படைப்பாற்றலில் கற்பனைத்திறனில் மனிதனை மிஞ்சும் சாட்ஜிபிடி (ChatGPT)!! ஆகச்சிறந்த படைப்பாளிகள் கூட சாட்ஜிபிடி முன்னே நிற்க முடியாதாம் மக்களே!!

கடந்த சில நாட்களாக எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சாட் ஜிபிடி (ChatGPT) பற்றியே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. புரோகிராமர்கள், வரைபடக்கலைஞர்கள் போன்ற ஆகச்சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களைக் கூட இந்த சாட்ஜிபிடி வேலையை விட்டு அனுப்பிவிடும் என்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
இப்பொழுது நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வொன்று சாட்ஜிபிடி ஆனது கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலில் மனிதர்களை விஞ்சி நிற்கிறது என்று அறிவித்துள்ளது.
படைப்பாற்றால் குறித்த புதிய ஆய்வு
மொன்டானா பல்கலைக்கழகம் சமீபத்தில் புதிய ஆய்வு ஒன்றை நடத்தியது. கிரியேட்டிவ் திங்கிங்கின் டோரன்ஸ் சோதனை (Torrance Tests of Creative Thinking – TTCT) என்பது மனிதர்களின் படைப்பாற்றலை மதிப்பிட நடத்தப்படக்கூடிய சோதனையாகும். இந்த பரிசோதனையை சாட் ஜிபிடிக்கு வழங்கி பரிசோதித்தனர்.
மேலும் அவர்கள் அதே தரத்திலான சோதனையை 24 மொன்டானா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அளித்து பதில்களைப் பெற்றனர். அந்த மதிப்பெண்கள் TTCT தேசிய அளவில் 2,700 மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையுடன் ஒப்பிடப்பட்டது.
டோரன்ஸ் டெஸ்ட் என்றால் என்ன?
TTCT (Torrance Tests of Creative Thinking) ஒரு குழந்தையின் மனம் எவ்வளவு ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறது என்பதை மதிப்பிடுகிறது,
மற்ற நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு சோதனைகளிலிருந்து இந்த டோரன்ஸ் தேர்வுகள் மிகவும் வேறுபட்டவை. வாசிப்பு அல்லது கணிதம் போன்ற பாரம்பரியமாக கற்பிக்கப்படும் பாடங்களுக்கு பதிலாக, இந்த சோதனைகள் படைப்பாற்றலை மதிப்பிடுகின்றன. கீழ்காணும் விதத்தில் ஆய்வு செய்யப்படுகின்றது.
- படங்களுக்கான ஆக்கப்பூர்வமான தலைப்புகள்
- வெளிப்பாடுகள்
- படத்தொகுப்பு
- மற்றும் நகைச்சுவை
ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவுகள்!
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சாட்ஜிபிடியின் பதில்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், உண்மையான நபர்களின் பதில்களைப் போலவே ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
உண்மையில், ChatGPT ஆய்வில் பங்குபெற்ற பெரும்பான்மையான மாணவர்களை விஞ்சியதாம்.
ஆய்வாளர்களில் ஒருவரும், மொன்டானாவின் வணிகக் கல்லூரியின் உதவி மருத்துவப் பேராசிரியருமான எரிக் குசிக் கூறுகையில், சில பதில்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தன என்கிறார்.
TTCT இரண்டு வெவ்வேறு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது: ஒரு வாய்மொழி மற்றும் படங்கள். இரண்டுமே மாறுபட்ட சிந்தனை அல்லது ஆக்கப்பூர்வமான யோசனைகளை உருவாக்கப் பயன்படும் சிந்தனை செயல்முறையை அளவிடுகின்றன.
வாய்மொழி மதிப்பீட்டில் ஒரு செய்தி படமாகவோ அல்லது வாய்மொழித் தரவாகவோ வழங்கப்படுகின்றது. அதற்கு மாணவர்கள் எழுத்து வடிவில் பதிலளிக்கும்படி கேட்கப்படும்.
எடுத்துக்காட்டாக, ஒரு நிகழ்வின் படம் அவர்களுக்குக் காட்டப்பட்டு, அதன் விளைவுகளை வெளிப்படுத்தச் சொல்லலாம்.
வரைபட மதிப்பீட்டில் தேர்வாளர் தங்கள் பதில்களை வரைய வேண்டும். உதாரணமாக, அவர்கள் ஒரு படத்தை முடிக்கும்படி கேட்கப்படலாம்.
இத்தகைய சோதனைகள் அவர்கள் எவ்வளவு சரளமாக மற்றும் விரிவாக ஒரு விசயத்தைப் படைக்கிறார்கள் என்று ஆராயப்படுகிறது. அவர்களது வெளிப்பாடுகள் எந்த அளவிற்கு உண்மைத் தன்மையுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கின்றன என்று பார்க்கப்படுகிறது.
ஆய்வு முடிவு தெரிவிப்பதென்ன?
ஆய்வில், சாட்ஜிபிடி அளித்த பதில்கள் சரளமாகவும் அசல் தன்மையுடையதாகவும் இருந்தன.
″நாங்கள் அனைவரும் சாட்ஜிபிடி மூலம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பார்க்காத சில சுவாரஸ்யமான விஷயங்களை அது செய்து கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம்” என்று குசிக் கூறுகிறார்.
“சில பதில்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தன. அது உண்மையில் எவ்வளவு ஆக்கப்பூர்வமானது என்பதைப் பார்க்க அதை சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்தோம். உண்மையில் அது ஆகச்சிறந்த படைப்பாற்றல் மிக்க 1% மாணவர்களை விஞ்சிவிட்டது” என்று தெரிவித்தார்.
இனி வரும் தலைமுறைக்கு போட்டியானது தனது சக மனிதர்களோடு மட்டுமல்லாது இது போன்ற செயற்கை நுண்ணறிவு செயற்பொறிகளோடும் இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு ஓவியத்தையோ, சிலையையோ அல்லது ஒரு சிறுகதையையோ நாம் ரசிக்கும்போது அதை உருவாக்கியவர்களது உணர்வைத்தான் மறைமுகமாக ரசிக்கிறோம்.
ஒரு நல்ல கலைஞன் தனது கலை ரசிக்கப்படுவதைக் கண்டு மனம் மகிழ்வான். இந்த சாட்ஜிபிடிக்கு அதுவும் தெரியாது என்பதுதான் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்படும் கலையை – படைப்பை ரசிப்பதற்கு இனி நம்மை நாமே தயார் செய்துகொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது.