காட்டுத் தீயில் சிக்கித் தவிக்கும் கனடா!! ஆயிரத்துக்கும் அதிகமான காட்டுத் தீ பகுதிகள்..!!

செய்தி சுருக்கம்:
கனடா தனது வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீ பருவத்தைப் பதிவு செய்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் செல்லும் வகையில் இந்த காட்டுத்தீ பிரச்சனை உள்ளது.
கனடா அரசாங்கம் கடந்த மாதங்களில் பல பிராந்தியங்களில் இராணுவத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோவ்னாவில் எரியும் காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 200 வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
பின்னணி:
நாட்டின் மேற்குப் பகுதியில் தொடர்ந்து புகை மூட்டமாக இருந்தாலும், குளிர்ச்சியான சூழ்நிலைகள் அப்பகுதிக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்துள்ளன.
ஒவ்வொரு கோடைகாலத்திலும் கனடா காட்டுத் தீ பிரச்சனையை சந்திக்கும். அதே வேளையில், இந்த ஆண்டு தீப்பரவல்கள் குறைந்தது 15.3 மில்லியன் ஹெக்டேர் (37.8 மில்லியன் ஏக்கர்) நிலத்தை எரித்துள்ளன. இது 2022 ஐ விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம்.
கனடியன் இன்டராஜென்சி ஃபாரஸ்ட் ஃபயர் சென்டரின் ( CIFFC ) கருத்துப்படி , கனடா முழுவதும் 1,036 பகுதிகளில் காட்டுத் தீ எரிகிறது. அதில் 652 பகுதிகள் “கட்டுப்பாடு இல்லை”, 161 பகுதிகள் “கட்டுப்படுத்த முயல்பவை” மற்றும் 223 பகுதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மேற்கு மாகாணத்தில் (376) மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் (237) மூன்றில் இரண்டு பங்கு பகுதிகல் எரிகின்றன. யூகோனில் 143 தீயும், ஆல்பர்ட்டாவில் 88 தீயும், ஒன்டாரியோவில் 66 தீயும் எரிகின்றன.
CIFFC படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 5,881 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டை விட சுமார் 1,000 அதிகம்.
எவ்வளவு பகுதி எரிந்தது?
இந்த ஆண்டு இதுவரை எரிந்த நிலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட இரண்டு மடங்கு அதிகமாகவும், கோஸ்டாரிகாவை விட மூன்று மடங்கு அதிகமாகவும் உள்ளது.
15.3 மில்லியன் ஹெக்டேர் அதாவது 153,000 சதுர கிமீ அல்லது 59,000 சதுர மைல்கள் பரப்பை தீ எரிந்துள்ளது.
1995 இல் 7.1 மில்லியன் ஹெக்டேர் எரிக்கப்பட்ட முந்தைய அளவை விட இந்த ஆண்டு தீ இப்போது இரண்டு மடங்கு அதிகமாக எரிந்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா காட்டுத்தீ
ஆகஸ்ட் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட தீ 24 மணி நேரத்தில் நூறு மடங்குக்கு மேல் அதிகரித்ததால் அரசு அவசரகால நிலையை அறிவித்தது. 35,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
வான்கூவரில் இருந்து கிழக்கே 350 கிமீ (217 மைல்) தொலைவில் அமைந்துள்ள 150,000 மக்கள் வசிக்கும் நகரமான கெலோவ்னாவைச் சுற்றி இந்த தீ பரவியுள்ளது. பசிபிக் கடற்கரை மற்றும் மேற்கு கனடாவின் பிற பகுதிகளுக்கு இடையேயான சில முக்கிய போக்குவரத்து வழித்தடங்களின் பகுதிகள் மூடப்பட்டன.
இந்த ஆண்டு இதுவரை பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1.7 மில்லியன் ஹெக்டேர் (4.2 மில்லியன் ஏக்கர்) நிலப்பரப்பில் 1,900 தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது மாகாணத்தின் பல பகுதிகளில் அபாயகரமான காற்று மாசு உருவாக வழிவகுத்தது.
வடமேற்கு பிரதேசங்கள் முழுவதும் தீ
வடமேற்கு பிரதேசங்களின் தலைநகரான Yellowknife-ஐ மற்றொரு பேரழிவுகரமான தீ அச்சுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15 அன்று, வடக்கு கனடாவில் 200 க்கும் மேற்பட்ட காட்டுத்தீகள் எரிந்ததால் அதிகாரிகள் அங்கு அவசரகால நிலையைப் பிறப்பித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியதால், யெல்லோநைஃபில் வசிப்பவர்கள் 20,000 பேர் விமானம் அல்லது நிலம் மூலம் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
CIFFC படி, வடமேற்கு பிரதேசங்கள் முழுவதும் சுமார் 270 தீயினால் 3.4 மில்லியன் ஹெக்டேர்களுக்கு மேல் (8.4 மில்லியன் ஏக்கர்) எரிந்துள்ளது.