தமிழர்களின் தாயக நிலத்தில் இருந்து பௌத்த சின்னங்களை அகற்ற மோடியிடம் தமிழர்கள் கோரிக்கை!

செய்தி சுருக்கம்:
இலங்கையில் உள்ள தமிழர்களின் தாயகத்திலிருந்து சட்டவிரோத சிங்கள பௌத்த சின்னங்களை அகற்ற உதவுமாறு மோடியிடம் ‘பிடனுக்கான தமிழர்கள்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
இலங்கையில் தமிழ் அரசியல் மற்றும் கலாசார உரிமைகளை ஊக்குவிக்கும் புலம்பெயர்ந்தோருக்கான ஆதரவாளர் அமைப்பான ‘பிடனுக்கான தமிழர்கள்’ (Tamils for Biden) என்ற அமைப்பு, இந்த வாரம் இந்திய பிரதமர் மோடியிடம் தமிழ் இந்து புனித தலங்களைப் பாதுகாக்க உதவுமாறு கேட்டு ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இன அழிப்பு” மற்றும் “கலாச்சார இனப்படுகொலை” என்ற சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக, நாட்டின் வடகிழக்கில் உள்ள தமிழர்களின் தாயக மண்ணில் உள்ள இந்து சிலைகள் மற்றும் கோவில்கள் இலங்கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு இடிக்கப்பட்டுள்ளன. இதன் பிண்ணனியில் சிங்கள புத்தமத துறவிகளின் கைப்பாவையாக செயல்படும் இலங்கையின் தொல்லியல் துறை உள்ளது.
குறிப்பாக குருந்தூர் மலையில் உள்ள ஐயனார் கோவில் தொல்லியல் தளத்தில் கடந்த சில ஆண்டுகளாக பௌத்த துறவிகள் இந்து சமய சிலைகளை பௌத்த சிலைகளைக் கொண்டு இடமாற்றம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குருந்தூர் மலையில் வழிபாடு நடத்த தமிழர்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, அந்த இடத்தைச் சுற்றி 40 ஏக்கர் “உயர் பாதுகாப்பு மண்டலத்தில்” தமிழர்கள் விவசாயம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்பாடுகள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதோடு சமய நம்பிக்கைகளை கேள்விக்குறியாக்குகிறது..
தொடக்கத்தில் இருந்தே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான மத மற்றும் அரசியல் மோதல்கள் இருந்தன. பல ஆண்டுகளாக நீடித்த இந்த இனப் போரானது 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. சிங்கள பௌத்த மேலாதிக்க அரசாங்கம் மோதலின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையால் தொடர்ந்து விசாரணைக்கு உட்பட்டுள்ளது.
பிடனுக்கான தமிழர்கள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, இப்பகுதியில் பௌத்த துறவிகளின் உரிமைக் கோரல்கள் சந்தேகத்திற்குரிய மத நூல்கள் மற்றும் புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அவை இலங்கைத் தீவுக்கு சிங்களவர்கள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே தமிழர்கள் இப்பிரதேசத்தில் குடியேறினர் என்பதற்கான தெளிவான வரலாற்று ஆதாரங்களுக்கு முரணானது. இந்தக் கூற்றுக்கள் இராணுவம், காவல்துறை மற்றும் இலங்கை ‘கங்காரு நீதிமன்ற’ நீதித்துறை அமைப்பு – ஆகியவற்றால் முட்டுக் கொடுக்கப்படுகின்றன. இதன் விளைவாக, தமிழர்களின் மத சுதந்திரம் மற்றும் அவர்களின் கலாச்சார பாரம்பரியம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இனப் போரின் முடிவில், இலங்கை அரசாங்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை அழித்ததாகக் கூறப்படுகிறது (சில அறிக்கைகள் 3,000 என்று கூறுகின்றன), இது இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால், 1987 இல் சேர்க்கப்பட்ட 13வது திருத்தத்தின் மூலம் வாக்குறுதியளிக்கப்பட்ட சுயாட்சி மற்றும் சகிப்புத்தன்மை என்ற பொருண்மையை மீறிய செயலாகும்.
பதவியில் இருந்த காலம் முழுவதும் இந்தியப் பிரதமர் திரு.மோடி அவர்கள் தமிழர்களுக்கான தனது ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளார். 2021 பெப்ரவரியில் மீண்டும் இதை வலியுறுத்திய மோடி, “இலங்கையில் உள்ள தமிழ் சகோதர சகோதரிகளின் நலன் மற்றும் அபிலாஷைகளை எங்கள் அரசாங்கம் எப்போதும் கவனித்து வருகிறது…. அவர்கள் சமத்துவம், சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்வதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
இந்த வார்த்தைகளைக் குறிப்பிட்டு, பிடனுக்கான தமிழர்கள் அமைப்பு, திரு மோடி அவர்கள் தாயக மண்ணில் உள்ள கோவில் இடங்களுக்குச் சென்று, தமிழ் மக்களை உளவியல் ரீதியாக அழிக்கும் பௌத்த சின்னங்களை அகற்ற தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். சிங்களவர்களின் பொய்களை தடுத்து நிறுத்தவும் தமிழர்களின் மண்ணில் இருந்து அனைத்து பௌத்த விகாரைகளையும் சின்னங்களையும் அகற்றவும் இலங்கைக்கு – தமிழர்களுக்கு, இந்தியா தன்னால் இயன்றதை செய்ய வேண்டும்.
பின்னணி:
2009 ஆம் ஆண்டு போர் முடிந்த பிறகு சிங்கள அரசும் பௌத்த துறவிகளும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் பௌத்த சின்னங்களை நிறுவுவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
செம்மலை நீராவியடிப்பிள்ளையார் கோவில் இன்று பௌத்தர்களின் விகாரைகளாக உருமாற்றப்பட்டிருக்கிறது. நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களின் ஆதிக்கத்தின் கீழ் சென்று அங்கு தமிழர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. இப்போது குருந்தூர்மலையிலும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது. குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டிருந்த சிவன், ஐயனாரின் சூலம் உடைக்கப்பட்டதோடு, வழிபாட்டு எச்சங்களும் எரிக்கப்பட்டுள்ளன.
ஆதியில் இருந்தே குருந்தூர்மலை தமிழர்களின் பூர்விக பகுதியே ஆகும். அதில் உள்ள கோவில்களும் தெய்வ விக்கிரகங்களும் அக்கிராம மக்களால் பூர்விகமாக வழிபட்டு வரப்பட்டவை. இதற்கு அங்கு தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகள் 2300 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்தபோதும், குருந்தூர்மலை இருக்கும் தொல்லியல் சான்றுகள் அனைத்தும் பௌத்தர்களது என போலியான ஆதாரங்களை சித்தரித்ததோடு, வட கிழக்கில் காணப்படும் மலைகள், பௌத்த விகாரைகளை அடிப்படையாக கொண்டது என்று சிங்கள அரசும் பௌத்த துறவிகளும் கட்டுக்கதைகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.
இன, மத துவேஷங்களை மனதில் கொண்டு தொல்லியல் சான்றுகள் வழி உருவாகும் வரலாற்றை அழிப்பதற்கு இந்த அற்ப மனிதர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. வரும் சந்ததியினர் இந்த சாதி, இன, மொழி, மத தடைகள் ஏதுமில்லா ஓர் உயர்வை எட்டி, அங்கிருந்து முன்னோர்களாகிய நம்மை நோக்குகையில் வரலாற்று சான்றுகளை அழிக்கும் நாம் சாக்கடைப் புழுக்களாகத் தெரிவோம் என்பதைப் புரிந்துகொள்வோம்.