fbpx
LOADING

Type to search

அறிவியல் உடல் நலம் பல்பொருள்

கருப்பை புற்றுநோய்க்கான மரபணு சிகிச்சை!

செய்திச் சுருக்கம்

மரபணு ஆய்வில் கருப்பை புற்றுநோய் உண்டாவதற்குக் காரணமான மரபணுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது புதிய சிகிச்சை முறைகளுக்கான எதிர்காலக் கதவுகளைத் திறந்துள்ளது. 

ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?

கருப்பை புற்றுநோயின் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் சில பெண்கள் மற்ற நோயுற்ற பெண்களைக் காட்டிலும் சிறந்த  முறையில் குணமடைவது ஏன் என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது. 

தீவிரமான  கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சில பெண்களின் புற்றுக் கட்டிகள் மூன்றாம் நிலை லிம்பாய்டு கட்டமைப்புகள் அல்லது TLS எனப்படும் ஒரு வகை லிம்பாய்டு திசுக்களைக் கொண்டிருப்பதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். Tumor lysis syndrome (TLS) உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு முக்கியமான HGSOC (High-grade serous carcinoma) இல் உள்ள மரபணுக்களையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

நம் உடலில் உள்ள நிணநீர் மண்டலமானது டி செல்கள் மற்றும் ஆன்டிபாடிகள் போன்ற நோயெதிர்ப்பு செல்களை உற்பத்தி செய்வதன் மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆனால் TLS ஆனது ஒரு வகையில் ‘சாதாரண’ நிணநீர் திசுக்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டது என்று பல்வேறு வகையான கட்டிகளில் நடத்தப்பட்ட  ஆராய்ச்சிகளில் இருந்து தெரியவருகிறது. 

இம்பீரியல் காலேஜ் ஹெல்த்கேர் NHS அறக்கட்டளையின் ஒரு பகுதியான ஹேமர்ஸ்மித் மருத்துவமனையில் 242 HGSOC நோயாளிகளின் கட்டிகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம் ஆராய்ச்சியாளர்கள் சில உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அதாவது, தங்களுக்குள்ள புற்றுநோய் கட்டிகளில் TLS உள்ள பெண்கள் குறிப்பிடத்தக்க அளவில் சிறந்த முறையில் சிகிச்சைக்கு எதிர்வினையாற்றி குணமடைகின்றனர். 

சிகிச்சைக்கு முன்னதாக அவதானித்தல் மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தி கண்காணித்தல் மூலம் குணமாகும் விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், புற்றுக் கட்டிகளில் TLS உள்ள பெண்களுக்கு குறிப்பிடத்தக்க சிறந்த விளைவு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு, தேசிய சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி இம்பீரியல் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தால் நிதியளிக்கப்பட்டது. 

 விஞ்ஞானிகள் தீவிரமான கருப்பை புற்றுநோயால் (HGSOC ) பாதிக்கப்பட்ட பெண்களில் TLS ஐக் கண்டறிந்து அவற்றை ஒரு சிறந்த குணமாகும் விளைவுடன் தொடர்புபடுத்தி அறிவது இதுவே முதல் முறையாகும்.

அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் துறையைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹொனன் லு கூறுகிறார்:

  “அனைத்து புற்றுநோய் செல்களும் மிகவும் வீரியம் மிக்கவை என்று மக்கள் நினைக்கிறார்கள் – ஆனால் அது உண்மையல்ல. இந்த கட்டிகள் மனித உடலின் பல இயல்பான நோயெதிர்ப்பு செயல்பாடுகளை ஏமாற்றக் கூடும். அதே சமயம் இக்கட்டிகள் தனக்குள்ளே சில நிணநீர்  திசுக்களையும் உருவாக்கிக் கொள்கிறது. இத்தகைய  நிணநீர்  திசுக்கள் சில டி செல்களை முதிர்ச்சியடையச் செய்து செயல்படத்தூண்டுகின்றன, இத்தகைய டி செல்கள்  தாம் இருக்கும் புற்றுநோய் செல்களையே தாக்கி அழிக்க வல்லன.”

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 7,500 பெண்கள் HGSOC நோயால் கண்டறியப்படுகிறார்கள், மேலும் இது பெரும்பாலும் காலதாமதமாக கண்டறியப்படுவதால், பல நோயாளிகள் மீண்டும் மீண்டும் நோய் தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர். இது நோயுற்றவர்களில் 40 சதவீதம் பேரின் ஆயுளை ஐந்தாண்டுகள் குறைக்கிறது எனத் தெரிகிறது. புற்றுநோய்க்கு தற்போது அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மரபணு மாற்றங்களைக் கண்டறிதல் 

புற்றுநோயின் TLS உருவாக்கத்தில் தொடர்புடைய மரபணு மாற்றங்களைக் இந்த ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் சில உடலின் இயல்பான நோயெதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. 

HGSOC இல் உள்ள IL15 மற்றும் CXCL10 மரபணுக்களில் உள்ள நகல் எண் பிறழ்வுகள் நிணநீர் திசு உருவாவதைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். DCAF15 உட்பட மற்ற சில மரபணுக்கள், TLS திசுக்கள் உருவான பிறகு அதனுடன் தொடர்புகொள்வதில் பங்கு வகிக்கின்றன, மேலும் அவை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படுகின்றன.

டாக்டர் லூ கூறினார்: “இந்த மரபணுக்களை மேலும் ஆராய்வது கருப்பை புற்றுநோய் சிகிச்சையில் பல புதிய வழிகளைக் கண்டறியும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது. புற்றுக் கட்டிகளின் மரபணு எப்படி TLS திசுக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படத் தூண்டுகிறது என்பது இப்போது தெளிவாகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய்க்கான சிகிச்சையை எந்த திசையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் நமக்கு தெளிவாக்கும். 

புதிய CT ஸ்கேன் முறை

ஆராய்ச்சியாளர்கள், முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, நிலையான CT ஸ்கேன்களிலிருந்து அதிக அளவு TLS நோயாளிகளைக் கண்டறியும் சாத்தியமான ஒரு முறையை உருவாக்கியுள்ளனர். நோயுற்ற பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல்வேறு விதமான சிகிச்சைகளை இதன் மூலம் விரைவாக கண்டறியலாம். 

இதன் மூலம் CT ஸ்கேன்கள் இத்தகைய செயல்பாடுகள் மூலம் சிகிச்சையின் ஒரு பகுதியாக இருந்தாலும், TLS திசுக்கள் சாதாரண CT ஸ்கேன் மூலம் மனிதக் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் ஆராய்ச்சிக் குழு கட்டிகளுக்குள் உள்ள கட்டமைப்புகளைக் கண்டறியக்கூடிய ஒரு செயற்கை நுண்ணறிவு வழிமுறையை உருவாக்கியுள்ளது.  மேலும், TLS திசுக்களைக் கொண்டதாக கண்டறியப்பட்ட ஹேமர்ஸ்மித் மருத்துவமனையில் உள்ள சில நோயாளிகளின் ஸ்கேன் ரிப்போர்ட்களில் இந்த வழிமுறை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் புற்றுநோய் மருந்தியல் மற்றும் மூலக்கூறு இமேஜிங் பேராசிரியர் எரிக் அபோகி கூறுகிறார்: ” எதிர்காலத்தில் இந்த பரிசோதனையானது ஒரு நோயாளிக்கு TLS அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளதா என்பதை எளிதில் கண்டறிந்துவிரும். இதன் மூலம் புற்றுநோயியல் நிபுணர்கள் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும்.”

இந்த ஆராய்ச்சியாளர்கள் இப்போது Target Ovarian Cancer இலிருந்து திட்ட மானியத்தைப் பெற்றுள்ளனர். இந்த கூடுதல் மானியத்தைக் கொண்டு அனைத்து HGSOC நோயாளிகளுக்கும், அவர்களது கட்டிகளில் TLS இல்லாவிட்டாலும் கூட, புற்றுக்கட்டிக்கான எதிர்ப்பு சக்தியை செயல்படுத்துவது சாத்தியமா என்பதை ஆராய்வார்கள். 

கருப்பை புற்றுநோய் – நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

மேலை நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​கருப்பை புற்றுநோய் பாதிப்பு இந்தியப் பெண்களிடையே குறைவாக உள்ளது. இருப்பினும் தற்சமயம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. 

அதீத இரத்தப்போக்கு உள்ள எந்த பெண்ணுக்கும் இந்த புற்றுநோய் பாதிப்பு வருவதற்கான சாத்தியம் உள்ளது. மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. 55 முதல் 64 வயது வரையிலான பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

மாதவிடாய் நின்ற பிறகு தொடங்கும் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு, மாதவிடாய் இடையே இரத்தப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அல்லது அதற்கு முன் கடுமையான அல்லது அடிக்கடி இரத்தப்போக்கு, உடலுறவின் போது இரத்தப்போக்கு, துர்நாற்றம் வீசும் பிறப்புறுப்பு வெளியேற்றம், சீழ் மற்றும் இரத்தம் கலந்த வெளியேற்றம், இடுப்பு வலி மற்றும் அழுத்தம், முதுகு, அடிவயிறு மற்றும் கால்களில் வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி போன்ற அரிகுறிகள் தெரிவோர் கருப்பை புற்றுநோய் உள்ளதா என்று மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. 

நோயை விரைவாக கண்டறியப்படும் நோயாளிகள் குணமடைவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவுகள் :

Tags:

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *