கணவன் – மனைவி உறவில் விரிசல்… எப்படி தவிர்க்கலாம்?

செய்தி சுருக்கம்:
உறவுகளுக்குள் முரண்பாடு தவிர்க்க முடியாதது. காலங்காலமாக இருந்து வரும் பணம், பாலுறவு சார்ந்த பிரச்னைகளாக இருக்கட்டும், தற்போதைய நவீன காலத்திற்கேற்ற சமூக ஊடக பயன்பாடு மற்றும் ஓய்வு நேரத்தை செலவழிப்பது தொடர்பான பிரச்னைகளாக இருக்கட்டும் ஏதோ ஒருவிதத்தில் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. தம்பதியருக்குள் ஏற்படும் முரண்பாடுகளை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை இக்கட்டுரையில் பார்க்கலாம்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
தம்பதியருக்குள் ஏற்படும் கருத்துவேறுபாடுகளை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும். மனதுக்குள் நீறுபூத்த நெருப்பாக முரண்பாடுகளை வைத்துக்கொண்டிருந்தால் ஒருநாள் அது பூதாகரமாக வெடித்து உறவுக்கே உலை வைத்துவிடும். எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் அத்தனைபேரும் ஏதோ ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவே இருக்கின்றனர். பிரச்னை பெரிதாவதற்கு முன்பே அதற்குத் தீர்வு கண்டுவிடுவது முக்கியம்.
பின்னணி:
கணவன் – மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் ஏற்படவே செய்யும். பெரும்பாலும் அந்தச் சிறு கருத்துவேறுபாட்டிற்குப் பிறகு இருவருக்கும் ஒருவர்மேல் ஒருவர் இன்னும் கரிசனை கூடுவதற்கே வாய்ப்பு உண்டு.
‘அவள் என் மனைவி’ என்றும், ‘அவர் என் கணவர்’ என்றும் தம்பதியர் எண்ணினால் முரண்பாடுகள் பிரிவில் போய் முடியாது. மாறாக, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து இல்லறத்திற்கு இன்னும் இனிமை சேரும்.
கணவன் – மனைவியிடையே கருத்துவேறுபாடு தோன்றக்கூடியவையாக மூன்று விஷயங்களை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பணத்தால் ஏற்படும் பிரச்னை
தம்பதியரிடையே சண்டை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக பணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காலத்திற்கேற்ப இருவரும் வேலைக்குச் சென்று அல்லது தொழில் செய்து சம்பாதித்தாலும், குடும்பத்திற்கு போதுமான வருமானம் இருந்தாலும் அதுவே பிரச்னைக்கும் காரணமாகிப் போகும் ஆபத்து உள்ளது. குறிப்பாக ஒருவருடைய தனிப்பட்ட பலம், சுதந்திரம் இவற்றுக்கு அடையாளமாக விளங்கும் பணம், சண்டைக்கும் காரணமாக இருக்கிறது. தங்களுக்குள் முரண்பாடு கொள்ளும் தம்பதியருள் 19 சதவீதத்தினருக்கு பணம்தான் காரணமாக இருப்பதாக ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணத்தினால் எழும்பும் பிரச்னைகள் மீண்டும் மீண்டும் வருவதாக, தீர்க்கப்பட இயலாதவையாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தம்பதியர் தங்களுக்குள் பணத்தினால் பிரச்னை வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம். குடும்பத்தின் நலனுக்கான செலவுகள் மட்டுமே செய்யப்பட வழிசெய்யும் வகையில் இருவரும் சேர்ந்து வங்கி கணக்கை (ஜாயிண்ட் அக்கவுண்ட்) ஆரம்பிக்கலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆரம்பிக்க ஒப்புக்கொள்பவர், தன் துணைக்கு வரவு செலவு தெரிவதை மறைக்கும் எண்ணம் இல்லாதவராக இருப்பார். இருவரும் சேர்ந்து வங்கி கணக்கை கையாளும்போது, ஒருவருடைய தேவையை மற்றவர் புரிந்துகொள்ளவும், கூட்டாக இணைந்து குடும்பத்தின் இலக்குகளை சந்திக்கவும் முடியும். ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்துக்கொள்வது தம்பதியரிடையே ஒருமனதை கொடுக்கும். ‘என் பணம்’ ‘உன் பணம்’ என்பதற்கு இடமில்லாமல் ‘நம் பணம்’ என்ற எண்ணம் மேலோங்கும்.
திருமணத்திற்கு நிச்சயம் செய்திருப்போர் அல்லது திருமணமாகி பணத்தினால் பிரச்னைக்குள் சிக்கியிருப்போர் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஆரம்பிப்பது குறித்து தங்கள் துணையிடம் பேசி, ஒருமித்த கருத்து உண்டானால் சேர்ந்து வங்கி கணக்கை தொடங்கி குடும்பத்தின் வரவு செலவுகளை கையாளலாம்.
பாலுறவு சார்ந்த பிரச்னை
தம்பதியருக்குள் பாலியல் சார்ந்த அணுக்கம், காதல் உறவுக்கு இன்றியமையாதது. பாலியல் உறவு சார்ந்த கருத்துவேறுபாடுகள் பெரும்பாலும் அதிருப்திக்கு நேராக வழிநடத்தும்.
பாலியல் உறவில் இணை இருவரும் இசைந்திருக்கவேண்டும். பெண்ணை விரும்பும் ஆணாக இருப்பவர், பெரும்பாலும் பாரம்பரியமாக இருந்துவரும் நம்பிக்கைகளை கொண்டவராக இருப்பார். ஆண், ஆதிக்கம் செலுத்தும் இணை என்ற எண்ணத்தில் இருப்பவர், காலங்காலமாக இருந்துவரும் முறையில் பாலியல் உறவை கையாளுவார். மற்றொரு இணையான பெண்ணுக்கு அது இன்பம் தருவதற்கு பதிலாக விரும்பத்தக்கதல்லாத நடவடிக்கையாவதற்கு வாய்ப்புள்ளது.
தனி நபராகவே பாலுறவை அணுகாமல், இணையின் விருப்பத்தை புரிந்து அதற்கேற்ப உறவில் ஈடுபடுவது இருவருக்கே இன்பத்தை அளிக்கும்; இல்லறத்தை அர்த்தமுள்ளதாக்கும்.
வீட்டுவேலை சார்ந்த பிரச்னை
‘நான் மனுஷியா, மாடா?’ என்று கேள்வி கேட்குமளவுக்கு பெண்கள் சலித்துப்போவதை காண்கிறோம். அலுவலகத்தில் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, வீட்டிலும் வந்து வேலை செய்வது ஏதோ ஒரு கட்டத்தில் பெண்களை மனமுடைந்து போகச் செய்கிறது.
தம்பதியர், தங்களுக்கு வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது பிரச்னையை தவிர்க்கும். கணவனோ, மனைவியோ யாராவது ஒருவர் தலையில் மற்றவர் வீட்டு வேலைகளை கட்டிவிடக்கூடாது. தங்கள்மேல் சுமையை சுமத்திவிட்டு மற்றவர் பாரமின்றி இருக்கிறார் என்ற எண்ணம் தம்பதியர் ஒருவருக்கு எழுந்துவிட்டால் பிரச்னை வெடித்துவிடும்.
அலுவலக வேலை, வீட்டு வேலை என்று இரண்டையும் ஒருவரே செய்வது பாலியல் உறவு போன்ற ஏனைய செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாமற்போகும்படி செய்யும். ஆண், வீட்டுவேலைகளில் பங்குபெறும்போது, பாலியல் உறவு நன்றாக இருப்பதாகவும், ஆண் – பெண் இருவருக்குமே பாலுறவு திருப்திகரமாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாரம்பரியமாக வரும் பழக்கங்களை சற்றே மாற்றி, வீட்டு வேலையை டீம் வொர்க் என்னும் குழு வேலையாக கருதி வேலைகளை பகிர்ந்து செய்வது பிரச்னை உருவாகாமல் தடுப்பதோடு, இருவரும் இணைந்து வேலை செய்வதால் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் நேசிக்கவும் உதவும்.
எந்த உறவாக இருந்தாலும் முரண்பாடு இயல்பானதுதான். பிரச்னைக்கான அடிப்படை காரணங்களை புரிந்துகொள்வது, பிரச்னைக்கு தீர்வு காண உதவும். பிரச்னைகளை சரியானபடி கையாண்டால் தீர்வு கிடைப்பதோடு, தம்பதியருக்குள் ஒருமனம் உண்டாகி, இல்லறம் இனிக்கும்.