Arthritis Tamil Meaning (ஆர்த்ரிடிஸ் தமிழ் பொருள் அர்த்தம்)

வயதானவர்களுக்கிடையில் ஆர்த்ரிடிஸ் என்ற சொல் பரவலாகக் கேட்கப்படுகிறது. ‘எனக்கு ஆத்ரிடிஸ் கம்ப்ளைன்ட் இருக்கு’ என்றும், ‘ஆர்த்ரிடிஸுக்கு டிரீட்மென்ட் எடுத்துகிட்டிருக்கேன்’ என்றும் பலர் சொல்லக் கேட்கிறோம். உண்மையில் ஆர்த்ரிடிஸ் என்றால் என்ன? அதற்குத் தமிழில் என்ன மீனிங் என்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
ஆர்த்ரிடிஸைத் தமிழில் மூட்டழற்சி என்று அழைக்கிறார்கள். இதைப் பொதுவாக மூட்டுவலி என்று சொல்வதும் உண்டு. இந்தச் சொற்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், மூட்டு என்றால் என்ன என்று முதலில் கற்கவேண்டும்.
மூட்டு என்பது இரண்டு எலும்புகள் இணையும் இடத்தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, நம்முடைய கை விரல்களைக் கூர்ந்து கவனித்தால் அங்கு பல இணைப்புகள் இருப்பதைக் காணலாம். இந்த இணைப்புகள் உள்ள இடங்களில்தான் கை வளைகிறது, அதன்மூலம் நம்மால் பல விஷயங்களைச் செய்ய இயலுகிறது. இதுபோல் உடலில் பல மூட்டுகள் உள்ளன. ஆங்கிலத்தில் இவற்றை ஜாயின்ட்ஸ் என்று அழைப்பார்கள்.
மூட்டுவலி என்பது என்ன?
மூட்டுகளில் ஏற்படுகிற பாதிப்பைத்தான் மூட்டுவலி என்கிறோம். மூட்டு உள்ள இடம் இறுகிப்போனதுபோன்ற உணர்வும் வலியும் உண்டாதல், சிவந்துபோதல், வெம்மையான உணர்வு, வீங்கியிருத்தல், மூட்டை நன்கு அங்குமிங்கும் அசைக்க இயலாமலிருத்தல் போன்றவற்றை மூட்டுவலியின் அறிகுறிகளாகச் சொல்லலாம்.
இதனால் ஒருவர் தன்னுடைய அன்றாட வேலைகளை இயல்பாகச் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஆர்த்ரிடிஸ் வந்தவர்கள் பெரும் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். இதை விரைவில் குணப்படுத்திக்கொள்ளவேண்டும், பிறரைச் சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
ஆர்த்ரிடிஸ்எப்படிவருகிறது?
சில பிரச்சனைகள் திடீரென்று ஒருநாள் வரும். வேறு சில பிரச்சனைகள் படிப்படியாக மிகுதியாகிப் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். ஆர்த்ரிடிஸைப் பொறுத்தவரை இந்த இரண்டும் வழக்கத்தில் காணப்படுகின்றன. ‘மூட்டு நல்லாதான் இருந்தது, சடனா பெயின் வந்துடுச்சு’ என்று சிலர் சொல்வார்கள், ‘கொஞ்ச நாளா பெயின் இருந்துச்சு, ஆனா இப்ப பொறுக்கமுடியாத அளவு ஆகிடுச்சு’ என்றும் சிலர் சொல்வார்கள்.
ஆர்த்ரிடிஸுக்குப் பல காரணங்கள் இருப்பினும், வயது முதன்மைக் காரணமாக அமைகிறது. அதாவது, முதியவர்களிடையில் இந்தப் பிரச்சனை கூடுதலாகக் காணப்படுகிறது. விரல்கள், முழங்கால்கள், இடுப்பு ஆகியவற்றை இது கூடுதலாகப் பாதிக்கிறது.
ஆர்த்ரிடிஸ்வகைகள்
நூறுக்கும் மேற்பட்ட ஆர்த்ரிடிஸ் வகைகள் உள்ளன. இவற்றில் மிகப் பொதுவானவை, ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், ரியுமாடாய்ட்ஆர்த்ரிடிஸ் ஆகியவை. ஒருவருக்கு வந்திருப்பது எந்த ஆர்த்ரிடிஸ் என்பதை வல்லுனர்கள் ஆராய்ந்து சொல்வார்கள்.
ஆர்த்ரிடிஸ்சிகிச்சை
ஆர்த்ரிடிஸில் பல வகைகள் இருப்பதால் சிகிச்சையும் பலவிதமாக வேறுபடுகிறது. இதனால், இதுக்கு இந்த மாத்திரைதான் என்று நாமாகச் சிகிச்சை எடுப்பது சரியில்லை. உரிய மருத்துவரைச் சந்தித்துப் பரிசோதனைகள் செய்துகொண்டு அவர்கள் தரும் முறைகளைப் பின்பற்றுவதுதான் விரைவில் குணமாக உதவும்.
பொதுவாக, எங்கு மூட்டுவலி வந்துள்ளதோ அந்த இடத்துக்கு ஓய்வு கொடுப்பது ஒரு நல்ல சிகிச்சையாகும். தேவைப்பட்டால் அங்கு ஒத்தடம் கொடுக்கலாம். உடல் எடையைக் குறைத்தால் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது, இதன்மூலமும் ஆர்த்ரிடிஸைக் கட்டுப்படுத்தலாம். இவற்றுடன், ஆர்த்ரிடிஸுக்கென்று சில மருந்துகளும் இருக்கின்றன. இவை பெரும்பாலும் வலியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கின்றன. சில தீவிரச் சூழ்நிலைகளில் ஆர்த்ரிடீஸுக்கு அறுவைச்சிகிச்சை தேவைப்படலாம்.
பரிவும்ஒருசிகிச்சைதான்
ஆர்த்ரிடீஸ் தரும் உடல் சார்ந்த வலிகளுடன் உள்ளத்தளவிலும் அவர்கள் சோர்ந்திருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் அவர்களிடம் பரிவோடு பேசினால், நம்பிக்கை கொடுத்தால் மிகவும் இதமாக உணர்வார்கள். நாம் அவர்களுக்கு வழங்கவேண்டிய முக்கியமான ஆதரவு இது.