உண்ணா நோன்பு என்னும் தலைசிறந்த மருத்துவம்!

பல நூறு ஆண்டுகளாக உருவாகி வந்திருக்கும் இந்த மனித உடல் உண்மையில் தன்னைத்தானே சரியாக்கிக் கொள்ள வல்லது. அவ்வுடலின் வேலைப் பலுவைக் குறைத்து சில நாட்கள் உணவின்றி நீர் மட்டுமே அருந்தி, உடலானது தன்னைத் தானே சரிசெய்துகொள்ள அனுமதிப்பதே உண்ணா நோன்பு ஆகும்.
உண்ணா நோன்பு இயற்கையானதா?
தினந்தோறும் மூன்று வேளைகள் உணவுண்பதுதானே சரியானதாக இருக்கும்? உணவு உண்ணாமல் விட்டால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் உடல் சோர்ந்து விடாதா? இது இயற்கைக்கு முரணான செயல்பாடு இல்லையா? என்று நமக்கு கேள்விகள் எழுவது இயல்பே.
மற்ற விலங்குகளை அவதானிக்க நமக்கு வாய்ப்புகள் ஏற்படவில்லை. நாம் வீடுகளில் வளர்க்கும் நாய்களில் இந்த இயற்கையான உண்ணா நோன்பு பழக்கம் இருப்பதை நாம் அனைவரும் கண்டிருக்கக் கூடும். நாயானது தனது உடல்நிலை சரியில்லாமல் போனாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலோ உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாது, வெறும் புற்களை மட்டும் கடித்து வாயுமிழ்ந்து வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளும். குரங்குகளிலும் இந்த பழக்கத்தைக் கண்டிருப்பதாக சிலர் பதிவு செய்து வைத்துள்ளனர்.
மிருகங்களிடம் காணப்படும் ஒரு பழக்கம் உயிரினிங்கள் தோன்றிய ஆதிகாலத்தில் இருந்து இருந்து வருபவையே என்பதும் அவை இயற்கையான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பதும் திண்ணம்.
உண்ணா நோன்பின் அடிப்படை என்ன?
தற்போதைய காலகட்டத்தில் உணவின்றி மாண்டவரை விட, அதிகமாக உண்பதால் நோயுற்று மாள்பவரே அதிகம் என்பது கண்கூடு. நமது உடல் போதிய சத்துக்கள் இல்லாமல் திணறுவதைவிட, தேவையற்று உடலில் சேர்ந்திருக்கும் பொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவதே அதிகம்.
நம் அனைவருக்கும் உடலில் வயிற்றைச் சுற்றி இருக்கும் கொழுப்புப் படிவே உடல் தேவையற்று சேமித்திருக்கும் ஒன்று எண்ணினால் அது தவறானது. இந்த தேவையற்ற சத்துப் பொருட்கள் என்பவை நமது உடல் தசைகளிலும், எலும்பு மஜ்ஜைகளிலும், இரத்தத்திலும் கலந்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
வயிற்றில், தொடைப்பகுதிகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புப் பொருட்களைக் கூட ‘லிப்போ சக்சன்’ அதாவது கொழுப்பை உறிஞ்சி எடுத்தல் என்ற முறையில் உறிஞ்சி எடுக்க மருத்துவ சிகிச்சைகள் வந்துவிட்டன. ஆனால், எலும்பு மஜ்ஜைகளிலும், இரத்தத்திலும் படிந்திருக்கும் தேவையற்ற பொருட்களை எப்படி சுத்தம் செய்வது. அதற்கான தொழில்நுட்பம் இன்னும் வரவில்லையே!?
எதிர்காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் கிடைக்காமல் போய் விடுமோ என்று உடல் அஞ்சுவதாலேயே அது சில பொருட்களை உடலில் சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆதிகாலத்தில் வேட்டையாடி வாழ்ந்து வந்த காலத்தில் உடலில் இயல்பாக உருவான இந்த மரபணுப் பழக்கம் இப்போதும் தொடர்கிறது. அதை மாற்றுவதற்கில்லை.
இதுபோக, உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடு காரணமாக சில பொருட்கள் உடலில் சேர்கின்றன. உதாரணமாக, நுரையீரலில் சேரும் சளி, கோழை போன்றவையைச் சொல்லலாம். அதே போல இரத்தத்திலும் நோய் எதிர்புப்பொருட்கள் தேவையின்றி சுற்றி வந்தவண்ணம்தான் உள்ளன. நோயானது மறைந்து விட்டாலும் இந்த நோயெதிர்ப்புப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக உருவாகி உடலில் தங்கி விடுகின்றன.
இவ்வாறு உருவாகி உடலில் தங்கிவரும் சத்துப் பொருட்களும், நோயெதிர்ப்புப் பொருட்களும் உடலுக்கு புதிதாக பிரச்சனைகளையும் நோய்களையும் கொண்டு வருகின்றன என்ற அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரண சளி, ஜுரம் முதல் புற்றுநோய் வரை இதே அடிப்படைதான்.
இவ்வாறு தேவையின்றி சேமிக்கப்பட்டிருக்கும் பொருட்களை உடலைக் கொண்டே சுத்தம் செய்யும் ஒரு வழிமுறையே உண்ணா நோன்பு ஆகும்.
உணவளிக்கப்படாத உடலும் பூட்டிய வீடும்
இப்பொழுது நீங்கள் உங்களது வீட்டில் தனியாக வைத்துப் பூட்டப்பட்டிருக்கின்றீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. பூட்டியிருக்கும் கதவை திறக்கவும் இயலாது என்று கொள்ளுங்கள். எத்தனை நாட்கள் நீங்கள் சமாளிப்பீர்கள், எப்படிச் சமாளிப்பீர்கள்?
உங்களுக்கு பசியெடுக்கத் தொடங்கிய உடனே நீங்கள் அடுக்களைக்குச் செல்வீர்கள். அங்கு சமைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவை உண்பீர்கள். மீண்டும் கதவு திறக்கப்படுமா என்று காத்திருப்பீர்கள். மீண்டும் பசிக்கும்போது மீண்டும் அடுக்களைக்குச் சென்று மீந்து இருக்கும் உணவுகளை கபளீகரம் செய்வீர்கள். இப்போது உணவு உங்களுக்கு போதவில்லை. எனவே அரிசி பருப்பு போன்ற வேக வைத்து, ஊற வைத்து உண்ணக் கூடிய உணவுப் பொருட்களை தீர்ப்பீர்கள்.
இப்போது வீட்டில் அரிசி, பருப்பு, காய்கறிகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. இனி என்ன செய்வீர்கள்? பசியின் வீரியம் தாளாது நீங்கள் வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியைக் கூட விட்டுவைக்காமல் எல்லா இடங்களையும் தேடுவீர்கள். கெட்டுபோன, சாப்பிட வகையில்லாத உணவாக இருந்தாலும், பழத்தோல்கள், நாட்பட்ட ரொட்டித் துண்டுகளாக இருந்தாலும் உண்டு விடுவீர்கள்.
இப்படியே சில நாட்கள் நீங்கள் அந்த பூட்டிய வீட்டிற்குள் இருந்தீர்கள் என்றால், உண்மையில் நீங்கள் வாயால் மெல்லக் கூடிய எதையும் பிய்த்துத் திண்ணத் தொடங்கி விடுவீர்கள்.
உணவு அளிக்கப்படாத உடல் உண்மையில் அப்படித்தான் செயல்படுகிறது. பரபரவென உடலானது தன்னுள்ளே என்னென்ன இருக்கின்றன என்று தேடுகிறது. முதலில் குடலில் இருக்கும் உணவுப் பொருட்களை காலி செய்கிறது. பிறகு இரத்தத்தில் இருக்கும் சேமிப்புப் பொருட்களை எடுத்துக் கொள்கிறது. தேவையற்ற கொழுப்பு, புரத சேமிப்புகள் கரைந்து எரிகின்றன.
மேலும் உணவின்றி ஆகும்போது, எலும்பு மஜ்ஜைகளில் உள்ள கொழுப்புச் செறிவுகள், நுரையீரலில் இருக்கும் சளி கோழைகள் எரிக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் பலவீனமான செல்கள், நோயுற்ற திசுக்கள் உடனடியாக அழிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகின்றன.
உடலின் ஆதார செயல்பாட்டுக்கே சக்தி தேவைப்படுவதால் உடல் போர்கால நடவடிக்கையில் இருப்பதுபோல பரபரப்பாக செயல்படுகிறது. உடலின் அனைத்து அடுக்குகளிலும் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்துவிதமான சத்து மற்றும் நோயெதிர்ப்புப் பொருட்களும் எரிக்கப்பட்டு சக்தியாக உருமாற்றப்படுகின்றன.
உண்ணா நோன்பும் தண்ணீரும்
இந்தகைய தேவையற்ற பொருள் எரிப்பில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. உண்ணா நோன்பு இருப்பவர்கள் தண்ணீரை தேவையான அளவு அருந்தவேண்டும். தண்ணீர் மட்டும் உடலின் உள்ளே வருவதால் அது இரத்தத்தில் கலந்து ரத்தத்தை இலகுவானதாக, நீர்மமாக மாற்றுகிறது. வழக்கத்தை விட அடர்த்தி குறைந்த இரத்தமானது உடலெங்கும் ஓடி, நுண்ணிய சிரைகளிலும் புகுந்து தேவையற்ற எதுவும் இருக்கின்றனவா என்று பார்க்கிறது.
இதயம் இலகுவாக இயங்குகிறது. நுரையீரலின் நுண்ணிய சிரைகளிலும் இரத்தம் தங்குதடையின்றி பாய்ந்து செல்வதால், நுரையீரல் புதுப்பிக்கப்படுகிறது.
உண்ணாநோன்பும் எனிமாவும்
எனிமா எனப்படும் ஆசனாவாய் வழியாக நீரைச் செலுத்தி சுத்தம் செய்யும் முறையில் குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுதல் அவசியமாகும். குடலில் இத்தகைய கழிவுகளை வைத்துக்கொண்டு உண்ணா நோன்பில் ஈடுபடுகையில் உடலானது அக்கழிவுகளில் கைவைத்து செரிக்கத் தொடங்கிவிடும். அது உண்மையில் அதி ஆபத்தாக முடியும். எனவே எனிமா எடுத்துக்கொள்ளுதல் உண்ணா நோன்பில் அவசியமாகும்.
உடல் உண்மையில் உணவின்றி பல நாட்கள் தாங்கக் கூடியது. அது சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் பல நாட்கள் அதற்குப் போதுமானது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தோர் எல்லாருமே இப்படி வயிற்றில் இருக்கும் கழிவுகளாலேயே விரைவில் உடல் பாதிக்கப்பட்டனர் என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
எனிமா வாயிலாக வயிற்றில் இறங்கும் தண்ணீர் குடலை முழுமையாக கழுவித் துடைக்கிறது. குடலின் அடுக்குகளில் காலகாலமாக தேங்கியிருந்த கசடுகள் நீக்கப்படுகின்றன. இது உடல் தேவையற்ற கழிவுகளை எரிப்பதை தடுக்கிறது. உண்ணா நோன்பின் நோக்கம் நிறைவேற உதவி புரிகிறது.
எத்தனை நாள் உண்ணா நோன்பு இருக்கலாம்?
புகழ் பெற்ற பிதாகரஸ் சமன்பாட்டை உருவாக்கிய கணித மேதை பிதாகரஸ் தனது மாணவர்களுடன் சேர்ந்து 40 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதை ஒவ்வொரு வருடமும் வழக்கமாக கொண்டிருந்தாராம். காந்தியடிகளின் உண்ணா நோன்பு வழக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. நமது பண்பாட்டில் அமாவசை, பிரதோஷ விரதங்கள் உண்ணா நோன்பின் மறுவடிவங்களே. முகம்மதியர்களின் ரம்ஜான் நோன்பு குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
நமது வாழ்க்கை சூழலுக்கு தகுந்தபடி, 3 முதல் 15 – 30 நாட்கள் வரை தண்ணீர் மட்டும் அருந்தி உண்ணா நோன்பு இருப்பது நலம் பயக்கும்.
உண்ணா நோன்பின் வியக்க வைக்கும் பலன்கள்
குடல் முழுவதுமாக ஓய்வெடுக்கும், அதில் இருக்கும் கழிவுகள் நீங்கும் மேலும் கிருமிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகும். இதனால் நாள்பட்ட உப்புசம், செரிமான பிரச்சனைகள், பசியின்மை போன்றவை மறையும்.
சுவாசம் சீராகும். சுவாசப் பாதையில் இருக்கும் தேவையற்ற சளிப் படலம் நீங்கும். தொலைவில் இருக்கும் வாசனைகளை தெளிவாக உணர இயலும். தும்மல், மூக்கில் நீர் வடிதல் சரியாகும்.
ரத்த ஓட்டம் சீராகும். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, இதய பலகீனம் குணமாகும். மூளைப் பிரச்சனைகள், எதிர்மறை எண்னங்கள் குணமாகும். தேவையற்ற நரம்பு முடிச்சுகள் நீங்கும். ரத்தத்தில் சேர்ந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு முதலானவை முற்றிலும் நீங்கும். இரத்தம் இலகுவாகும்.
உண்மையில் உடல் எடை ஓரளவிற்குத்தான் குறையும். 25 முதல் 40 நாட்கள் உண்ணா நோன்பிருந்தால் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது. அதற்கு குறைவான நாட்கள் உண்ணா நோன்பு இருக்கும்போது, உடல் எடை பெரிதாக குறைவதில்லை. உடல் தன்னைத் தானே சாப்பிடுகிறதே தவிர உண்மையில் அது பட்டினி கிடப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
உடலில் இருந்த இறந்த செல்கள் மற்று பலவீனமான நோயுற்ற செல்கள் – அவை எந்த உறுப்பில் இருந்தாலும் சரி – நீக்கப்படுகின்றன. எனவே உடல் மேலும் இளமையான தோற்றத்தையும் சக்தியையும் பெறும்.
மண் புழுக்களை வைத்து செய்யப்பட்ட பரிசோதனை
இரண்டு குடுவைகளில் இரண்டு மண்புழுக்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒரு குடுவையில் இருந்த மண்புழுவுக்கு தேவைக்கு அதிகமாகவே உணவு அளிக்கப்பட்டது. மற்றொரு குடுவையில் இருந்த மண் புழுவுக்கு குறைவான உணவு நாட்கணக்கில் இடைவெளி விட்டு அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதிகமான உணவு உண்ட மண்புழு இறக்க இறக்க அந்த குடுவடியில் புதிய மண்புழுவை மாற்றி வந்திருக்கின்றனர். அவ்வாறு பதினாறு தடவை மாற்றும் வரை இந்த குறைவாக உணவு உண்ட மண்புழு உயிரோடு இருந்ததாம்.
ஆகவே, அதிக உணவு என்பது அதிவேக மரணத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்கிறது என்பது விளங்கும்.
உண்ணா நோன்பின் விதிமுறைகள்
உண்மையில் உண்ணா நோன்பை தொடங்குவதற்கு முதல் நாளிலேயே உணவை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். கடைசி இரண்டு வேளைகள் நீர்ம உணவை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உண்ணா நோன்பு இருக்கையில் பெரும்பாலான நேரம் ஓய்வாகவும் மவுனமாகவும் இருக்க வேண்டும். பேசுதல், உரையாடுதல், விவாதித்தல் போன்றவை விரைவில் சக்தி இழப்பிற்கு வழிவகுக்கும். அலைச்சலும், பயணம் செய்தலும் இல்லாமல் இருக்க வேண்டும். ஒய்வு, முற்றிலுமான ஓய்வு அவசியம்.
கண்டிப்பாக எனிமா எடுத்துக்கொள்ள வேண்டும். யூட்யூப் தளத்தில் எண்ணற்ற காணொளிகள் எப்படி எனிமா எடுத்துக்கொள்வது என்று கிடைக்கின்றன.
உண்ணா நோன்பை முடிக்கும்போதும் படிப்படியாக நீர்ம உணவுப் பொருட்களை இரண்டு வேளைகள் எடுத்துக்கொண்டு பின்னரே திட உணவுக்கு வரவேண்டும்.
நோன்பை முடித்தவுடன் நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும். சிறிதளவு உணவே போதும் என்று தோன்றும். உண்ட உணவும் முற்றிலும் செரித்து, மலம் எந்த நிறமும் இன்றி சக்கை போல வெளிவரும்.
யாரெல்லாம் உண்ணா நோன்பு இருக்கக் கூடாது?
கர்பிணிப் பெண்கள் உண்ணா நோன்பு இருக்கக் கூடாது.
பெரும் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், மற்றும் நெடுநாட்கள் அலோபதி மருந்து உட்கொண்டவர்கள் உண்ணா நோன்பை தவிர்க்க வேண்டும். அவர்களது உடலில் இந்த நாட்பட்ட மருந்துகள் சேர்ந்து இருக்கும். நாம் உணவை மறுத்து இருக்கையில் உடலானது இந்த நெடுநாட்களாக சேர்ந்திருக்கும் மருந்தை எடுத்து எரிக்கத் தொடங்கும். திடீரென்று அத்தகைய இரசாயனப் பொருட்களை செரிப்பது உடலுக்கு நமையை விட தீமையையே தரும்.
முடிவுரை
மற்றபடி 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் உண்ணா நோன்பு சரியானதே. அவரவர் மனத்திட்பத்திற்கேற்ப 3 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை உண்ணா நோன்பு இருக்கலாம். “லங்கனம் பரம ஔஷதம்” என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். அதாவது, உண்ணா நோன்பே தலைசிறந்த மருத்துவம் என்பது பொருள்.
உண்மைதான், பல்லாயிரக்கணக்கான வருட அறிவைக் கொண்டிருக்கும் மனித உடலை தன்னைத் தானே சரிசெய்ய அனுமதிக்கும் உண்ணா நோன்பு தலை சிறந்த மருத்தவமன்றி வேரென்ன!?