ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்பட்டு ஆகஸ்ட் 23 அன்று சந்திரனை அடையும் சந்திராயன் 3..!! இஸ்ரோ தலைவர் அறிவிப்பு.

செய்தி சுருக்கம்:
இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியான சந்திராயன்-3 எதிர்வரும் ஜூலை 14ஆம் தேதி மதியம் 2 35க்கு விண்ணில் ஏவப்பட்டு – அனைத்தும் சரியாக நடந்தால் – ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும். சந்திராயன் நிலவில் தரையிறங்கும் தேதி நிலவில் சூரிய உதயத்தை பொறுத்து அமைகிறது. ஒருவேளை சந்திரனில் சூரிய உதயம் தாமதமானால் செப்டம்பர் மாதத்தில்தான் தரையிறங்க இயலும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இந்தியாவின் விண்வெளி சாதனைகள் குறித்த செய்திகள் வெளியாகும் போதெல்லாம் நம் உள்ளம் பெருமிதத்தில் பூரிப்பது இயல்பு. மறைந்த இந்திய ஜனாதிபதி, மூத்த விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களது நினைவும் அப்போது நமக்கு வந்து செல்லும். பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு ராஜ்யத்தை உருவாக்கியவர்கள் நமது இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பினர்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஜி-20 ப்ரெசிடென்சியின் ஒரு பகுதியான விண்வெளி பொருளாதாரத் தலைவர்கள் சந்திப்பில் இஸ்ரோ தலைவர் சந்திராயன்-3 குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறும் பொழுது “ எங்கள் முக்கிய நோக்கம் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கம். அனைத்து உபகரணங்களும் சரியாக இயங்கினால் இது சாத்தியமாகும். தரை இறங்கியவுடன் ரோவர் வெளியே வரும். ரோவருக்கு ஆறு சக்கரங்கள் உள்ளன. சந்திரனில் ரோவர் 14 நாட்கள் வேலை செய்யும். ரோபரில் உள்ள பல கேமராக்களை கொண்டு நாம் துல்லியமான படங்களைப் பெற முடியும். ரோவரில் சோலார் பேனல் உள்ளது. அது நல்ல பலனைத் தந்து கொண்டிருக்கிறது.” என்றார்.
இந்த கூட்டத்தில் விண்வெளி ஏஜென்சிகள், வணிக ரீதியான நிறுவனங்கள் ஸ்டார்ட் ஆப்புகள் போன்றவற்றின் இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
விண்வெளி பொருளாதாரத்தின் உள்ள முக்கிய சவால், ஒரு குறிப்பிட்ட திறனை உருவாக்க மிக அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். ஆனால் அதற்கான பலன் மிக தாமதமாகவே வருகிறது.
மேலும் அவர் கூறுகையில் “எங்களிடம் ஒரு மாணவர் மேம்பாட்டு திட்டம் உள்ளது. இத்திட்டம் இளம் மாணவர்களுடைய அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி தொழில்நுட்பம், காலநிலை மாற்றங்கள், விவசாய அறுவடை, உணவுப் பாதுகாப்பு, இயற்கை பேரழிவுகள், மற்றும் வறட்சி போன்றவற்றில் முன் கணிப்பை கொண்டுவர முடியும். இந்த காரணிகள் வளரும் நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை உருவாக்கி வருகின்றன.
இந்த கூட்டத்தின் முதல் நாளில் 27 நாடுகள் மற்றும் 33 தொழில் துறைகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அனைத்தும் சரியாக நடந்து சந்திராயன்-3 வெற்றிகரமான தரையிறங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நமது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.