புற்றுநோயிலிருந்து தப்பிப் பிழைத்தாலும் தொடர்ந்து மது அருந்தினால் உயிர் தப்ப முடியாது! ஆய்வாளர்களின் எச்சரிக்கை!

மனிதகுலத்தைத் தாக்கும் கொடிய நோய்களில் இதய நோய்களுக்கு அடுத்தபடியாக புற்றுநோய்களே இருக்கின்றன. உலகில் ஏற்படும் மரணங்களில் ஆறில் ஒன்றுக்குப் புற்றுநோயே காரணமாக அமைகிறது என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் பதினைந்து பேரில் ஒருவருக்கு புற்றுநோய் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதும் அவர்களில் ஒருவருக்கு அது முற்றிய நிலையில் இருப்பதும் கண்டறியப்படுவதால் இருவரில் ஒருவர் இறந்து விடுகிறார் என்று கூறப்படுவது இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் மக்களிடையே அதிக அளவில் இருக்கிறது. புகையிலைப் பயன்பாட்டினால் 68 இந்திய ஆண்களில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும் அறிய முடிகிறது. இனம், வயது, பாலின வேறுபாடு இன்றி புகையிலைப் பழக்கத்துக்கும் மதுப்பழக்கத்துக்கும் அடிமையாகிப் புற்றுநோய்க்கு ஆளாகிறவர்கள் இன்று பெருகிவிட்டார்கள்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை எடுப்பவர்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகமாக உள்ளதாகவும் இது அவர்களுக்கு மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஜாமா நெட்வொர்க் ஓபன் என்னும் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இது பற்றிய விழிப்புணர்வை உடனடியாக அவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறு செய்தால் மட்டுமே அவர்களது வாழ்நாளைக் கூட்ட இயலும் என்றும் கூறுகிறார்கள் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள்.
ஆல்கஹால் பயன்பாட்டால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களுக்கும் புற்றுநோய் சிகிச்சையில் இருபவர்களுக்கும் ஏற்படும் தாக்கம் குறித்து அறிய நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் ஆல்கஹால் பயன்பாடானது புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் உள்ளவர்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சையின் போதும் அதற்குப் பின்னும் இரத்த ஓட்டம் இல்லாமை மற்றும் எலும்புத் திசுக்களின் மரணம் ஆகியவை நிகழும் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரும் செயின்ட் லூயிஸ், மிசோரியிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் மெடிசின் அறுவை சிகிச்சைத் துறையின் இணைப் பேராசிரியருமான காவ் கூறுகையில், மது அருந்துதல் கீமோதெரபிக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளின் அறிவாற்றலைப் பெரிதும் பாதிக்கிறது என்றும் கார்டியோடாக்சிசிட்டியை அதாவது புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பின்னர் இதயம் பாதிக்கப்படுவதை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மது அருந்தினால் அவர்களுக்கு மூளையில் கட்டிகள் வரலாம் என்றும் இன்னும் சொல்லப்போனால் ஏன் மரணத்தைக் கூட அது கொண்டு வரலாம் என்கிறார் அவர். ஆல்கஹால் பயன்பாட்டால் வரக்கூடிய இத்தகைய மோசமான விளைவுகளையும் ஆபத்துகளையும் நோயாளிகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களைக் காப்பது மிக மிக முக்கியம் என்கிறார். மருத்துவர்கள் மட்டுமல்லாது புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், சிகிச்சை செய்பவர்கள் மற்றும் ஆலோசகர்கள் என நோயாளிகளைச் சுற்றியிருக்கும் யாவரும் இந்த அபாயங்களைப் புற்றுநோயாளிகள் மற்றும் புற்றுநோயிலிருந்து உயிர் பிழைத்தவர்களுக்கு உடனடியாக உணர்த்த வேண்டும் என்கிறார்.
புற்றுநோயாளிகளிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 15,199 பேர் பங்கேற்றார்கள். இவர்களுடைய சராசரி வயது 63.1 ஆண்டுகள் என்று கூறப்படுகிறது அவர்களில் 9,508 பேர் பெண்கள் மற்றும் 11,633 பேர் புற்றுநோயிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவர்கள். குடிகாரர்கள் தொடர்பானத் தரவுகளை இரண்டு வகைகளாக இந்த ஆய்வின் ஆசிரியர்கள் பிரித்திருக்கிறார்கள். அதாவது மிதமான குடிப்பழக்கம் உடையவர்கள் மற்றும் அபாயகரமான குடிப்பழக்கம் உடையவர்கள் என்று பிரித்திருக்கிறார்கள். இதில் ஆயிரத்து ஐநூற்று நாற்பத்தொரு பங்கேற்பாளர்கள் மிதமான குடிப்பழக்கத்தைக் கொண்டவர்கள் மற்றும் நான்காயிரத்து ஐநூற்றி இருபத்தி ஏழு பேர் அபாயகரமான குடிப்பழக்கத்தைக் கொண்டவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் மிதமான வரம்புகளுக்கு மேல் மது அருந்தும் பங்கேற்பாளர்களில் 65 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள் தங்களது 18 வயதுக்கு முன்பாகவே புகைப்பிடித்தல் காரணமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அபாயகரமான குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்த பங்கேற்பாளர்களில் 18 வயதுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 65 வயதுக்குப் பின்னால் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகமான மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள். புகைப்பிடித்தலுக்கும் ஆல்கஹால் பயன்படுத்துவதற்கும் தொடர்பு இருந்ததாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பாலினம், இனம், வயது உள்ளிட்ட உடல் பண்புக் கூறுகள் அனைத்தும் மது அருந்துதல் தொடர்பான ஆபத்தான நடத்தைகளில் ஈடுபடுவதில் பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் இந்த ஆய்வின் ஆசிரியர்கள். பாலினத்தைப் பொறுத்தவரை பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்கள் மிதமான வரம்புகளுக்கு மேல் மது அருந்துவதும் அதிகப்படியான குடிப்பழக்கத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது. இனத்தைப் பொறுத்தவரை ஹிஸ்பானிக் அல்லாத வெள்ளையர்களுடன் ஒப்பிடும்போது ஹிஸ்பானிக் நபர்கள் மது குடிப்பது குறைவு என்றாலும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதிகமான அளவில் மதுவை அருந்துகிறார்கள் என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் புகைப்பிடிப்பவர்கள், குடிப்பதற்கும் வேறு பல ஆபத்தான குடிப்பழக்கங்களில் ஈடுபடுவதற்கும் அதிகமான வாய்ப்புள்ளது. ஆல்கஹால் மற்றும் புகையிலைப் பயன்பாடு கூடுதலான மற்றும் மோசமான விளைவுகளை புற்றுநோயிலிருந்து தப்பித்தவர்களுக்கும் புற்றுநோய்ச் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் ஏற்படுத்திவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது அதாவது இரண்டாம் நிலை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார் இந்த ஆய்வின் ஆசிரியர் காவ்.