புது பொலிவு பெறும் ஏர் இந்தியா – வண்ணங்கள், அடையாளங்கள், சீருடைகள் அனைத்திலும் மெருகேற்றப்பட்டு நவீன சேவைக்கு தயாராகிறது.

செய்தி சுருக்கம்:
டாட்டா குழுமத்தின் Talace நிறுவனத்தினால் கையகப்படுத்தப்பட்ட ஏர் இந்தியாவின் ஊழியர்களின் உடை வடிவமைப்பில் மற்றும் பிராண்ட் அடையாளத்தில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தகவலின் படி விரைவில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களை அனைத்து வகையிலும் நவீன மாற்றங்களுக்கு உட்படுத்தி புதுப்பொலிவுடன் சேவைகளை துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இலண்டனை சேர்ந்த டிசைனிங் நிறுவனத்திடம் ஏர் இந்தியா விமானத்தில் உட்புற வடிவமைப்பு, வண்ணத்தில் மாற்றம் மற்றும் ஊழியர்களின் சீருடையில் மட்டுமல்லாமல் மகாராஜா சின்னத்திலும் மாற்றங்களை செய்ய ஒப்படைக்கப்பட்டு புதிய அடையாளங்களுடன் இனிவரும் காலங்களில் ஏர் இந்தியா இயங்கவுள்ளது என தெரிய வருகிறது.
அதன்படி, வெண்மையும் சிவப்பும் மட்டுமே கொண்டிருந்த ஏர் இந்தியா விமானங்களில் இனி Vistara நிறுவனத்தின் ஊதா வண்ணமும் இணையப்போகிறது. இந்த மாற்றங்களை திறம்பட செய்வதற்காக லண்டனை சேர்ந்த McCann World Group நிறுவனத்தின் வசம் வேலை ஒப்படைக்க பட்டுள்ளது.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
டாட்டா குழுமத்தின் நிறுவனமான Vistara விமான சேவையுடன் ஏர் இந்தியா இணைக்கப்பட்டு பல்வேறு மாற்றங்களை அடைய போகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் ஏர் இந்தியா விமானங்களில் பொறிக்கப்பட்டிருந்த சிவப்பு அன்னமும் ஆரஞ்சு வர்ண சூரிய சக்கர ரேகைகளும் மாற்றங்களை பெறப்போகிறது, வால் பகுதியில் கூட இதே சின்னங்கள் தான் இருக்கும்.
உலகின் ஒவ்வொரு விமான சேவை நிறுவனங்களின் அடையாளங்களும் அவற்றின் குறியீடுகளும், சின்னங்களும் மற்றும் தனிப்பட்ட வர்ணங்களும் அந்த நிறுவன விமானங்களின் மீதும் வரையப்பட்டு இருக்கும், சில நிறுவனங்கள் வினைல் கோட்டிங் மூலமாக அடையாளங்களை வடிவமைப்பு செய்திருக்கும். இது பிராண்டை அடையாளப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஏர் இந்தியாவின் இந்த அடையாள மாற்றங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாட்டா குழுமம் வெளியிட்டது.
Tata Sons நிறுவனத்திற்கு சொந்தமான Talace Private Limited மூலமாக 2022, ஜனவரி 27 இல் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் கையகப்படுத்தினர். பின்னர் Tata குழுமத்தின் vistara விமான நிறுவனத்துடன் ஏர் இந்தியா இணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக செயல்படும் என்று தெரிவித்தனர். இந்த மாற்றங்கள் செய்யும் பணிகள் அனைத்தும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவுறும் என கூறியுள்ளனர். இரு நிறுவனங்களை இணைத்து உருவாக்கப்படும் இந்த புதிய நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.
இந்த இணைப்பை தவிர இந்தியாவின் ஏர் ஆசியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் ஒரே நிறுவனமாக மாற்றப்பட உள்ளது. இந்த பணிகள் 2022 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Future brands என்ற நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் டிசைன் மற்றும் பிராண்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகின்றது.
இரு நிறுவனங்களை இணைத்து உருவாக்கும் புதிய அடையாளங்களில் அவற்றின் பழமை மாறாமல் இருக்க வேண்டும், மேலும் வர்ணங்களில் புதுமை, உட்கட்டமைப்பில் ஈர்ப்பு, சீருடைகளில் நவீனம் மற்றும் புதிய சின்னத்தில் மாற்றம் என அனைத்து அம்சங்களிலும் மாற்றம் இருப்பது உறுதியாகிறது.
மகாராஜா சின்னம்:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பாரம்பரிய சின்னமான மகாராஜா முத்திரையிலும் மாற்றங்கள் இருக்கும், அவருடன் ஒரு பெண் உடன் நிற்பதாக அந்த மாற்றம் புதிய வகையில் இருக்கும். ஏர் இந்தியாவின் இந்த 76 வயது மகாராஜா 1946 இல் விளம்பர நிறுவனத்தில் வேலை செய்த உமேஷ் ராவ் என்பவரால் வரையப்பட்டது, இவரை வைத்து இதை உருவாக்கியவர் ஏர் இந்தியாவின் அப்போதைய கமர்சியல் இயக்குனராக இருந்த Bobby Kooka என்பவர், இதுவே அன்று முதல் ஏர் இந்தியாவின் பிராண்ட் ஐகான் என்றும் ஏர் இந்தியாவின் அடையாளம் என்றும் பாரக்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் லண்டனை சேர்ந்த McCann World Group நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியா அடையாள வடிவமைப்பில் புதிய மாற்றங்களை விரைவில் செய்து முடிக்க ஒப்பந்தம் இடப்பட்டு முழு வீச்சில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மேற்பார்வை செய்து வழிநடத்தும் Adman Prasoon Joshi 2024 மே மாதத்திற்குள் அனைத்து மாற்றங்களும் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர் Tata Sons நிறுவன சேர்மன் சந்திரசேகரன் “இந்த மாற்றங்கள் ஊழியர்கள் உட்பட, தொழில்நுட்பம் சார்ந்த மாறுதல்களையும் உள்ளடக்கியதாக இருக்கும், தரையிலிருந்து விமானங்களை கட்டுப்படுத்தும் டெக்னாலஜியிலும் சில மாற்றங்களை கொண்டு வரவுள்ளோம், ஏர் இந்தியாவின் அனைத்து அம்சங்களிலும் இந்த மாற்றங்களின் பிரதிபலிப்பு இருக்கும், எங்கள் நிறுவனம் விமான சேவையில் மிகப்பெரும் மாறுதல்களை ஏற்படுத்த உள்ளது, புதிய விமானங்களை வாங்குவதற்காக ஒரு மிகப்பெரிய ஆர்டரில் கையெழுத்து போட்டு இருக்கிறோம்” என்று சமீபத்தில் நிகழ்ந்த BT Mindrush & BT Best CEO அமைப்பின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
பின்னணி:
கடந்த ஜூன் மாதம் 470 புதிய ஏர் பஸ் மற்றும் போயிங் ரக விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஏர் இந்தியா கையெழுத்து போட்டிருந்தது, நவீன வசதிகளை கொண்ட புதிய ரக விமானங்கள் வாங்குவதன் மூலம் விமான சேவையை உயர்த்த முடிவு செய்துள்ளது Tata நிறுவனம்.
70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் Paris Air Show வின் போது ஏர் இந்தியா கையெழுத்திட்டது. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் A350-1000 ரக விமானங்கள் 34, A350-900 ரக விமானங்கள் 6, போயிங் 787 ரக விமானங்கள் 20, போயிங் 777x Wide Body ரக விமானங்கள் 10 மற்றும் இவைதவிர சிறிய ரக ஏர் பஸ் விமானங்களான A320Neo மற்றும் A321Neo ரகங்களில் முறையே 140 மற்றும் 70 விமானங்களும், Max Narrow போயிங் 737 ரக விமானங்கள் 190 என மொத்தமாக 470 விமானங்கள் வாங்க உறுதி செய்ய பட்டுள்ளது.
இதை அடுத்து மேலும் 370 புதிய ஏர்பஸ் போயிங் ரக விமானங்களை விரைவில் வாங்க Tata குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த வாரம் வெளிவந்த ஏர் இந்தியா நிறுவன அறிக்கையின்படி 2022-23 நிதியாண்டு இறுதியில் 14000 கோடி ரூபாய் அளவு நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை Tata Sons நிறுவனம் 13000 கோடி ரூபாய் முதலீடு செய்து கையகப்படுத்தி உள்ளது, 2023 நிதியாண்டில் தன் சொந்த நிறுவனமான Talace மூலமாக இந்த முதலீட்டுடன் மேலும் பல கோடிகள் புதிய விமானங்களை வாங்குவதில் இறக்கியுள்ளது, இதன் மூலமாக Tata எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கும் திட்டங்கள் என்னென்ன என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.