அதிபர் பைடனின் மனத்திறன் குறைவதை அமெரிக்க ஊடகங்கள் மறைக்கின்றனவா?

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனநிலை மோசமடைந்து வருவதாகவும் அதை அந்நாட்டு ஊடகங்கள் ஒத்துக் கொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபரான பைடன் பொது வெளிகளில் சில கேள்விகளுக்குச் சரியாகப் பதில் கூறவில்லை என்றும் சில கேள்விகளுக்கு எதிர்வினை கூட ஆற்றுவது இல்லை என்றும் எதிரே இருப்பவர்கள் குறித்து அவர் குழப்பம் அடைவதாகவும் மொத்தத்தில் அவர் யதார்த்தமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரின் இந்தக் கருத்துக்கு அவரைப் பேட்டி கண்ட ரோரி சுசெட், இது ஜனாதிபதியின் முதிர்ந்த வயதுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனப் பதிலளிக்கையில் அதை முற்றிலும் நிராகரித்தார் மரியா.
எண்பது வயதில் இருக்கும் பைடனின் பரந்த அரசியல் அனுபவத்தை அவர் ஒப்புக் கொண்டாலும் வயதுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் தொடர்பில்லை எனவும் வயதான ஒரு மனிதன் புத்திசாலியாக இருக்க முடியும் மற்றும் நல்ல உடல் தகுதி உள்ள ஒரு இளைஞன் முட்டாளாக இருக்கலாம் எனவும் அவர் வாதிட்டார். இதற்கு மரியா ஜாகரோவா ஒரு சமீபத்திய சம்பவத்தையும் முன்வைக்கிறார். பைடன் ஒரு உரையின்போது மறைந்த காங்கிரஸ் உறுப்பினரான ஜாக்கி வாலோர்ஸ்கி எங்கே எனக் கேட்டிருக்கிறார் எனவும் அந்தக் காங்கிரஸ் பெண்மணி கடந்த மாதம் கார் விபத்தில் இறந்து போனவர் எனவும் குறிப்பிடும் அவர் தன் முன் இருக்கும் பார்வையாளர்களில் இறந்த நபரைப் பைடன் தேடுகிறார் என நினைக்கும் போது சற்று அச்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் அவர் இது குறித்துக் கூறுகையில் பைடனைச் சுற்றியுள்ளவர்கள் அவருடைய இந்தக் குறையை கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் பொதுவெளியில் அவரது மனத்திறன் இங்ஙனம் இருக்கும் நிலையில் தனிமையில் இன்னும் தீவிரமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலை குறித்துப் பேச அமெரிக்க மக்களும் ஊடகங்களும் பயப்பட வேண்டாம் எனவும் இதைப் புறக்கணிக்காமல் அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் பதவி என்பது மிகக் கடினமான பதவிகளில் ஒன்றாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. நல்ல உடல்திறனும் சுறுசுறுப்புடனும் இயங்கும் நபர்களாலேயே ஒரு நாட்டின் தலைவராகச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது அந்த நாட்டு மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. ஆனால் அந்நாட்டின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் பதவியேற்கும் போது அவருக்கு வயது ஐம்பத்தேழு. அமெரிக்காவில் ஐம்பதிலிருந்து ஐம்பத்து நான்கு வயதிற்குட்பட்டவர்களே பெரும்பாலும் அதிபர்களாக இருந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து ஐம்பத்தைந்திலிருந்து ஐம்பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களுடைய மனநிலைக்கு ஏற்றார்போல் அதிபர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களை ‘பிட்டாகக்’காட்டிக் கொள்வார்கள்.
இந்நிலையில் எழுபத்தெட்டு வயதில் அதிபரான பைடன் மேடைப் படிகளில் ஓடிச் சென்று ஏறுவதும் மக்களுடன் நடைப்பயிற்சி செய்வதுமாக ‘நான் பிட்டாக இருக்கிறேன்’ என்பதாகக் காட்டிக் கொண்டார். இது முந்தைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பைக் காட்டிலும் ஜோ பைடன் பிட்டாக உள்ளார் என்பதை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்தது என்பதே உண்மை. அதிபர் தேர்தல் முடிவுகளில் கூட இது எதிரொலித்தது. அமெரிக்க அதிபர்களிலேயே வயதானவர் பைடன்தான். தற்போது இருக்கும் அரசியல்வாதிகளில் பரந்துபட்ட அரசியல் அனுபவம் கொண்டவரும் இவர்தான்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதிபர் பைடன் ‘ஸ்லீப் அப்னியா’ எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய்க்கு சிபிஏபி சிபேப் என்னும் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறார் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. சில நாட்களுக்கு முன் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிவரும் பத்திரிக்கைச் செய்தியில், மேடை மீது நின்றிருந்த அதிபர் அங்கு இருந்த கருப்பு நிற மணல் பையில் கால்பட்டு இடறி விழுந்ததாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட அவரது வயது தடையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். அடுத்த தேர்தல் நடைபெறும் போது அவருக்கு எண்பத்து இரண்டு வயதாகியிருக்கும் என்பதால் இரண்டாவது முறை வெற்றி பெற்றாலும் அதிபர் பதவியில் அவர் தொடர முடியுமா என்பது குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான அமெரிக்க மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே ஒருமுறை அவர் தனது மிதிவண்டியில் இருந்து விழுந்த சம்பவமும் மற்றொரு முறை விமானத்தில் ஏற முயன்றபோது கீழே விழுந்த சம்பவமும் தற்போதைய சம்பவத்துடன் சேர்ந்து அவர்களின் கவலையை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வெள்ளை மாளிகையின் மருத்துவர் கெவின் ஓ கான்னர் என்ன கூறுகின்றார் தெரியுமா? அதிபர் தன் பொறுப்புகளை நிறைவேற்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் அவர் தமது வேலைகள் முழுவதையும் தாமாகவே செய்து கொள்கிறார் என்றும் எந்த ஒரு வேலையையும் அவர் செய்யாமல் விடுவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் பைடனின் மனநிலை மோசமடைந்து வருவதாகவும் அதை அந்நாட்டு ஊடகங்கள் ஒத்துக் கொள்ளாமல் தவிர்த்து வருவதாகவும் கூறியிருக்கும் ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவாவின் கருத்து மிகவும் கவனம் பெறுவதாக அமைந்துள்ளது.