உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களா? அப்படியானால் நீங்கள்தான் பாக்கியசாலிகள்!

உங்கள் குழந்தைகள் புத்தகங்களை அதிகம் வாசிப்பவர்களாக இருந்தால், அத்தகைய பழக்கம் இல்லாத குழந்தைகளைக் காட்டிலும் அவர்கள் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும், கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் எனச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு கடந்த மாதம் ஜூலை 20-ல் இருந்து 27க்குள் எபிக் என்னும் நிறுவனத்தின் சார்பில் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஒன்போலால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் குழுவில் சந்தை ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுக்கருத்து ஆராய்ச்சிக்கான அமெரிக்கச் சங்கம் மற்றும் கருத்து மற்றும் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சிக்கான ஐரோப்பியச் சங்கம் ஆகியவற்றின் பெருநிறுவன உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆய்வில் 1500 அமெரிக்கப் பெற்றோர்கள் மற்றும் 500 ஆசிரியர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இந்தக் கருத்துக் கணிப்பின்படி புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உள்ள 5 லிருந்து 12 வயதுடைய 91 சதவீதம் குழந்தைகள் வாசிக்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளை விட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதே போல் அடிக்கடி வாசிக்கும் பழக்கமுள்ள 92 சதவீதம் குழந்தைகள் உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாகவும் அதிகக் கற்பனைத் திறனுடனும் இருந்திருக்கிறார்கள். மேலும் 95 சதவீதம் குழந்தைகள் எதிர்மறையான சூழ்நிலைகள் மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மிகவும் முனைப்பான அணுகுமுறைகளைத் தேர்ந்தெடுப்பதும் தெரிய வந்துள்ளது.
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் புத்தகங்கள் வகிக்கும் பங்கு நடைமுறையில் அளவிட முடியாதது என்று கூறும் எபிக் நிறுவனத்தின் இணை நிறுவனரான கெவின் டோனாஹூ, வாசித்தல் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் முக்கியமான வழி என்றும் குழந்தைகளைப் பொருத்தவரை வாசிப்பு என்பது ஒரு தனி உலகம் என்றும் உத்வேகம் நிறைந்த இந்த உலகம் குழந்தைகளுக்கு அவர்களது எதிர்காலத்தில் என்னென்னவெல்லாம் அவர்களுக்காகக் காத்திருக்கும் என்பதை உணரவைக்கும் என்றும் கூறுகின்றார்.
இந்த ஆய்வில் 500 ஆசிரியர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கம் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிய வந்துள்ளன. வாசிக்கும் குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் சாகசப் புத்தகங்கள், படப் புத்தகங்கள், கற்பனைப் புத்தகங்கள், காமிக்ஸ் மற்றும் கிராபிக் நாவல்கள் வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளனர். மேலும் 56 சதவீதத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கூட்டாகத் தங்களுக்குள் ஒரு பிடித்த புத்தகத்தை வைத்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 35 நிமிடங்கள் புத்தக வாசிப்பிற்கு ஒதுக்கியிருக்கிறார்கள். பல குழந்தைகளுக்கு வாசிப்பதற்கான உந்துதலை வழங்கினாலே போதும். அவர்கள் புத்தகங்களைப் படிக்கவும் அவற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் அது வழிவகுக்கும் என்கிறார்கள் ஆசிரியர்கள். மேலும் பள்ளிக்கு வெளியே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர்கள் சில வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள். குழந்தைகளை உள்ளூர் நூலகங்களில் பார்வையிட ஊக்குவிப்பது, வகுப்பில் அவர்களுக்குக் கூடுதல் வெகுமதி அளிப்பது மற்றும் வாசிப்புப் போட்டிகள் நடத்துவது, டிஜிட்டல் வாசிப்புத் தளங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது போன்ற வழிமுறைகளைக் கூறியிருக்கிறார்கள்.
குழந்தைகளைப் புத்தகங்களைப் படிக்க வைக்கப் பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. வீட்டில் குழந்தைகளைச் சுற்றி எப்போதும் அதிகமான புத்தகங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். வெளியில் காரில் சென்றால் புத்தகங்களைக் கொண்டு செல்வதும், தொலைபேசி, லேப்டாப் ஆகியவற்றில் புத்தகங்களைப் பதிவேற்றம் செய்து கொடுத்து வாசிக்க வைப்பதும், விடுமுறை தினங்களில் பெற்றோர்கள் அவர்களுடன் இணைந்து படிப்பதுமாகிய வழிமுறைகளும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புத்தகங்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் புகழின் உச்சியில் ஏறி இருக்கிறார்கள். பலர் நாட்டின் தலைவர்களாகவும் சாதனையாளர்களாகவும் அறிஞர்களாகவும் புரட்சியாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள். அடிமைகளின் சூரியன் எனப்படும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் புத்தகங்களைப் படித்துப் படித்தே உயர்ந்தவர். லண்டன் நூலகத்தில் சுமார் இருபது வருடங்கள் பல்வேறு நூல்களைப் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் உலகின் பொதுவுடமைத் தந்தையானவர. பேரறிஞர் அண்ணா நூலகம் திறந்ததும் உள்ளே நுழைபவர் இரவில் அது மூடும் போதுதான் வெளியே வருவாராம். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு “நான் மறையும் போது என் உடல் மீது மலர் மாலை வைக்காதீர்கள். என் மடி மீது புத்தகங்களைப் பரப்பி வையுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் புத்தகப் பிரியர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் டிஜிட்டல் உலகில் வாழும் இன்றைய குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது என்பதுதான் நிதர்சனம். குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி என்பது மூன்று வயதிலேயே தொடங்கி விடுகிறது என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், அந்தப் பருவத்திலேயே புத்தக வாசிப்புப் பழக்கத்தை அவர்களுக்குள் ஏற்படுத்துவது மிக அவசியம் என்றும் இது அவர்களுடைய அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றைத் தாண்டி பண்புள்ளவர்களாக மாற்றும் என்றும் கூறுகிறார்கள். புத்தகங்களைப் படிக்கும் குழந்தைகள் அதில் வரும் கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் மனதில் பதிய வைக்கும்போது அவர்களது கற்பனைத் திறன் விரிவடையும் என்றும் அறிவாற்றலையும் சுறுசுறுப்பையும் புத்துணர்ச்சியையும் புதிய சிந்தனையையும் வளர்க்கும் புத்தக வாசிப்புப் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்த அனைவரும் முயற்சி செய்யவேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.