எல்லோரையும் அனுமதிக்க முடியாது! பிரிக்ஸ் (BRICS) நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராகும் விதிகளை கடுமையாக்க வேண்டும் – இந்தியா உறுதி!!

செய்தி சுருக்கம்:
பிரிக்ஸ் நாடுகளின் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான கடுமையான விதிகளை இந்தியா வலியுறுத்துகிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து குழுவை விரிவாக விரிவுபடுத்தவேண்டும் என்ற சீனாவின் முயற்சியை இந்தியாவும் பிரேசிலும் கடுமையாக எதிர்க்கின்றன.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
2009 இல் உருவாக்கப்பட்ட BRICS குழுவில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடக்க இருக்கும் கூட்டத்திற்கான ஆயத்த பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியாவும் பிரேசிலும் இந்தோனேசியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பிரிக்ஸில் உறுப்பினராக மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஆட்சேபனைகளை எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி:
புதிய உறுப்பினர்கள் எப்படி, எப்போது சேரலாம் என்பதில் கடுமையான விதிகள் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த சவூதி அரேபியாவைக் காட்டிலும் வளர்ந்து வரும் நாடான அர்ஜென்டினா மற்றும் நைஜீரியா போன்ற ஜனநாயக நாடுகளை சேர்த்துக்கொள்ள பிரிக்ஸ் நாடுகள் முயல வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்துள்ளது.
இதற்கிடையில் , புதிதாக விண்ணப்பிக்கும் நாடுகளை முழு உறுப்பினர்களாக உயர்த்துவதற்கு முன், “பார்வையாளர் ” மற்றும் ” பங்காளி நாடு ” என்ற நிலையில் அந்த புதியநாடுகளை குறிப்பிட்ட காலம் வைத்திருக்கும் யோசனையை பிரேசில் முன்மொழிந்துள்ளது. இந்த பார்வையாளர் நிலையில் வைப்பதற்கு இந்தோனேசியாவை முன்மொழிய வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சவுதி அரேபியா, ஈரான், எகிப்து, பங்களாதேஷ், அல்ஜீரியா, அர்ஜென்டினா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் உறுப்பினர்களாக விண்ணப்பித்துள்ளன, அதே நேரத்தில் இந்தோனேசியா உட்பட மற்ற நாடுகள் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் கூட்டத்திற்கு முன் புதிய உறுப்பினர்களை அனுமதிப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம் என்று பிரிக்ஸ் குழு திட்டமிடுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கூறுகையில், பிரிக்ஸ் விரிவாக்கத்தில் திறந்த மனதுடனும், நேர்மறையாகவும் இந்தியா அணுகுகிறது என்றார்.
BRICS இன் தற்போதைய தலைவராக இருக்கும் தென்னாப்பிரிக்கா, கடந்த வாரம் 40 க்கும் மேற்பட்ட நாடுகள், பிரிக்ஸ் குழுவில் சேர ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தது. உறுப்பினர்களை அதிகரிக்க சீனாவின் அழுத்தத்திற்கு முரணாக இந்தியாவும் பிரேசிலும் உறுப்பினர் சேர்க்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபவது பாராட்டத்தக்கது.