நிலவின் தென் துருவத்தில் இரவு தொடங்கியது – பிரயாணக்களைப்பு தீர 18 நாட்கள் ஓய்வெடுக்க போகும் சந்திராயன்-3


செய்தி சுருக்கம்:
நிலவின் தென்பகுதியில் தற்போது இரவு சூழ்வதால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டுமே ஸ்லீப் மோடுக்கு செல்கின்றன. இதனால் நிலவின் மீதான ஆய்வுப்பணிகள் தற்காலிகமாக முடிவடைந்துள்ளது. ஆனாலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய இந்த இயந்திரங்கள் நிலவின் தென் துருவத்தில் சூரியன் உதயமானதும் விழித்தெழுந்து பணிகளை விட்ட இடத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலாவின் இரவு நேரங்களில் அங்கு உருவாக்கக்கூடிய அதிகபட்ச குளிரால் இயந்திரங்களின் பாகங்களில் பழுது ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் உறக்க நிலைக்கு சென்று தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. அவற்றின் எலக்ட்ரானிக் சங்கதிகள் அதிகபட்ச குளிரால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால் இந்த முடிவினை எடுத்துள்ளதாக ISRO தகவல். எனவே தற்காலிகமாக சந்திராயன் மூன்றின் ஆராய்சிப்பணிகள் நிறைவடைந்துள்ளது. இதைப்பற்றி ISRO விஞ்ஞானிகள் கூறும்போது “இன்னும் இரண்டு வாரங்களில் நிலவின் தென் பகுதியில் சூரியன் உதயமானதும் இந்த இரு இயந்திரங்களும் தாமாகவே உயிர்ப்பு நிலைக்கு வந்து செயல்பட துவங்கும்” என்று உறுதியாக கூறியுள்ளனர்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
உலகமே வியந்து பார்க்கும் இந்த சந்திராயன் -3 திட்டப்பணிகளில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இறங்கியது, இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் உலகின் முதல் நாடாக இந்தியா இடம் பிடித்தது. அன்றைய தினம் லேண்டரில் இருந்து பிரிந்த 26 கிலோகிராம் எடை கொண்ட பிரக்யான் ரோவர் அதன் ஆறு சக்கரங்களை கொண்டு நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சில ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ரோவரும், லேண்டரும் சூரிய ஒளியின் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்து இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. லேண்டர் நிலவில் இறங்கியது முதல் இன்று வரை மொத்தம் 14 பூமி நாட்கள் அந்த பகுதியில் சூரிய ஒளி இருந்தது, தற்போது அப்பகுதியில் இரவு சூழ்ந்து வருவதால் மீண்டும் அங்கே சூரியன் உதயமாகும் வரை இந்த இரண்டு இயந்திரங்களும் உறக்க நிலைக்கு செல்கின்றன.
நிலவில் தரையிறங்கிய நாளில் உடனடியாக செயல்பட துவங்கிய சந்திராயன் -3 வின்கலத்துடன் இணைத்து அனுப்பப்பட்ட வெவ்வேறு விதமான ஆய்வு உபகரணங்கள் மூலமாக எடுக்கப்பட்ட பல்வேறு புதிய ஆய்வு முடிவுகளை பூமிக்கு அனுப்பி வைத்தது. விக்ரம் லேண்டர் சுமந்து கொண்டிருக்கும் ChaSTE என்கிற உபகரணம் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆராயவும், ILSA எனும் உபகரணம் நிலவின் மேற்பரப்பு அதிர்வுகளை ஆராயவும் இந்த திட்டத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. இவை பல்வேறு விதமான அறிவியல் சங்கதிகளை ஆய்வு செய்து அதன் தரவுகளை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளன.
ISRO வெளியிட்டுள்ள டிவீட்டில் விக்ரம் லேண்டர் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட “hop” எனப்படும் சிறிய அளவிலான குதிக்கும் சோதனை வெற்றிகரமாக முடிந்தது என்றும், இதில் தரையிறங்கிய இடத்தில் இருந்து 40cm அளவு மேலே எழும்பி 30cm – 40cm தூரம் நகர்ந்து மற்றொரு இடத்தில் மீண்டும் சரியாக தரையில் இறக்கப்படுள்ளது. இந்த சோதனையின் போது பூமியில் இருந்து அனுப்பப்பட்ட சிக்னல்கள் மூலமாக விக்ரமின் என்ஜின் இயக்கப்பட்டது, இந்த சோதனையை வீடியோ படமெடுத்த Pragyan அதனை பூமிக்கு அனுப்பியது, அதில் என்ஜின் இயக்கப்படதால் உருவான புகை மற்றும் தூசிகளால் ஆரம்ப காட்சிகள் தெளிவாக தெரியாவிட்டாலும், விக்ரம் சற்றே குதித்து அருகில் வேறொரு இடத்தில் வெற்றிகரமாக இறங்கியது தூசிப்படலம் அடங்கிய பின்னர் தெளிவாக தெரிகிறது.
இந்த “hop” சோதனையை பற்றி ISRO கூறுவது, இதன்மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களை தரையிறங்கும் வழிமுறை மற்றும் விண்கலத்தை இறக்கிய பின்னர் லேண்டரை பூமிக்கு திருப்பி கொண்டுவருதல் போன்றவற்றின் சாத்தியக்கூறுகளை நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது, மேலும் விண்வெளியில் உள்ள கோள்களிலும், துணைக்கோள்களிலும் சரியாக தரை இறங்குவது மற்றும் ரோவரை இறக்கியபின்பு உடனடியாக பூமிக்கு திரும்புவது பற்றியான தகவல்களை இந்த ஆய்வின் மூலமாக அறிந்து கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. 40cm தள்ளி புதிதாக காலூன்றிய இடத்தில் விக்ரம் லேன்டரில் பொருத்தப்பட்டுள்ள ChaSTE மற்றும் ILSA கருவிகள் அந்த புதிய இடத்தின் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் அதிர்வுகளை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது.
செப்டம்பர் 2 ஆம் தேதி நிலவரப்படி Pragyan ரோவர் இதுவரை 100 மீட்டர் தூரத்தை கடந்து ஓடியுள்ளதாக தெரிகிறது, நிலவின் மேடுபள்ளங்களில் சரிந்து விபத்துக்குள்ளகாமல் இருக்க பூமியிலிருந்து இதன் பாதைகளை தீர்மானித்து வழி நடத்துகின்றனர். இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து 8 மணி நேரம் கழித்து தற்போது நிலவின் தென் பகுதியில் சூரிய அஸ்தமனம் ஏற்படுவதால் சந்திராயன் மூன்றின் பணிகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாக ISRO தெரிவித்துள்ளது. சூரியன் இல்லாத இரவு காலத்தில் நிலவின் பகுதிகளில் வெப்பநிலை -238 டிகிரி செல்சியஸ் வரை குறையும், எனவே லேன்டர் மற்றும் ரோவரை ஸ்லீப் மோடிற்கு மாற்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விக்ரமுடன் இணைந்திருக்கும் ChaSTE மற்றும் ILSA கருவிகள் முழுதாக அணைக்கப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பூமிக்கு சரியாக வந்து சேர்ந்துள்ளதாகவும் ISRO தெரிவித்துள்ளது. மேலும், அந்த இயந்திரங்களின் சோலார் பேனல்கள் அடுத்த சூரிய உதயத்தின் போது சூரிய வெளிச்சத்தில் படும்படி சரியான திசையில் வைக்கப்பட்ட பின்னர் ஸ்லீப் மோடிற்கு மாற்றப்பட்டதாக கூறியுள்ளனர். வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி நிலவின் தென் பகுதியில் சூரியன் உதயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதைப்பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி எதுவும் அளிக்காத இஸ்ரோ அதன் டிவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கீழ்கண்ட விளக்கங்களை அளித்துள்ளது. இந்த இரண்டு இயந்திரங்களும் சூரிய வெளிச்சம் கிடைத்தவுடன் விழித்தெழுந்து அடுத்தகட்ட சோதனைகளுக்கு தயாராக இருக்கும் என்று நம்புகிறோம். அப்படி இல்லாவிடில் இந்த லேண்டரும், ரோவரும் அதே இடத்தில் காலாகாலத்திற்கும் இந்தியாவின் அடையாளமாக நின்று கொண்டிருக்கும். தற்போது செயலிழந்து இருக்கும் ரோவரிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் உள்ளது, விரைவில் விக்ரமும் தன் செயல்பாடுகளை நிறுத்தி ஸ்லீப் மோடிற்கு சென்றுவிடும். இதனால் நிலவின் மீதான அத்தனை ஆய்வுகளும் முடிவினை எட்டியுள்ளது, ஆயினும் இந்த இரு இயந்திரங்களும் மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும் போது தாமாகவே உயிர்ப்பித்து கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளோம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பின்னணி:
நிலவின் மேற்பரப்பில் இரவில் உருவாகும் அதிகபட்ச குளிரால் அதன் பாகங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ள சந்திராயன் -3 விரைவில் சூரிய ஒளி கிடைத்ததும் உயிர்பெற்று தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பும் என்று தெரிவித்துள்ளது ISRO.
இதுவரை நிலவின் ஒரு பகலை கடந்துள்ள சந்திராயன் -3, இனி நிலவின் ஒரு இரவு முழுதும் ஓய்வில் இருந்து அங்கு அடுத்த பகல் துவங்கும் போது இயக்கத்திற்கு வந்துவிடும் என்று ISRO தெரிவித்துள்ளது.
இதன் திட்ட இயக்குனர் M. Srikanth அவர்கள் இந்த திட்டத்தின் ஆரம்பகட்டத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த தகவலின் அடிப்படையில் இதன் பொறியாளர்கள் அனைவரும் விக்ரமும், பிரக்யானும் நிலவின் இரவை கடந்து வெற்றிகரமாக உயிர்பெற்று பூமிக்கு தகவல்களை அனுப்பும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இத்தனை தூரங்களையும், தடைகளையும் தாண்டி நிலவில் வெற்றிகரமாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ரோவரும், லேண்டரும் நிலவின் இரவு முடிந்ததும் நிச்சயமாக ஸ்லீப் மோடில் இருந்து வெளிவந்து சிக்னல்களை பூமிக்கு அனுப்பும் என்று தெரிவித்துள்ளார் ஶ்ரீகாந்த். மேலும் அவர், அவ்வாறு விழித்தெழுந்து விட்டால் அது நமக்கு கிடைக்கப்போகும் போனஸ் வெற்றி எனவும், அப்படி இல்லாமல் சூரியன் உதித்த பின்னரும் ஸ்லீப் மோடிலேயே தொடர்ந்தால் இந்த சந்திராயன் மூன்றின் திட்டப்பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
நிலவில் தற்போது விக்ரமும் பிரக்யானும் உள்ள இடத்தில் சூரிய ஒளி வரும் வரை ISRO விஞ்ஞானிகள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். இதுவரை நிகழ்த்தப்பட்ட சோதனைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் மூலமாக இந்த சந்திராயன் மூன்று திட்டப்பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.