cheetah translocation

செய்தி சுருக்கம்:

இந்தியாவில் அழிந்துபோய்விட்டதென்று அறிவிக்கப்பட்ட ஒரு சிறுத்தை இனத்தை மறு அறிமுகம் செய்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளான நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. இந்த சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் இருக்கும் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இவற்றுள் 2023 ஆகஸ்ட் 2ம் தேதி வரை 9 சிறுத்தைகள் இறந்துவிட்டன.

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

உலகில் முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் சிறுத்தைகள் இடப்பெயர்வு செய்யப்பட்ட திட்டம் இதுவாகும். புராஜக்ட் சீட்டா என்ற திட்டத்தின் கீழ் நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் சரக்கு விமானத்தில் குவாலியருக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைகளுள் ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் 2022 செப்டம்பர் 17ம் தேதி இந்திய பிரதமர் மோடி பிரத்தியேக வன உறைவிடத்திற்குள் திறந்துவிட்டார்.

பின்னணி:

அசினோனிக்ஸ் ஜூபடஸ் வெனாடிகஸ் என்ற சிறுத்தை இனம் இந்தியாவில் அழிந்துவிட்டது என்று 1952ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அது சார்ந்த இனத்தை மறு அறிமுகம் செய்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அசினோனிக்ஸ் ஜூபடஸ் ஜூபடஸ் என்ற வகை சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகளும், 2023 பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பன்னிரண்டு சிறுத்தைகளும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன.

நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த சிறுத்தைகளுக்கு புதிய பெயரிடுவதற்காக பொது மக்களிடமிருந்து பெயர்கள் வரவேற்கப்பட்டன. 11,565 ஆலோசனைகள் வந்த நிலையில் பெண் சிறுத்தைகளுக்கு சாஷா, நாபா, ஜ்வாலா, தாத்ரி என்றும், ஆண் சிறுத்தைகளுக்கு பவான், கௌரவ், சௌவ்ர்யா என்றும் மறுபெயரிடப்பட்டது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த சிறுத்தைகளுக்கு தக்சா, நிர்வா, வாயு, அக்னி, காமினி, தேஜாஸ், வீரா, சுராஜ், தீரா, உதய், பிரபாஸ், பவாக் என்று மறுபெயரிடப்பட்டது.

வாழ்விடம்

மத்திய பிரதேசத்திலுள்ள குனோ தேசிய பூங்கா ஏறத்தாழ 750 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. இது நன்கு பசுமையான வெளிகொண்ட பூங்கா. ஆப்பிரிக்க புல்வெளிகளோ பழுப்பு நிறமானவை. இந்தப் பூங்காவில் சீட்டா என பொதுவாக அறியப்படும் சிறுத்தைகளை உலாவ விடுவதற்காக, ஏற்கனவே இங்கே வாழும் லெப்பர்டு வகை சிறுத்தைகளை பிடித்து அகற்றும் பணி நடந்தது. குனோ தேசிய பூங்காவில் 100 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு 9 லெப்பர்டு வகை சிறுத்தைகள் என்ற வீதத்தில் வாழ்வதாக கூறப்பட்டது. ஆனால் வருகின்ற சீட்டா எனப்படும் சிறுத்தைகள் மிகவும் குறைந்த அடர்த்தியான எண்ணிக்கையில் வாழக்கூடியவை. அதாவது 100 சதுர கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையே அவற்றுக்குப் பொருத்தமானது.

ஆனால், 500 ஹெக்டேர் பரப்பில் 12 கி.மீ. நீளமும் 9 அடி உயரமும் கொண்ட பெரிய வேலியடைத்து, அந்தப் பகுதியை புதிதாக வரும் சிறுத்தைகள் மட்டும் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சுற்றுவேலியானது எட்டுப் பகுதிகளாக பிரிக்கப்பட்டு, நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 சிறுத்தைகளும் இடத்திற்கு பழகும்வரை அவற்றை பாதுகாக்க திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் 0.7 ச.கிமீ முதல் 1.1 ச.கிமீ பரப்பு கொண்டதாக அமைந்துள்ளது. சிறுத்தைகளின் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 38 கோடியே 70 லட்சம் ரூபாயில், சுற்றுவேலிக்கு மட்டும் 6 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. அதன்படி ஆண் சிறுத்தையும், பெண் சிறுத்தையும் அருகருகே ஆனால் வெவ்வேறு பகுதிகளில் அடைக்கப்பட்டிருந்தது. அவை சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படும்போது ஒன்றையொன்று அறிந்ததாக இருக்கும் என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது.

இடம் போதாமை

ஆப்பிரிக்காவில் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலுள்ள சிறுத்தைகள் ஆசிய சிறுத்தைகளைக் காட்டிலும் சற்றுப் பெரியவையாக இருக்கும். ஆனாலும், தோற்றத்தைக் கொண்டு ஆப்பிரிக்க, ஆசிய சிறுத்தைகளை வேறுபடுத்துவது எளிதானதல்ல. இடப்பெயர்வு செய்யப்படும் சிறுத்தைகள் சந்திக்கும் அடிப்படை சவால், வாழ்விடம் குறுகியதாக அமைவதாகவே இருக்கும். ஆப்பிரிக்காவில் அவை அவ்வாறே வாழ்கின்றன. ஆனால், இந்தியாவில் அவை சுதந்திரமாக உலாவி வாழ்வதற்கு போதுமான இடம் இல்லாத நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிக இரை இருக்கிற இடமாக இருக்கிறபடியினால் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் வாழ முடியும் என்று எண்ணி இப்படிச் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகளை கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பது நல்லது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பரப்பளவு குறைந்த குனா தேசிய பூங்காவில் சிறுத்தைகளை சுதந்திரமாக உலவவிடுவது பூங்காவின் எல்லையை தாண்டி அவை அக்கம்பக்கத்து கிராமங்களுக்குள் புகுவதற்கு காரணமாகிவிடும் என்று நமீபியாவின் சிறுத்தைகள் ஆராய்ச்சி திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

சிறுத்தைகளை கண்காணிப்பதற்கு அவற்றின் கழுத்தில் மின்னணு உபகரணத்தை பொருத்தினாலும் அவற்றை வனத்தில் விட்டபிறகு தடுப்பது இயலாது என்றும், சிறுத்தைகள் பெருகும்போது அவை அண்டை மாநிலமான ராஜஸ்தானுக்குள் செல்லும் ஆபத்து இருப்பதாகவும் முன்னரே வனவிலங்குகள் குறித்த ஆர்வலர்கள் எச்சரித்திருந்தனர்.

லெப்பர்டு என்னும் சிறுத்தைப்புலிகள்

லெப்பர்டு என்ற சிறுத்தை இனம், சிறுத்தைப்புலி என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் அறிவியல் பெயர் பான்தெரா பார்டஸ் பியூஸ்கா ஆகும். இந்தியாவில் 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரையிலான லெப்பர்டுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. 1994 முதல் 2010 என்ற காலகட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 3,000 சிறுத்தைப்புலிகள் வேட்டையாடப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆண் சிறுத்தைப்புலிகள் 127 முதல் 142 செ.மீ உயரமும் 50 முதல் 77 கிலோ எடையும், பெண் சிறுத்தைப்புலிகள் 104 செ.மீ. முதல் 117 செ.மீ. உயரமும் 29 முதல் 34 கிலோ கிராம் எடையும் கொண்டிருக்கும். இவற்றின் உடலில் பூப்போன்று பிரிந்திருக்கும் புள்ளிகள் காணப்படும். லெப்பர்டு வகை சிறுத்தைப்புலிகள் நன்கு மரம் ஏறக்கூடியவை. இவை மழைக்காடுகள், தட்பவெப்ப காடுகள் உள்ளிட்ட எல்லாவகை வனங்களிலும் வசிக்கக்கூடியவை. இவை இரவில் மரங்களில் தங்கி, பகலில் இறங்கி வேட்டையாடும். தாங்கள் வேட்டையாடிய இரையை பெரும்பாலும் மரத்திற்கு மேலே தூக்கிச் சென்று உண்ணும் வழக்கம் கொண்டவை. சிறுத்தைப்புலிகள் மான், காட்டுப்பன்றி, கால்நடைகள், முயல், நாய், முள்ளம்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும்.

இவற்றின் கால்கள் குட்டையாக இருக்கும். தலை பெரிதாக இருக்கும். முன்கால்களின் மேலே தசைப்பகுதி இருக்கும். இதை அதிக வலிமை கொண்டவை.

சீட்டா என்னும் சிறுத்தைகள்:

இவற்றின் கால்கள் நீளமானவை. ஒல்லியான உருவம் கொண்டவை. புள்ளிகள் அடர்த்தியாக காணப்படும். இவை இரையை துரத்திச் சென்று பிடிக்கக்கூடியவை. ஆகவே, வேகத்திற்கு சிறுத்தையையே உதாரணம் கூறுவர். பூமியில் வாழும் பாலூட்டிகளில் அதிக வேகமாக ஓடக்கூடியது சீட்டா என்னும் சிறுத்தை ஆகும். மணிக்கு 120 கி.மீ. வேகத்தை எட்டக்கூடியது. ஆண் சிறுத்தைகள் 54 கிலோகிராம் எடை கொண்டவை. ஆண் சிறுத்தையின் உடல் 120 செ.மீ. வரை உயரம் கொண்டது. சீட்டா என்னும் சிறுத்தையின் தலை, லெப்பர்டு என்னும் சிறுத்தைப்புலியின் தலையைக்காட்டிலும் சிறிதாக காணப்படும். சிறுத்தையின் முகத்தில் மேலிருந்து கீழாக மூக்கின் இருபக்கமும் கோடு காணப்படும்.

சிறுத்தைகள் உயிரிழப்பு:

நமீபியாவிலிருந்து 8 மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 ஆக மொத்தம் 20 சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவினுள் விடப்பட்டன. 2023 மார்ச் 27ம் தேதி சாஷா என்ற பெண் சிறுத்தை சிறுநீரக கோளாறால் இறந்தது. தென் ஆப்பிரிக்காவில் கொண்டு வரப்பட்ட ஆண் சிறுத்தையான உதய், ஏப்ரல் மாதம் இருதய கோளாறால் உயிரிழந்தது. இரண்டு ஆண் சிறுத்தைகளுடனான சண்டையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த பெண் சிறுத்தை தக்சா மே மாதம் தொடக்கத்தில் உயிரிழந்தது.

ஜ்வாலா என்ற நமீபிய சிறுத்தை 2023 மார்ச் மாதம் 4 குட்டிகளை போட்டது. அவற்றுள் 3 இறந்துவிட்டன. அவை உடல் பலவீனமாக இருந்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

“சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தது துர்வாய்ப்பானது. ஆனாலும் சிறுத்தை குட்டிகளின் எதிர்பார்க்கப்படுகின்ற எண்ணிக்கைக்குள்தான் இவை அடங்குகிறது. குட்டிகள் மரணமடைவது, அதுவும் காட்டில் இருக்கும் சிறுத்தை குட்டிகள் மரணம் அடைவது அதிகம். காடுகளில் இருக்கக்கூடிய சிறுத்தைபோன்ற உயிரினங்களில் சிறுத்தையே அதிகமாக குட்டிகளை ஈனும். உயிரிழக்கும் குட்டிகள் தவிர, மற்ற குட்டிகள் சமநிலையை பேணும் எண்ணிக்கையில் இருப்பதற்காகவே சிறுத்தை அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனும்படி இயற்கை அமைத்துள்ளது. இந்தச் சிறுத்தைக் குட்டிகள் உடலில் நீர்ச்சத்து குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒரே தாயின் குட்டிகளில் வலிமையானவை அதிக பாலை பருகிவிடும். வலிமை குறைந்த குட்டிகள் இறப்பது இயற்கை நியதி,” என்று தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சிறுத்தை பராமரிப்பு வல்லுநர் கூறியுள்ளார்.

ஜூலை மாதம் 11ம் தேதி தேஜாஸ், 14ம் தேதி சுராஜ், ஆகிய இரண்டு சிறுத்தைகள் உயிரிழந்தன. அவற்றின் இருப்பிடத்தை அறிய உதவுவதற்காக பொருத்தப்பட்டிருந்த ரேடியோ காலரின் காரணமாக நோய் தொற்று ஏற்பட்டதால் இந்த இரண்டு சிறுத்தைகளும் உயிரிழந்ததாக கருதப்பட்டதால், பிரபாஸ் மற்றும் வீரா என்ற இரண்டு ஆண் சிறுத்தைகளும் பிடிக்கப்பட்டு சுற்றுவேலிக்குள் விடப்பட்டன.

ஆகஸ்ட் 2ம் தேதி கடைசியாக தாத்ரி என்ற பெண் சிறுத்தை உயிரிழந்தது. தாத்ரி, நிர்வா ஆகிய இரண்டு பெண் சிறுத்தைகள் சுற்றுவேலிக்கு வெளியே வனத்தில் சுதந்திரமாக உலாவி வந்த நிலையில் தாத்ரி உயிரிழந்துள்ளது. ஆகவே, நிர்வா மட்டுமே தற்போது வெளியே இருக்கிறது. அது எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. மீதி, 7 ஆண், 6 பெண், 1 பெண் குட்டிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இங்கே 4 குட்டிகள் பிறந்தன. அவற்றுள் ஒன்று உள்பட மொத்தம் 9 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. தற்போது 1 குட்டி உள்பட 15 சிறுத்தைகள் உள்ளன.

குறைபாடுகள் காரணமா?

ஜூலை மாதம் 11ம் தேதி, தேஜாஸ் இறந்ததுமே அது குறித்த தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் இறப்பின் உண்மையான காரணத்தை கண்டறிந்து 14ம் தேதி சுராஜ் இறந்ததை தடுத்திருக்கக்கூடும் என்று தென் ஆப்பிரிக்க சிறுத்தை வல்லுநர் ஆட்ரியன் டோர்டிஃப்பே கூறியுள்ளார். தேஜாஸ் இறந்த பிறகு அதன் உடற்கூறு பரிசோதனை ஆய்வுக்காக ஒரு நாள் முழுவதும் காத்திருந்ததையும் தவிர்த்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. குனோ பூங்காவில் விலங்கு பராமரிப்பின் தரநிலையும் விலங்கு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு பணிகளை ஒருங்கிணைத்து வந்த முதுநிலை விஞ்ஞானி ஒய்.வி.ஜாலா ஓய்வுபெறும் நிலை ஏற்படுத்தப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

தேஜாஸ் மற்றும் சுராஜ் ஆகிய சிறுத்தைகள் டிராமடிக் ஷாக் என்னும் அதிர்ச்சியின் காரணமாக இறந்துவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்ன என்பது அதில் குறிப்பிடப்படவில்லை. சுராஜ் என்ற ஆண் சிறுத்தை மற்றும் மூன்று குட்டிகள் வெப்பத்தின் காரணமாக இறந்துபோனதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடியது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள் :

விலங்குகளிலும் உள்ளது ஓரினச்சேர்க்கைப் பழக்கம்! இது இயல்பானதே…இயற்கைக்கு முரணாணதில்லை - ஆய்வு முடிவு...
வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியா...
Fukishima அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் - இது மனித குலத்திற்கு எதிரான மாபெரும் குற...
Nutmeg in Tamil
Quite Meaning in Tamil
உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!
ஓவியம் வரைவது எப்படி..?
இ - சிகரெட் பாதுகாப்பனதில்லை..  அது உங்கள் ஆண்மையை பாதிக்கிறது.. விந்தணுக்களை சுருக்குகிறது.. எச்சரி...
Queries in Tamil 
சின்னச் சின்ன இன்பங்களில் இருக்கு ரகசியம்! அன்றாடம் அனுபவிக்கும் சிறிய இன்பங்கள் மூளை செயல்பாட்டை மே...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *