இந்தியா-குடிகளும் அவர்கள் குடிப்பழக்கமும்

இந்தியாவில் மது அருந்துதலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாதலும் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 5.7 கோடி மக்கள் குடிப்பழக்கத்தின் பேரழிவு விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சமூக-கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள், மக்களிடையே குடிப்பழக்கத்தை இயல்பென எடுத்துச்செல்லும் மனநிலையை எளிதாக்கிவிட்டது.
இந்தியாவில் உள்ள தனிப்பட்ட மாநிலங்களை நிர்வகிக்கும் சட்டங்களில் உள்ள வேறுபாடு காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மது அருந்தும் நடைமுறைகள் வேறுபடுகின்றன. சட்டப்பூர்வமாக மது அருந்தும் வயது இந்தியாவில் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது.
சமீபத்திய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் குளோபல் மெண்டல் ஹெல்த் ஆராய்ச்சி ஆய்வறிக்கையில் இந்தியாவில் 10வயது முதல் 24வயது வரை உள்ளவர்களிடம் அவர்கள் குடிப்பழக்கத்தை விசாரித்து கண்டறிந்தத்தில் 250 நபர்களில் 55 பேர் தினமும் மது அருந்தும் பழக்கம், 40 பேர் வாரத்திற்கு ஒரு முறை மது அருந்தும் பழக்கமும் 80 பேர் ஆண்டிற்கு ஒரு முறையாவது மது அருந்தும் பழக்கம் உடையவர்களாகவும், மற்றவர்கள் கிடைக்கும் நேரம், கொண்டாட்ட சமயங்களில் அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால் குடிப்பழக்கத்தை தொடங்கும் சராசரி வயது 14.4 முதல் 18.3 வயதாக இருக்கிறது.
இந்தியாவின் மக்கள்தொகையில் 50%க்கும் அதிகமானோர் 25 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 65% க்கும் அதிகமானோர் 35 வயதிற்குக் கீழே உள்ளனர் என 2021 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள், ஊட்டச்சத்து குறைபாடு,கைவிடப்படும் குழந்தைகள், குழந்தைத் திருமணம், என சமூக பிரச்சன்னைகளுடன் சிறுவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாதலும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
உலகளாவிய நோய்கள், காயங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் ஆய்வு (GBD) 2019 இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே (10-24 வயதுக்குட்பட்டவர்கள்), குடிப்பழக்கம்,போதைக்கு அடிமையாகுதல் பல்வேறு அறிவாற்றல் மற்றும் செயல்பாட்டுக் குறைபாடுகளை விளைவிக்கிறது. மேலும் கவன குறைவு, பார்வை கோளாறு, வன்முறை, மனநலப் பிரச்சனைகள் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று தகவல் தருகிறது.
மதுபானத்தில் உபயோகப்படுத்தும் ஆல்கஹால் ‘எத்தில் ஆல்கஹால்’ ஆகும். இந்த எத்தில் ஆல்கஹால் 100% இருந்தால் அதை அப்சொல்யூட் ஆல்கஹால் எனலாம்.ஒரு நிலையான மது பானமானது 10 கிராம் அப்சொல்யூட் ஆல்கஹால் ஆகும். பொதுவாகப் பயன்படுத்தப்படும் மதுபானங்கள் பீர், ஒயின், விஸ்கி, ரம், ஓட்கா, ஜின் மற்றும் பிராந்தி போன்றவைகளில் இந்த அப்சொல்யூட் ஆல்கஹால் அளவு மாறுபடும். உள்ளூர் பட்ட சாராயம், கள் போன்றவற்றில் அது காய்ச்சும் போது எத்தில் ஆல்கஹாலுடன் மெத்தில் ஆல்கஹால்லும் சேர்ந்து உருவாகுவதால் சில நேரம் அது மரணம் வரை இழுத்து சென்றுவிடுகிறது. மிகக் குறைந்த அளவான 10மி.லி. மெத்தனால் போதும் பார்வை நரம்பு அழித்து நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும். 30 மி.லி என்றால் சாவை சந்திக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. இம்மாதிரியான ஆபத்துக்கள் அறிந்தும் இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, பீஹார், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் 85 சதவிகிதம் குடிப்பழக்கம் உள்ளவர்கள் உள்நாட்டு மதுபானம் கள், பட்டை சாராயமே அதிகம் அருந்துகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நலம் மற்றும் குடும்ப நலப் புள்ளி விவரத்தில் (HFWS) அசாமில் 15-54 வயதுக்குட்பட்ட 26.3% பெண்களும் 59.4% ஆண்களும் மது அருந்துவதாகத் தெரிவிக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 59% ஆண்கள் நாட்டிலேயே அதிக மது அருந்துபவர்களாகக் கண்டறியப்பட்டிருகின்றனர்.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய ஐந்து தென் மாநிலங்களும் சேர்ந்து நாட்டில் விற்கப்படும் மதுபானங்களில் 45% பயன்படுத்துகின்றன. வருவாய் சதவீத அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை தலா 15% என்ற அளவில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் போது, கர்நாடகா மற்றும் ஆந்திராவுக்கு தலா 11% மற்றும் தெலுங்கானாவுக்கு 10% என்று அறிக்கை காட்டுகிறது. வரி வருவாயில் 12% மதுபான வருவாய்ப் பங்கைப் பொறுத்தவரை டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது, ஆனால் அதன் குடிமக்கள் தேசிய உட்கொள்ளலில் 4% மட்டுமே உள்ளனர். மற்ற அனைத்து மாநிலங்களிலும் அதிக மக்கள் தொகை இருந்தாலும், கேரளாவில் 3.3 கோடி மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என்றாலும், மதுபானங்களுக்கு அதிக வரி கேரளா மாநிலம் விதிப்பதால் அதிக வருவாயை ஈட்டுகிறது.
பெங்களூரு நகரின் 12 பெரிய மருத்துவமனைகளில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS) நடத்திய ஆய்வில், சாலை போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் காயங்களில் கிட்டத்தட்ட 28% நேரடியாக மதுவினால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டது. சாலையோர கணக்கெடுப்பில் ஏறக்குறைய 40% ஓட்டுநர்கள் மது போதையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, மது அருந்துதல் தொடர்பான பல்வேறு குற்றங்கள் தடைச் சட்டம், சூதாட்டச் சட்டம், சைக்கோட்ரோபிக் பொருள் சட்டம் மற்றும் கலால் சட்டம் ஆகிய நான்கு முக்கியச் சட்டங்களின் கீழ் வருகின்றன. மது துஷ்பிரயோகத்தால் ஏற்படும் பொதுத் தொல்லைகள் கவனிக்கப்படாமல் போவதற்கான முக்கியக் காரணம், அந்தக் குற்றங்கள் சிறு குற்றங்களின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன, மேலும் அவை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது.
குடிப்பழக்கத்தின் தீமைகளை விவரிக்க அரசு இன்னமும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும். குடிப்பழக்கத்தின் சிக்கலைச் சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கு பல மைய அறிவியல் சமூகம் சார்ந்த ஆராய்ச்சி ஆய்வுகள் பல்வேறு தனிப்பட்ட மாநிலங்களில் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் மது வரிவிதிப்பு, மது உற்பத்தி மற்றும் மது கட்டுப்பாட்டு கொள்கைகளை நாடு முழுவதும் வலுவாக செயலாக்கலாம்.