இனிப்பதெல்லாம் இனிப்பல்ல! செயற்கை இனிப்பூட்டிகள் புற்றுநோயை உண்டாக்கலாம் – ஆய்வு முடிவு!!

செய்தி சுருக்கம்:
WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு, செயற்கை இனிப்பூட்டிகளில் பயன்படுத்தப்படும் ‘அஸ்பார்டேம்’ என்ற பொருளை புற்றுநோயை விளைவிக்கும் ஒரு பொருளாக அறிவிக்க உள்ளது. அடுத்துவரும் வாரங்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரக்கூடும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
‘ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்கள் நம் ஊரில். சர்க்கரை கிடைக்கவில்லை என்றாலோ இல்லை சர்க்கரை உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றாலோ நாம் மீண்டும் இயற்கையாக கிடைக்கின்ற இனிப்பை நோக்கித்தான் நகர்ந்தாக வேண்டும். சர்க்கரை இல்லாத இனிப்பைக் கொடுங்கள் என்று இந்த கார்ப்பரேட்டுகளின் வாசலில் சென்று நின்றால் அவர்கள் இப்படித்தான் ஏதேனும் குப்பையை நம் தலையில் கட்டி இறுதியில் மருத்துவமனை படியேற வைப்பார்கள்.
உலகமயாக்கல் தொடங்கிய காலத்தில் இருந்து உணவுப் பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்யவும் அவை நீண்ட காலத்திற்கு கெடாமல் காக்கவும் தொழில் நுட்பத்தின் உதவியை உலகம் நாடத்தொடங்கியது. வேதியல் ரசாயன பொருட்களை உணவில் சேர்க்கத் தொடங்கியதுமே நாம் ஆரோக்கியம் என்ற நிலையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று விட்டோம்.
இப்பொழுதும் நாம் உண்ணும் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் கலந்துள்ள ரசாயனங்கள் என்னென்ன என்று தெரிந்துகொண்டு உண்பதில்லை. நெருக்கிப் பிடித்தபடி எழுதியிருக்கும் அந்த பொருட்களின் பெயர்கள் நமக்கு முன்னே பின்னே அறிமுகமும் இல்லை.
அப்படி நமது உணவுப் பொருட்களிலும் குளிர் பானங்களிலும் சேர்க்கப்படும் அஸ்பார்டேம் என்ற பொருள்தான் இப்போது பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது. டயட் கோலா முதல் சூயிங்கம்கள் வரை இந்த பொருள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. உலகெமெங்கும் இருக்கும் நுகர்வோருக்கு இந்த உண்மைகள் தெரியப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று இந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், எடையைக் கட்டுப்படுத்த சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவை டைப் 2 நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் முதியவர்களுக்கு இறப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
பின்னணி:
செயற்கை இனிப்புகள் என்பவை உண்மையில் என்ன?
செயற்கை இனிப்புகள், சர்க்கரை மாற்றீடுகள், ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன, அவை உணவு மற்றும் பானங்களை இனிமையாக்க சுக்ரோஸுக்கு (டேபிள் சர்க்கரை) பதிலாக இரசாயன ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பொருட்களாகும்.
சாக்கரின், அஸ்பார்டேம், அசெசல்பேம் பொட்டாசியம் (அசெசல்பேம்-கே, அல்லது ஏஸ்-கே), சுக்ரோலோஸ், நியோடேம் மற்றும் அட்வான்டேம் ஆகிய இந்த ஆறு பொருட்களும் செயற்கை இனிப்புப் பொருட்கள் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்துள்ளது.
உலக நிறுவனங்கள் அங்கீகரித்த பொருட்களால் ஆபத்து ஏற்படுமா?
ஆம். உலகலாவிய சர்வதேச தர நிர்ணய மற்றும் சுகாதார நிறுவனங்கள் ஏற்கும் அங்கீகரிக்கும் அத்தனை பொருட்களும் மக்களுக்கு ஆரோக்கியமானவை என்றோ ஆபத்து அற்றவை என்றோ நாம் கருத இயலாது. லாப நோக்கத்திற்காகவும் பெரு நிறுவனங்களின் வற்புறுத்தலுக்காகவும் இவை வளைந்து கொடுக்கக் கூடியவை.
இயற்கை அல்லாத எந்த பொருளும் உடலுக்கு பாதிப்பு அளிப்பவைதான். அதில் மாற்று கருத்தே இல்லை. இன்று பரவலாக அங்கீகரிக்கப்படும் ஒரு பொருள் தொழில்நுட்பம் வளர வளர பின்னாளில் நோயை உண்டாக்கும் காரணியாக கண்டறியப்படுவது வரலாற்றில் நாம் எப்போதும் காணும் ஒன்று.
சுவிட்சர்லாந்தில் அங்கு தயாரிக்கப்படும் வாட்சுகளில் ரேடியம் பூச்சை பூசுவதற்கு அமர்த்தப்பட்ட பெண்கள் தங்கள் வாயினால் ரேடியத்தை பூசும் தூரிகையை கூர்மையாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டபோது அது கதிர் வீசும் பொருள் என்று அறியப்படவில்லை. ரேடியம் பூசுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெண்கள் பின்னாளில் கடுமையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னரே ரேடியம் என்பது மிக மோசமான ஒரு தனிமம் என்பதை உலகம் கண்டுணர்ந்தது.
எனவே இயற்கையில் கிடைக்காத நம் முன்னோர்களால் பரிந்துரைக்கப்படாத எந்த ஒரு பொருளும் ஆபத்து நிறைந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எந்த ஒரு ரசாயன பொருளையும் முழுமையாக ஆராய்ந்த நிறுவனம் இன்று வரை உலகில் இல்லை என்பதை உணருங்கள்.