Anxiety Meaning in Tamil

English: anxiety
Tamil: மனப்பதற்றம், பதற்றம், பதட்டம் (பேச்சுவழக்கு), எதிர்காலம் பற்றிய அச்சம்/கவலை
Explanation:
பதற்றம் என்பது எதிர்மறையானதை எதிர்பார்க்கும் மனநிலை/உடல்நிலை. மனரீதியாக, பதற்றம் என்பது அதிகரித்த விழிப்புணர்வாலும் பயத்தாலும் உருவாகும் கவலையில் நேரும் சித்திரவதை எனக் கூறப்படுகிறது. உடல்ரீதியாக, பதற்றம் என்பது உடல் மண்டலங்களின் இதமற்ற செயல்பாடுகள் (படபடக்கும் இதயம் போன்றவை) மூலம் விவரிக்கப்படுகிறது. உண்மையானதா அல்லது கற்பனையானதா என்று தெரியாத ஒரு ஆபத்துக்கு நமது மனமோ உடலோ எதிர்ச்செயல் புரிவதால் இந்த செயல்பாடுகள் நேர்கின்றன.
மோசமான விளைவுகளை எதிர்பார்த்துப் பதற்றமடையும்போது மனதில் ஏற்படும் திகில் மற்றும் உடலில் ஏற்படும் நடுக்கம், படபடக்கும் இதயம் போன்றவை நம்மை அசௌகரியப்படுத்தவே ஏற்படுகின்றன. இவற்றின் மூலம் பதற்றம் நம் கவனத்தை ஈர்த்து நமக்கு முக்கியமான ஒன்றைப் பாதுகாக்கத் தேவையான செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டுகிறது. பதற்றம் நம்மை விழிப்புடனும் உயிருடனும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் எப்போதாவது பதற்றம் நேர்வது இயற்கையானது மட்டுமன்றி நலம் பயக்கக்கூடியதும்தான்.
ஆனால் இடைவிடாத அல்லது அதிகப்படியான பதற்றம் நமது அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கக்கூடும். அது பதற்றக் கோளாறின் அடையாளமாக இருக்கலாம். எதிர்காலத்தைக் கற்பனை செய்யும் திறனைக் கொண்டிருப்பதற்கு மனிதர்களாகிய நாம் செலுத்தும் விலையாகப் பதற்றத்தைக் கருதலாம்.
Examples:
- என் தங்கையைக் கோயிலில் காணவில்லையென்று அறிந்ததும் என் அம்மாவின் பதற்றம் உச்சத்தை அடைந்தது. (My mother’s anxiety reached a peak when she found my sister missing in the temple.)
- அளவுக்கு மீறிய பாதுகாப்பு போன்ற குழந்தைப்பருவ அனுபவங்கள் பதற்றத்திற்குப் பங்களிக்கக்கூடும். (Childhood experiences such as overprotection can contribute to anxiety.)
- பதற்றத்தை முழுவதுமாக நீக்க முடியாது என மனநல மருத்துவர் ஷீலாவிடம் கூறினார். (The psychiatrist told Sheila that anxiety cannot be eliminated entirely.)
- செல்லப்பிராணிகளுக்குப் பதற்றம் உண்டானால் அவை நாசம் செய்பவையாகவோ விரோதமானவையாகவோ மாறக்கூடும். (Pets might become destructive or hostile when anxiety strikes them.)
- ஒரு பதற்றத் தாக்குதலின் போது உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது உங்களை அமைதியாக உணர வைக்கும். (Letting your family know how they can help you during an anxiety attack will make you feel calmer.)
- 333 விதிமுறை பதற்றத்தை சமாளிப்பதற்கான ஒரு இயல்பான நுட்பமாகும். (The 333 rule is an informal technique for coping with anxiety.)
- பதற்றத்தைத் தோற்றுவிக்கும் காரணி, அதற்கு எதிர்ச்செயல் ஆகிய இரண்டாகவும் மன அழுத்தம் இருக்கக் கூடும். (Stress can be both a setting-off factor of anxiety as well as a response to it.)
- என் நாட்குறிப்பை எழுதுவது எனது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவியது. (Writing my diary helped reduce my stress and anxiety.)
- கோவிட்-19-க்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பும்போது நீல் பதற்றமாக உணர்ந்தான். (Neil experienced anxiety while returning to school after COVID-19.)
- கணினிப் பதற்றம் என்பது கணினிகளைப் பயன்படுத்தும்போது அல்லது கணினிகளைப் பயன்படுத்துவது பற்றி சிந்திக்கும் போது தனிநபர்கள் உணரும் அச்சம், ஐயமுற்று அஞ்சுதல், அல்லது மிகையச்சம் என வரையறுக்கப்படுகிறது. (Computer anxiety is defined as the fear, apprehension, or phobia that individuals feel when using computers or thinking about using them.)
- மனிதன் உண்மையான பிரச்சினைகளைப் பற்றிய தனது கற்பனையான பதற்றங்களைப் பற்றிக் கவலைப்படுவது போல உண்மையான பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. (Man is not worried by real problems so much as by his imagined anxieties about real problems.)
- இதுக்கெல்லாம் பதட்டப்படாதீங்க. (Don’t get anxious on account of all these.)
- அடுத்த சில ஆண்டுகளில் நமது சமூகத்தில் வேலையின்மையால் ஏற்படப்போகும் விளைவுகள் குறித்துக் கவலை நிலவுகிறது. (Anxiety prevails over the effects of unemployment on our society in the next few years.)