சந்திராயன்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது, பின்னணியில் தமிழக ரயில்வே தொழிலாளியின் மகன் விஞ்ஞானி வீர முத்துவேல்.

செய்தி சுருக்கம்:
கடந்த வெள்ளியன்று (14-07-2023) இந்தியாவின் சார்பாக நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திராயன்-3 என்று பெயரிடப்பட்ட விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. GSLV MK3 ரக ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35pm க்கு ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலத்துடன், நிலவில் தரையிறங்கும் போது வழங்கப்படும் சிக்னலை கையாளும் “விக்ரம்” என்று அழைக்கப்படும் Moon Lander இயந்திரமும், நிலவின் பகுதிகளை ஆராயவும், நிலவின் மேற்பரப்பில் உலாவி தரவுகளை சேகரிக்கவும் பயன்படும் “Pragyan” என்று அழைக்கப்படும் Rover ம் இடம்பிடித்து உள்ளன. “Geosynchronous Space Launch Vehicle” GSLV தான் ISRO வின் மிகப்பெரிய ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் ஏவுகணை ஆகும். இது பூமியில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டு விண்கலத்தை நிலவின் சுற்றுப்பாதையில் இறக்கி விட உபயோகப்படுத்தப்படும் வாகனம் ஆகும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
Dr. P வீர முத்துவேல் என்ற பெயர் இனி இந்திய வானியல் அரங்கில் மட்டுமல்லாது உலக விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் அனைத்தும் உச்சரிக்கப் போகின்ற பெயராக ஆகியுள்ளது. தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த வானியல் விஞ்ஞானி இந்த வீர முத்துவேல், சந்திராயன்-3 செயற்கைக்கோள் உருவாக்கத்திலும், செயல்திறனிலும் தலைமை பொறுப்பில் இருந்து இவர் தனது முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
கடந்த ஜூலை 14, வெள்ளிக்கிழமை மதியம் சரியாக 2.35pm மணித்துளிகளில் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது சந்திராயன்-3. இதன் ஆரம்பம் முதல் முடிவு வரை முழுமையாக தன்னை முதன்மை இயக்குனராக அர்ப்பணித்து இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியவர் இந்த வீர முத்துவேல் ஆவார்.
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க சந்திராயன்-3 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் திட்டத்தில் மாஸ்டர் மைண்ட் ஆக செயல்பட்ட தமிழரை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தற்போது காணலாம்.
வீர முத்துவேலின் கல்வி:
தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர் வீர முத்துவேல், இவரது தந்தை திரு பழனிவேல் அவர்கள் தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் பணியில் இருந்தவர். முத்துவேல் ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் விழுப்புரத்தில் உள்ள மத்திய அரசுப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிகல் என்ஜினீயரிங் பிரிவில் டிப்ளமா படிப்பை முடித்து வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனாலும் விண்வெளி மீதான இவரது ஆர்வமும், வின்வெளித்துறையில் ஏதாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்கிற இவரது கனவும் முத்துவேலை செய்து கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்க வைத்தது. முதலில் தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் தனது என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடித்து விட்டு, சென்னை ஐஐடி கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்தார். அங்கு பயிலும் போது முத்துவேல், விண்கலம் ஏவுவது தொடர்பான Aerospace பிரிவில் தன்னுடைய மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.
இஸ்ரோவில் வீர முத்துவேல்:
ராக்கெட் உபகரணங்களின் சிக்கலான Hardware அமைப்புகளில் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டை கொண்டிருந்த முத்துவேல், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் முழு முனைப்புடன் செயல்பட்டு வந்தார். அப்போது 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்புக்கு விஞ்ஞானியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிடைத்த இந்த சிறந்த வாய்ப்பை நழுவ விடாமல் உடனடியாக இஸ்ரோவில் இணைந்தார். முத்துவேலுக்கு அவரின் ஆய்வுக்கட்டுரை காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பலவும் வேலைவாய்ப்பை வழங்க தயாராக இருந்தன, ஆனாலும் அவற்றை ஏறெடுத்தும் பார்க்காமல் இஸ்ரோவில் இணைந்தார். அவரது கனவாக இருந்த இஸ்ரோவில் வேலை என்னும் அவரது லட்சியத்தை அடைந்தார். தற்போது சந்திராயன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள அனைத்து Hardware நுணுக்கங்களையும் நம் தமிழ்நாட்டின் மெக்கானிக்கல் என்ஜினீயர் வீர முத்துவேல் அவர்களே முன்னின்று வடிவமைத்துள்ளார் என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயமே.
சந்திராயன்-3 திட்ட இயக்குநராக:
இஸ்ரோவின் பல விதமான ஆய்வுகளில் ஈடுபட்டும், பல்வேறு புராஜக்ட்களில் பல பொறுப்புகளில் இருந்தும், மொத்தமாய் 30 வருட இஸ்ரோ அனுபவத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் வீர முத்துவேலுக்கு சந்திராயன்-3 செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குனராக 2019 ஆம் ஆண்டில் பணி நியமன உத்தரவு கிடைத்துள்ளது. அவருக்கு அரசு இட்ட பணியை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இத்திட்டத்தின் இயக்குனராக இருந்த கவிதா என்கிற விஞ்ஞானி வேறு திட்டத்திற்கு மாற்றப்பட்டு வீர முத்துவேலுக்கு இந்த பதவி வழங்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
பின்னணி:
கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-3 செயற்கைக்கோள், முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட GSLV MK3 நவீனரக ராக்கெட்டினால் சுமந்து செல்லப்பட்டு நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. நம் இந்திய விஞ்ஞானிகளின் திறமையை உலகுக்கு தெரிய வைத்த நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
அந்த விண்கலம் தன்னுள் Moon Lander எனப்படும் அதிநவீன தரையிறக்கும் விக்ரம் எனும் இயந்திரமும், அதனுடன் நிலவின் தரைப்பரப்பில் ஓடக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட Pragyan என்கிற தானியங்கி Rover ஒன்றினையும் கொண்டுள்ளது. இந்த Rover மூலமாக தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், மேலும், அவை எடுக்கும் படங்களும் தகவல்களும் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த விண்வெளி சாகசத்தில் அடங்கியுள்ள அனைத்து விதமான Hardware உபகரணங்களும் நம் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் வடிவமைக்கப் பட்டுள்ளன. பூமியிலிருந்து செலுத்தப்படும் கட்டுப்பாட்டு சிக்னல்கள், தகவல் பரிமாற்ற சிக்னல்கள் போன்றவற்றிக்கு மிக துல்லியமாக பதிலளிக்கும் வகையில் இதன் செயல்பாடு இருக்கும் என தெரிகிறது. வானத்தை தாண்டிய விண்வெளிப் பயணங்களில் இந்தியாவும் தன்னுடைய தனித்த முத்திரையை பதித்து வருகிறது என்பதற்கு மங்கள்யான், சந்திராயன் போன்ற செயற்கைக்கோள்கள் முக்கிய சாட்சியாக இருக்கின்றன.