fbpx
LOADING

Type to search

இந்தியா உலகம் தொழில்நுட்பம் வர்த்தகம்

ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனாவின் பிஒய்டி மின்சார வாகனத் தொழிற்சாலை முன்மொழிவை நிராகரித்தது இந்தியா

இந்த மாதத் தொடக்கத்தில் சீன எலக்ட்ரிக் வாகன நிறுவனமான பிஒய்டி ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மின்சார கார்கள் மற்றும் பேட்டரிகளை உருவாக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு திட்டத்தைச் சமர்ப்பித்தது. இந்தியாவின் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் மேகா இன்ஜினியரிங் மற்றும் உட்கட்டமைப்பு நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொழிற்சாலையை அமைப்பதற்கான பிஒய்டியின் இந்த முன்மொழிவை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தக் கூட்டு முயற்சியானது இந்தியாவில் மின்சார கார்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிப்பதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். 

உலகளவில் அதிகமான மின்சார வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது சீனாவின் பிஒய்டி. இந்த நிறுவனம் இந்த ஆண்டில் இந்தியாவில் சுமார் 10,000 முதல் 15,000 மின்சார கார்களைத் தயாரிக்க முடிவு செய்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதற்காக அந்நிறுவனம் மற்றும் மேகா இன்ஜினியரிங் கட்டமைப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாதத் துவக்கத்தில் டிபிஐஐடி எனப்படும் தொழிற்சாலை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தன. இது குறித்து அத்துறை மற்ற அரசு சார்ந்த துறைகளிடம் கருத்து கேட்ட போது அவை அனைத்தும் சீன நிறுவனத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தன. காரணம், முழுக்க முழுக்கப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை. 

இதுகுறித்து அரசு அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? தற்போது இந்தியாவில் வாகன நிறுவனங்களை நிறுவுவதற்கான சட்டங்கள் இதை அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளனர். ஆட்டோ 3, எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் எலக்ட்ரிக் செடான் போன்றவற்றை விற்பனை செய்து வரும் பிஒய்டி நிறுவனம் மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தது எனவும் இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு தனது அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மாற்றியது எனவும் நில எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அண்டை நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்கு மத்திய அரசின் அனுமதியைக் கட்டாயமாக்கியதாகவும்  உள்துறைச் செயலர் தலைமையிலான குழு அத்தகைய பரிந்துரைகளை முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது உலகின் மூன்றாவது பெரிய வாகனச் சந்தையாக விளங்கும் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கத் திட்டமிட்டிருந்த பிஒய்டி, உலகச் சந்தையில் எலான் மஸ்க்கின் டெஸ்லாவுடன் நேரடியாகப் போட்டியிடும் ஒரு முன்னணி நிறுவனம். பிஒய்டி என்பது ‘பில்ட் யுவர் ட்ரீம்ஸ்’ என்பதன் சுருக்கமாகும். சீனாவின் ஷான்சியில் உள்ள சியானைத் தலைமை இடமாகக் கொண்டுள்ள நிறுவனம்தான் பிஒய்டி.  கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 6 லட்சத்து 41 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் அந்நிறுவனத்தால் விற்கப்பட்டன. இதனால் ஜூன் 2022 இல் பிஒய்டி டெஸ்லாவை முந்தியது. பிஒய்டி ஆட்டோவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு மட்டும் நான்கு மடங்கு அதிகரித்தது. கடந்த 2022ம் ஆண்டில் ஒரு மில்லியன் என்இவி-களை விற்பனை செய்து உலகின் முதல் இடத்துக்கு வந்தது.

பிஒய்டி ஆட்டோ லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்குத் தொழிற்சாலை ஒன்றில் அசெம்பிள் செய்யப்பட்ட பேட்டரியில் இயங்கும் போக்குவரத்துப் பேருந்துகளை விற்பதில் ஒரு தசாப்த காலமாக அமெரிக்கச் சந்தையில் உள்ளது. இந்த ஏற்றுமதிகள் இந்தியா, தாய்லாந்து, பிரேசில் மற்றும் பிற வளரும் சந்தைகளுக்குச் சென்றன. ஐரோப்பாவில் பிஒய்டி ஆட்டோ பிரிட்டன், ஸ்வீடன், ஜெர்மனி, நெதர்லாந்தில் உள்ள டீலர்ஷிப் சங்கிலிகளுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது. பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் கார்களை டெலிவரி செய்துள்ளது. ஐரோப்பிய வாடகை நிறுவனமான எஸ்ஐஎக்ஸி யுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பிஒய்டி நிறுவனம் அடுத்த 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் வாகனங்கள் வரை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு சுமார் நான்காயிரம் ஆட்டோ-3 களை ஏற்றுமதி செய்துள்ளது. ஜப்பானில் பிஒய்டி ஆட்டோ 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 ஷோரூம்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதன் டால்பின் ஹேட்ச்பேக் மற்றும் சீல் செடான் இந்த ஆண்டு சந்தைக்கு வர உள்ளன. 

 கடந்த ஆண்டு சீனாவில் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மற்றும் பெட்ரோல் எலக்ட்ரிக் கலப்பின வாகனங்களின் விற்பனை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து. 6.9 மில்லியன் வாகனங்களாக அதாவது உலகளாவிய மொத்த வாகனங்களில் பாதியாக உயர்ந்தது. சீனாவை முழுக்க முழுக்க எரிசக்தி மற்றும் பிற தொழில் நுட்பங்களின் படைப்பாளியாக மாற்ற முயற்சிக்கும் அந்நாட்டு அரசு பல பில்லியன் டாலர் மானியங்களை அளித்து இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கிறது. இது சீனாவை ஒரு மூலோபாய மற்றும் தொழில்துறைப் போட்டியாளராகப் பார்க்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியத் தலைவர்களை உலுக்கியது என்றால் அது மிகையில்லை. குளோபல் டேட்டாவின் ஆய்வாளரான டேவிட் லியா, சீன பிராண்டுகள் உலகச் சந்தையில் தீவிரமான போட்டியை உருவாக்கி உள்ளன என்கிறார். அதேவேளை ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்லோஸ் தவாரேஸ், “சீனாவின் இந்தக் குறைந்த விலை வாகனங்களுடன் போட்டியிட ஐரோப்பாவிற்கு விரைவில்  ஒரு மூலோபாயம் தேவை”, என எச்சரித்திருந்தார். மேலும் இது மிகவும் இருண்ட சூழ்நிலை எனவும் அவர் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் விலை சீன மாடல்களை விட 40 சதவீதம் அதிகம். டெஸ்லாவின் எலான் மஸ்க் இது குறித்துக் கூறும்போது ‘சீன நிறுவனங்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். ஏனென்றால் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் அவர்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா மின்சார வாகனப் பயன்பாட்டுக்கு மாறுவதில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளை விடப் பின்தங்கியுள்ளது. இதற்குக் காரணங்களாக வாகனத்திற்கான அதிக முன் செலவுகள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவை கூறப்படுகின்றன. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 30% மின்சார வாகன விற்பனையை எட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களை இந்தியாவில் தயாரிப்பவர்களுக்குப் பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் 40 சதவீதத்தைக் கைப்பற்ற முயற்சிப்பதாக பிஒய்டி கூறியிருந்தது. மின்சார வாகனத் தயாரிப்பு மட்டுமின்றி இந்தியாவில் சார்ஜிங் நிலையங்களையும் அமைப்பதற்கு பிஒய்டி திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அதன் முதலீட்டு முன்மொழிவு இந்தியாவால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய பதிவுகள் :

‘AI டெக்னாலஜியால் தேர்தல் மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்டம் காணப்போகிறது!’ - பில் கேட்ஸ் எச்சரிக்கை...
சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் தன்னுடைய எரிபொருள் விநியோகத்தை விரைவில் துவங்கவுள்ளது - இலங்கை ...
இந்தியாவின் ரஷ்யாவில் இருந்தான எண்ணெய் இறக்குமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது
இந்த விலங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இப்போது அது திரும்...
உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களா? அப்படியானால் நீங்கள்தான் பாக்கியசாலிகள்!
அதிகம் புரோட்டீன் வேணுமா? பிக்கி சோய் சாப்பிடலாம்
மின்சார வாகனத் தொழிற்சாலைத் திட்டம்: இந்திய வர்த்தக அமைச்சருடன் டெஸ்லா பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரனுக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் பிராங்கிளின் இலக்கிய விருது
வேளாண்மையை விரிவாக்கம் செய்ய ஸ்டார்ட் ஆப் நிறுவங்களா! விவசாயத்தைக் காப்பாற்றுமா கம்பெனிகள்.
உடல் பருமன் அதிகரிப்பதற்கு பிரக்டோஸ் காரணமாகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *