குழந்தைகளின் கணித திறனை மேம்படுத்தும் போர்டு கேம் விளையாட்டுகள்

செய்தி சுருக்கம்:
ஒன்றுக்கு மேற்பட்டோர் அல்லது குழுவினர் அமர்ந்து விளையாடக் கூடிய விளையாட்டுகள் போர்டு கேம், அதாவது அட்டையை பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. இவற்றை விளையாடும் குழந்தைகளின் கணித திறன் மேம்படுகிறது என்று ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
குழந்தைகள் பெரும்பாலும் ஸ்மார்ட் டி.வி மற்றும் ஸ்மார்ட் போன்களில் நேரத்தை செலவழிக்கின்றனர். அது அவர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு உகந்தது அல்ல. இந்த போர்டு கேம்கள் பிள்ளைகள் டி.வி. ஸ்மார்ட் போன் போன்றவற்றை பார்க்கும் ஸ்கிரீன் டைம் என்ற நேரத்தை குறைக்க உதவுகின்றன.
3 முதல் 9 வயதுவரையிலான குழந்தைகளைப் பற்றிய பல ஆய்வுகளின் தொகுப்பிலிருந்து இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. 2000 ஆண்டிலிருந்து தற்போது வரையிலான 19 ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் பரிசீலித்துள்ளனர்.
பிள்ளைகளின் வாசிப்பு திறனை இதுபோன்ற விளையாட்டுகள் மேம்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தபோதிலும், தற்போதைய ஆய்வு மோனோபோலி, ஒதெல்லோ, சூட்ஸ் அண்ட் லேடர்ஸ் போன்ற விளையாட்டுகள் பிள்ளைகளின் எண்ணும் திறன், கூட்டல் மற்றும் ஓர் எண் மற்றொரு எண்ணைக் காட்டிலும் பெரிதானதா அல்லது சிறியதா என்பதை புரிந்துகொள்ள இந்த விளையாட்டுகள் உதவுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னணி:
போர்டு கேம் என்னும் விளையாட்டுகள் அட்டைகளின் துண்டுகள், இல்லையெனில் அட்டைகளில் இடம் பெற்றுள்ள கட்டங்களை பயன்படுத்தி விளையாடக்கூடியவை. ஒவ்வொரு விளையாட்டுக்கும் குறிப்பிட்ட விதிகள் உண்டு. அந்த விதிகளைப் பின்பற்றி விளையாடவேண்டும்.
இப்போதைய போர்டு கேம் என்னும் விளையாட்டுகளின் முன்னோடி விளையாட்டுகள் வரலாற்று காலத்துக்கு முந்தையவை என்பதை அநேகர் அறிந்திருக்கமாட்டோம். ‘பகடை’ என்னும் டைஸ், எழுத்து வடிவ மொழிகளுக்கு முந்தைய காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் இவ்வகை விளையாட்டுகளின் முன்னோடி ஆகும். தென்கிழக்கு துருக்கியில் ஐயாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு கல்லறையில் 49 சிறிய வண்ண கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை உறுதி செய்கிறது.
கி.மு. 3100 ஆண்டுவாக்கில் பண்டைய எகிப்து மன்னர்களாக பார்வோன்கள் காலத்தில் இது உயர்குடி மக்களிடையே விளையாடப்பட்டதாக கூறப்படுகிறது. முடியாட்சி காலத்திற்கு முன்பிருந்த இந்த விளையாட்டு தொடர்பான பொருள்கள் முதல் முடியாட்சி காலத்தில் மன்னர்கள் அடக்கம்பண்ணப்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கி.மு. 500 ஆண்டுவாக்கில் இவை குழந்தைகளுக்கும் அறிமுகமாகியுள்ளன. ரோம இன மக்களின் குழந்தைகள் முதன்முதலில் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளனர். 17ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலம் பேசும் பகுதிகளுக்கு இந்த விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. இன்று புகழ்பெற்று விளங்கும் செஸ் என்னும் சதுரங்கமே கூட ஒரு போர்டு கேம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
வாழ்வியல் திறன் வழிகாட்டி
போர்டு கேம் என்னும் விளையாட்டுகள் வெறுமனே வேடிக்கைக்கு உரியவை அல்ல. அவை குழந்தைகளின் வாழ்வில் திறன்களை மேம்படுத்தக்கூடியவை.
தோல்வியை கண்டு துவண்டுவிடாத மனநிலையை உருவாக்குகின்றன. ஏமாற்றத்திலிருந்து மீண்டு வந்து இலக்கை நோக்கி தொடர பயிற்றுவிக்கின்றன. விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விளையாட்டுக்கான உற்சாக மனநிலையை தக்க வைக்க பழக்குவிக்கிறது. வெற்றியை முழுவதுமாக கொண்டாடுவதும், தோல்வியின் மனமுடைந்துபோவதுமான இரு எல்லை உணர்ச்சியையும் எட்டாமல், நாணயத்திற்கு இரு பக்கம் உண்டு என்பதுபோல் விளையாட்டில் வெற்றி, தோல்வி இரண்டும் உண்டு என்பதை உணரச் செய்கிறது.
பரபரப்பான உலகில் தன் முறை வரும்வரைக்கும் காத்திருக்க கற்றுத் தரும் நடைமுறையும் இந்த போர்டு கேம்களில் உள்ளன. இவை குழந்தைகளின் மனதை காத்திருப்பதற்கு பழக்கப்படுத்துகின்றன.
குழுவாக இணைந்து செயல்படும் மனப்பான்மை, விளையாட்டு வீரருக்கான மனப்பான்மை, செயலியக்கம் சார்ந்த திறன்கள், பிரச்னைகளை தீர்க்கும் திறன், சமுதாயத்தில் பழகும் திறன் போன்ற வாழ்வியல் திறன்களை பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க இந்த விளையாட்டுகள் ஆசிரியர்களுக்கும் உதவுகின்றன.
மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுதல், பாராட்டுதல், உதவி செய்தல் போன்ற குணங்களை வளர்ப்பதோடு கணித திறனையும் கூர்ப்படுத்துகின்றன.
விதிமுறைகளை பின்பற்றுதல், எதிராளியின் அடுத்த நகர்வை கணித்தல், எதிர்பாராத தடைகளை மேற்கொள்ளுதல், வியாபார பரிவர்த்தனை செய்தல், பணத்தை கையாளுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் குழந்தைகளின் மனப்பாங்கை மேம்படுத்துகின்றன.
இவை அனைத்துமே போர்டு கேம்களை குறித்த பொதுவான புரிதல்களாகும். ஆனால், எண்களை கொண்ட விளையாட்டு குழந்தைகளின் கணித திறனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது.
எண்களோடு தொடர்புடைய கணித திறன்
தொடர்ந்து கணித செயல்பாடுகளில் ஈடுபடும் குழந்தைகளின் மூளை ஆரோக்கியமாக இருப்பதாகவும், கவனம் குவிக்கும் திறன் அதிகரிப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எவ்வளவு சிறிய வயதில் பிள்ளைகள் கணிதம் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் தன்னம்பிக்கை, தீர்மானம் செய்தல், வளர்ச்சிக்கேற்ற மனப்பாங்கு, தோல்வியை கையாளும் மனப்பக்குவம் ஆகியவற்றை பெற்றுக்கொள்கிறார்கள்.
பிள்ளைகளுக்கு எண்களைக் குறித்த அறிமுகம் அதிகம் வேண்டும். ஏறு வரிசையிலும், இறங்கு வரிசையிலும் அவர்கள் எண்களை தெரிந்துவைத்திருக்கவேண்டும். அதேபோன்று வெறும் எண்களைக் கொண்டு கூட்டலோ, கழித்தலோ செய்வதற்குப் பதிலாக கேம் விளையாட்டுகள் அவர்களுக்கு படங்களை கொண்டு கூட்டல், கழித்தலில் ஈடுபட உதவுகின்றன. மேலே, கீழே போன்ற திசைகள் மற்றும் வடிவங்களும் பிள்ளைகளுக்கு இவற்றின் மூலம் பரிச்சயமாகும்.
பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும் பொருள்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்கள் விளையாட்டுகளில் இடம் பெறுவதால் அவர்கள் வெறுப்புடன் அல்லாமல் ஈடுபாட்டுடன் எண்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள்.
வாரத்திற்கு இருமுறை 20 நிமிட காலத்திற்கு ஆறு வாரங்கள் கேம் போர்டு வேளைகள் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டன. ஆசிரியர் அல்லது பயிற்சியாளரின் கண்காணிப்பில் பிள்ளைகள் விளையாடும்போது முழுமையான பலன் கிடைக்கிறது.