fbpx
LOADING

Type to search

இந்தியா இலங்கை உடல் நலம் உலகம் வர்த்தகம்

இந்தியாவிற்கு வெளியே ‘கறி’ பற்றிய பழைமையான ஆதாரங்கள்: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து இந்தோனேஷியா வரையில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதிகள் அவற்றின் இயற்கை வளம், செல்வச் செழிப்பு மற்றும் பலவிதமான சுவையான உணவுகளுக்குப் பெயர் போனவையாக இருந்திருக்கின்றன. வெவ்வேறு நாகரிகங்களை இணைத்து வெவ்வேறு காலகட்டங்களில் சமையல் மரபுகளை ஊக்குவிக்கும் கலாச்சாரங்களாகவே இப்பகுதிகள் செயல்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளிலுள்ள உணவுகளில் ஒரே மாதிரியான அல்லது ஒன்றுக்கொன்று தொடர்புடைய கறிகள் இடம் பெற்றுள்ளன என்பதைச் சமீபத்திய புதிய ஆய்வு ஒன்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

‘கறி’ என்பது மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் உணவு. பொதுவாக இது அரிசியோடு உண்ணப்படுவது.  இவை பொதுவாகக் காரமாகவும் அடர்த்தியாகவும் இருக்கும். மீன் மற்றும் இறைச்சி ஆகியவை சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படும் கறி மச்சக்கறி எனப்படும். வெறும் மசாலாவுடனோ காய்கறிகளுடனோ தயாரிக்கப்படும் கறி மரக்கறி எனப்படுகிறது. இந்தியாவே இந்தக் கறியின் தாயகம் என அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியங்களில் கறி என்னும் சொல் மிளகைக் குறிப்பதாகவே உள்ளது. ஆனால் தற்போது சோறுடன் சேர்த்து உண்ணப்படும் குழம்பு, பருப்பு, கீரை, மீன்கறி, கோழிக்கறி போன்ற பக்க உணவுகளைக் குறிக்கிறது. வதக்கல், பொரியல், புளிக்கறி, உசிலி, மசியல், பிரட்டல் எனக் கறிகளில் பலவகை உண்டு. இந்தியாவின் அனைத்து வகை உணவையும் குறிக்க மேற்கத்தியர்கள் கறி என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் கறி என்ற வார்த்தை ஆங்கிலேயர்களால் சாஸ் அல்லது கிரேவியுடன் அமைந்த இந்திய உணவுகளை விவரிக்கவே உருவாக்கப்பட்டது. கறி என்ற சொல் கராஷி என்ற வார்த்தையிலிருந்து வந்தது எனவும் சிலர் கூறுகிறார்கள். வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், கடுகு, மிளகு, மஞ்சள் உட்பட பல மசாலாப் பொருட்களுடன் சுவையூட்டப் படுகின்றன.

 பல இந்திய உணவுகள் இந்தக் கறியின் அடிப்படையிலானவை. இந்தியாவிலிருந்து ஆசியா முழுவதும் இந்தக் கறி பரவியது. இந்தியத் துணைக்கண்டத்தின் வெளியே இக்கறி என்பது தென்கிழக்கு ஆசியாவில் பிரசித்தி பெற்றது. பழங்காலத்திலிருந்தே தெற்காசிய சமையலில் காரமான கறி வகைகள் இடம்பிடித்துள்ளன. சீன மளிகைக் கடைகளில் விற்கப்படும் கறித்தூள் மெட்ராஸ் கறிப் பொடியைப் போன்றது என்கிறார்கள். இந்தோனேசிய மொழியில் இது ‘காரி’ என்றும் ஜாவானீஸ் மொழியில் ‘கரே’ என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியக் கறிகள் மஞ்சள், தேங்காய்ப் பால், வெங்காயம், இஞ்சி பேஸ்ட், மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. 1550ல் ஷிகாயத் அமீர் ஹம்சா அவர்களால் மலாய் இலக்கியத்தில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பர்மியக் கறிகளில் மஞ்சள், மிளகு, கரம் மசாலா போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் கறி என்பது கரே எனப்படுகிறது. அங்கே கறி, சோறு மற்றும் காய்கறிகள் அனைத்தும் ஒரே தட்டில் பரிமாறப்பட்டு உண்ணப்படுகிறது. தாய்லாந்து சமையலில் கறிகள் கேஸ் என்று அழைக்கப்படுகின்றன. மிளகாய், வெங்காயம், பூண்டு மற்றும் இறால் பேஸ்ட் ஆகியவை இந்த உணவில் சேர்க்கப்படுகின்றன. தெற்குத் தாய்லாந்தில் கறிகளில் தேங்காய்ப்பால் சேர்க்கப்படுகின்றது.

இந்நிலையில் வெண்கலக் காலத்திலிருந்தே மசாலாப் பொருள்களின் முக்கிய ஸ்தலமாக பண்டைய தெற்காசியா இருந்துள்ளது எனவும்  மஞ்சள், இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருள்கள் தெற்காசியாவிலிருந்து மத்தியத் தரைக்கடல் பகுதிகளுக்குக் கிமு இரண்டாம் நூற்றாண்டில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும் சான்றுகள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே உலகளாவிய வர்த்தகப் பரிவர்த்தனைகளில் மசாலாப் பொருட்கள் மிகவும் மதிப்பு மிக்க பொருட்களாகப் பரிமாறப்பட்டிருக்கின்றன எனவும் ‘கறி’ என்னும் உணவு இந்தியாவுக்கு வெளியேயும் பரவலான ஈர்ப்பைக் கொண்டிருந்தது எனவும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இன்றும் வியட்நாமில் பயன்படுத்தப்படும் கறி செயல்முறையானது பண்டைய காலத்துக் கறிமுறையை ஒத்துள்ளது எனவும் மஞ்சள், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் தேங்காய்ப் பால் போன்ற முக்கியப் பொருட்கள் இந்த வகைக் கறியில் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. தெற்கு வியட்நாமில் அமைந்துள்ள தொல்பொருள் தளத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கும் முந்தைய மசாலாப் பொருள்களின் ஆதாரங்களைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்கள். இவற்றைப் பகுப்பாய்வு செய்த போது இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இலவங்கப்பட்டை மற்றும் கிழக்கு இந்தோனேசியாவின் தொலைதூர பண்டா தீவுகளில் இருந்து வந்த ஜாதிக்காய் ஆகியவை தொல்பொருள் அகழ்வாய்வில் கிடைத்த பன்னிரண்டு  வகையான கல்லாலான அரைக்கும் கருவிகளில் கிடைத்த நுண்ணிய துகள்களில் இருந்தன என்று அவர்கள் கூறுகின்றார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பெருங்கடல் வழியாக தெற்காசியாவில் குடியேறியவர்கள் அல்லது சுற்றுப் பயணம் மேற்கொண்டவர்கள் இந்தச் சமையல் பாரம்பரியத்தைத் தென்கிழக்கு ஆசியாவிற்கும் அறிமுகப்படுத்தி இருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய பதிவுகள் :

தமிழால் தலை நிமிர்வோம்! தமிழில் கையோப்பமிடுவோம்!
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சீனாவின் பிஒய்டி மின்சார வாகனத் தொழிற்சாலை முன்மொழிவை நிராகர...
26 ரஃபேல் ஜெட் விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை பிரான்சிடமிருந்து வாங்க போகும் இந்திய...
அமேசான் மழைக்காடுகளில் எண்ணெய் எடுக்க நிரந்தர தடை - இயற்கையை மதித்து வாக்களித்த ஈக்வடார் நாட்டு மக்க...
அமெரிக்கப் பொருட்கள் மீதான இந்தியாவின் பதிலடி சுங்க வரிகள் நீக்கப்படுவதன் பின்னணி என்ன?
இந்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை, இதனால் உலக சந்தையில் உண்டாகப்போகும் பாதிப்புகள் - எல் நினோ ஏற்பட...
தாராவி குடிசை மாற்றுத் திட்டம்: எதிர்ப்புகளை மீறி ஏலத்தைக் கைப்பற்றியது அதானி குழுமம்! பலனடையப் போவத...
அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை தடுக்க இந்திய தூதரகங்கள் முன்பு போலீசார் குவிப்பு -...
செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து காண்பித்து புது சாதனையை படைத்த நாசா.
வழுக்கை விழுந்த ஆண்கள் ஆண்மை மிக்கவர்களா? - அமெரிக்க மருத்துவர் முடி உதிர்தலுக்கும் செக்ஸ் ஆசைக்கும்...
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *