ஆப்பிள் நிறுவனம் சொன்னது இதுதான். சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பக்கத்தில் படுக்கலாமா?

செய்தி சுருக்கம்:
ஆப்பிள் ஐபோன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல். இனி சார்ஜ் போட்டிருக்கும் செல்போன் பக்கத்தில் படுத்து தூங்காதீங்க.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
“தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம்பேறி என்ற பெயர் வாங்கதே” என்ற பாடல் வரிகள் அந்த காலத்தில் மிகவும் பிரபலமானது. அதை இன்று பாடினால், “தூங்காதே தம்பி தூங்காதே, நீ மொபைல் போன சார்ஜ் போட்டு, பக்கத்தில் படுத்து தூங்காதே ” என்று தான் பாட வேண்டும். ஏன் என்றால் அது உங்களுக்கே புரியும்.
பின்னணி:
காலையில் விழித்தவுடன் உள்ளங்கையைப் பார்த்த நாம் இப்போது அதற்கு மேலே மொபைல் போனை வைத்துப் பார்க்கிறோம். கொஞ்சம் தள்ளி இருந்தாலும் எடுப்பதற்கு சிரமமாக இருக்குமே என நினைத்து மொபைல் போனை படுக்கைக்கு பக்கத்திலே (செல்)லமாக வைத்துககொள்கிறோம்.
நாள் முழுவதும் சார்ஜ் நீடித்து நிற்கவேண்டும் என்பதால் இரவு முழுவதும் போனை சார்ஜில் போட்டுவிடுவர் சிலர். இன்னும் பலர் தூங்குவதற்கு முன் சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனை பயன்படுத்திவிட்டு அப்படியே தூங்கிவிடுவர். இப்படி சார்ஜ் எறிக்கொண்டு இருக்கும் செல்போன்களால் ஆபத்து ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கு? இதுவரை சரியான தகவல் இல்லாமல் இருந்தது. ஆங்காங்கே அரங்கேறிய அசம்பாவிதத் தகவல்களை மட்டுமே நாம் கேட்டிருப்போம் அல்லது பார்த்திருப்போம்.
எடுத்துக்காட்டிற்கு, பல இடங்களில், சார்ஜ் போட்டுக்கொண்டே பயன்படுத்திய செல்போன் வெடித்தது என்னும் தகவல் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எந்த ஒரு செல்போன் நிறுவனமும் இதுவரை அறிவித்ததில்லை. அப்படி அறிவித்தால், எங்கே பிராண்டின் மீது உள்ள நம்பிக்கை மக்கள் மத்தியில் போய்விடுமோ என பயந்து அதைப்பற்றி அமைதி காத்து வந்தன, பிரபல செல்போன் நிறுவனங்கள்.
இதன் தொடர்ச்சியாக, செல்போன் பிராண்டுகளின் சொகுசு அரசன் என வருணிக்கப்படும் ஆப்பிள் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது என்னவென்றால், சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் ஐபோன் அருகில் பயனர்கள் படுத்து உறங்கவேண்டாம் என்பதே அது.
இந்த அறிவிப்பு ஐபோன் பயனாளர்களுக்கு மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது, அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இனி சார்ஜர்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தரப்போவதில்லை எனும் செய்தி ஐபோன் நுகர்வோர்களுக்கு அதிர்ச்சியளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சார்ஜ் எறிக்கொண்டிருக்கும் ஐபோன் அருகில் படுத்து உறங்கவேண்டாம் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
அதைத் தவிர சார்ஜ் போடும் சில வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஒரு ஆப்பிள் ஐபோனை தரையிலோ அல்லது சமமான மேஜை மீதோ வைத்து தான் சார்ஜ் ஏற்ற வேண்டுமாம். முக்கியமாக! மிருதுவான பொருட்கள் (தலையணை, சோபா, படுக்கை) மீது வைத்து சார்ஜ் செய்ய கூடாது என சொல்லியிருக்கிறது.
ஐபோனில் சார்ஜ் ஏற்றும்போது அலைபேசியின் மின்கலம் (பேட்டரி) வெப்பமடைகிறது. இதனை நீங்கள் தலையானைக்கு அடியிலோ அல்லது உங்கள் உடம்பின் மீதோ வைக்கும்போது எதிர்பாரா விபரீதங்கள் நடக்கக்கூடும். எனவே இதனைத் தவிர்க்கவே ஆப்பிள் நிறுவனம் அவ்வாறு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல சமமான தரைதளத்தில் நல்ல காற்றோட்டமான இடமாகப் பார்த்து ஐபோனை சார்ஜ் போடுமாறு ஆப்பிள் நிறுவனம் தன் பயனாளர்களுக்கு வலியுறுத்துகிறது. இவ்வளவு காலமாக இல்லாத இந்த எச்சரிக்கை மணியை ஆப்பிள் தற்போது அடித்துள்ளது வரவேற்கத்தக்கது ஆகும்.
இது ஆப்பிள் ஐபோனிற்கு மட்டுமல்லாமல் எந்த ஒரு மொபைல் போனிற்கும் இந்த அறிவுரை பொருந்தும். செல்போன் என்பது தகவல்களை விரைவாக பரிமாறிக்கொள்ளவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதனைக் கடந்து இன்று தொட்டதற்கெல்லாம் போனை கையில் எடுக்கும் நிலமை உருவாகிவிட்டது. எவ்வளவு பாதுகாப்பானது என்று கூறப்பட்டாலும் செல்போனை அளவுடன் பயன்படுத்துவதே சாலச் சிறந்ததாகும்.
எனவே, செல்போனில் சார்ஜரை செருகிக்கொண்டே இக்கட்டுரையைப் படிக்கும் வாசகர்களே தயவுகூர்ந்து திருந்துங்கள். உங்களுக்கு பிடித்தமான நண்பர்களுக்கும், குடும்ப வாட்ஸ் ஆப் உறுப்பினர் குழுவிற்கும் இக்கட்டுரையை மறக்காமல் ஷேர் செய்துவிடுங்கள்.