குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்

குடிப்பழக்கத்தால் ஆண்களை விட பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மது அருந்துவதால் உயிர் இழப்பதில் பெண்களை விட ஆண்கள் மூன்று மடங்கு அதிகம் என்றாலும் பெண்களின் இறப்பு விகிதம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்றும் 2018 லிருந்து 2020 க்கு இடையில் ஆல்கஹால் தொடர்பான உயிரிழப்புகள் ஆண்களிடையே 12.5 சதவீதமும் பெண்களிடையே 15 சதவீதமும் அதிகரித்துள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வை நிகழ்த்திய நியூயார்க்கிலுள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை சுகாதார உதவிப் பேராசிரியரும் முன்னணி ஆராய்ச்சியாளருமான டாக்டர் இப்ராஹிம் கராயே, “உண்மையில் இது மிகவும் கவலைக்குரியது”, என்று தெரிவித்துள்ளார். அவர் இந்த ஆய்வுக்காகத் தன் நண்பர்களுடன் 1999 இல் இருந்து 2020 க்கு இடையில் சுமார் ஆறு லட்சத்து ஆறாயிரம் மது அருந்தி இறந்தவர்களின் பதிவுகளைச் சேகரித்தார். இதன்மூலம் குடிப்பழக்கத்தால் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்பதையும் அவர்களுடைய உடல் பருமன், தொற்று நோய் ஆகியவை அவர்களுடைய மரணத்தோடு தொடர்பு கொண்டிருந்ததையும் கண்டறிந்துள்ளார். மேலும் ஓப்பியாய்டு பயன்பாடும் பெண்களின் மரணத்தோடு தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
குடி குடியைக் கெடுக்கும் எனத் தெரிந்தும் அந்தக் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் ஏராளம். மது அருந்தும் ஆண்களின் குடும்பத்திலிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் துயரங்களே சொல்லி மாளாது என்னும்போது தற்போது பெண்களும் அல்லவா இந்தக் கொடிய பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார்கள்! குடும்பத்தின் விளக்கு எனப்படும் ஒரு பெண் ‘குடி’ என்னும் கொடிய பழக்கத்தால் தன்னையும் அழித்துக் கொண்டு குடும்பத்தையும் உருக்குலைப்பது சமூகத்தின் பெரும் சாபக்கேடு.
சமீபத்தில் கோயம்புத்தூரிலும் தஞ்சாவூரிலும் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் மது அருந்திவிட்டு சாலையில் போவோர் வருவோரிடம் கலாட்டா செய்த வீடியோ காட்சிகள் வெளியானதைக் கண்டு மனம் மிகுந்த வேதனையடைந்தது. சென்னையில் உள்ள பிரபலமான ஒரு மகளிர் கல்லூரியில் கேரள மாணவிகள் குடி போதையில் தள்ளாடும் வீடியோ காட்சியும் மனத்தை அதிர்ச்சி அடையச்செய்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பெண்களே நேரில் வந்து மது வாங்கிச் செல்லும் கொடுமையும் நடந்திருக்கிறது. தேனி அருகே ஒரு விவசாயி தனது மனைவி தினமும் குடிப்பதாகவும் குடிக்காமல் தூங்குவதில்லை என்றும் இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டதாகவும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை இந்தக் குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டுத் தருமாறும் தேனி போலீஸ் எஸ்பியிடம் மனு கொடுத்துள்ளாராம். இவற்றையெல்லாம் எங்கே போய் சொல்வது?
இவையெல்லாம் ஒரு சில சம்பவங்கள்தான். நாட்டில் இதுபோல பல ஆயிரம் சம்பவங்கள் தினம் தோறும் நடந்த வண்ணம் இருக்கின்றன. மது குடிப்பதற்கான காரணமென்ன என்று பார்த்தால் மன அழுத்தத்தையும் கவலையையும் மறக்கவே நாங்கள் குடிக்கிறோம் என்று ஆண்கள் சொல்லும் அதே காரணத்தைத்தான் பெண்களும் கூறுகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் பெண்களைக் குடிகாரர்களாக மாற்றுவதில் ஸ்டார் ஹோட்டல் பார்களும், பப்களும், பார்ட்டிகளும்தான் பெரும்பங்கு வகிக்கின்றன. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குடிக்கும் பழக்கமும் அடித்தட்டு மக்களிடமிருந்து உயர்மட்ட மக்கள் வரையிலும் பரவிக் கிடக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ‘உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே’ எனக் கடந்து செல்ல முடியவில்லை. மனம் மிக வலிக்கத்தான் செய்கிறது.
பெண்களிடம் பரவிவரும் இந்தக் குடிப்பழக்கம் அவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆண்களை விட அதிகமாகப் பாதிக்கும். இதற்கு அவர்களின் உடல் அமைப்பே காரணம். ஒரே வயது மற்றும் ஒரே எடையுடைய ஆணும் பெண்ணும் மது அருந்தும்போது ஆணை விட அந்தப் பெண்ணுக்கு அதிகப் போதை ஏற்படும் என்று கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையாகும் பெண்களில் ஐடி, சினிமா மற்றும் விளம்பர மாடலிங் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகம். சோசியல் ட்ரிங்கிங் எனத் தொடங்கும் அவர்கள் நாளடைவில் அந்தப் போதைக்கு அடிமையாகிப் பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள். குடிப்பதில் தவறில்லை என்னும் தவறான எண்ணம் அவர்களிடம் உள்ளது. மது அருந்தும் பெண்களுக்கு மூளை, இதய பாதிப்பு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
போதைப்பொருளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கூட்டு நிறுவனத்தில் தடுப்பு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான மூத்த துணைத் தலைவராக இருக்கும் லிண்டா ரிக்டர் என்ன கூறுகின்றார் தெரியுமா? “நமது சமூகத்தில் ஆல்கஹாலின் பயன்பாடு ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால் அதன் அபாயத்தை யாரும் உணரவில்லை. மது குடிக்கும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்று கூறும் இந்த புதிய ஆய்வு உண்மையாகவே வருத்தமளிக்கிறது. ஆல்கஹாலின் விளைவுகளில் உடலியல் பாலின வேறுபாடுகள் காரணமாக ஆண்களை விட பெண்கள் அதிகமாகவும் தீவிரமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவையும் பெண்களின் அதிகப்படியான குடிப்பழக்கத்துக்கான ஆபத்தான காரணிகளாக உள்ளன. பெண்டானில் போன்ற ஓப்பியாய்டுகளில் அதிகக் கவனம் செலுத்தப்படுவதால் இப்படிப்பட்ட மரணங்கள் அதிகரிக்கின்றன. இது மற்ற மருந்துகளை விட ஆண்டுதோறும் அதிக இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த ஆபத்துக்கள் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. இதற்கான பொது விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். முன்கூட்டியே தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்”, என்கிறார் அவர்.