1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் – நடந்தது என்ன…?


இந்திய தேசிய அளவில், காங்கிரஸ்க்கு அடுத்தபடியாக பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்திலேயே துவக்கப்பட்ட இரண்டாவது கட்சி ஷிரோமணி அகாலி தளம். இது 1920ம் ஆண்டிலேயே, பஞ்சாப் மாநிலத்தின் உரிமைகளைப் போராடிப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மாநிலக் கட்சி. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1984’ம் ஆண்டு பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒன்றிய காங்கிரஸ் ஆட்சியானது பஞ்சாபின் மாநில உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டியது அகாலி தளம். அதன் தொடர்ச்சியாக, மாநில உரிமைகள் எனச் சிலவற்றை கோரிக்கைகளாகப் பட்டியலிட்டு காங்கிரஸ் அரசின் கவனத்திற்கு அனுப்பி வைத்தது அக்கட்சி. ஆனால், அந்தக் கோரிக்கைகள் அனைத்தும், ‘தேசப் பிரிவினையைத் தூண்டி விடும் காரணங்களாக’ இருப்பதாகக் கூறி நிராகரித்தது ஆளும் காங்கிரஸ் அரசு. இந்த நிகழ்வுதான், `பிந்த்ரன் வாலே’ எனும் சீக்கிய மத அமைப்பு தோன்ற ஆரம்பமாக அமைந்தது. சீக்கியப் புனிதத் தலமான, அமிர்தசரஸ் பொற்கோயில் இவர்களின் தலைமை இடமாகச் செயல்பட்டது.
பிந்த்ரன் வாலே அமைப்பினர், பஞ்சாபை ‘காலிஸ்தான்’ எனும் பெயரில் தனி நாடாகப் பிரித்து வாங்குவதை தங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். அதற்காக, அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தியும் வந்தனர். கணிசமான அளவிலான சீக்கிய இளைஞர்கள், தம்மை பிந்த்ரன் வாலே’வில் இணைத்துக் கொண்டு, போராட்டத்தில் பங்கெடுக்கத் தொடங்கினர். ஆயுதம் தாங்கிய இந்த இளைஞர்களின் தீவிரவாதப் போராட்டத்தால், பஞ்சாப் முழுக்க பல்வேறு வன்முறை நிகழ்வுகள் அரங்கேறி, சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த, பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு பஞ்சாப் மாநில பிந்த்ரன் வாலே, மாபெரும் தலைவலியாக மாறிக் கொண்டிருந்தது.
1984, ஜூன் முதல் தேதி, பிந்த்ரன் வாலே அமைப்பினரை அடக்கி ஒடுக்குவதற்காக ஓர் இராணுவத் தாக்குதல் திட்டத்தைச் செயல்படுத்தினார் இந்திரா காந்தி.
அந்தத் தாக்குதல் திட்டத்திற்கு ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ எனப் பெயரிடப்பட்டது. காலிஸ்தான் தீவிரவாத அமைப்பினரின் தலைமையகமும், சீக்கியர்களின் புனிதத் தலமுமான அமிர்தசரஸ் பொற்கோயில், இந்தியப் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. துப்பாக்கிக் குண்டுகள், அந்தக் கோயிலைச் சுற்றி மழையாகப் பொழிந்தன.
மொத்தம் 3 நாட்கள் நடந்த அந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின், பொற்கோயில் பாதுகாப்புப் படையினரின் கட்டுக்குள் வந்தது. இரண்டு பக்கமும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. சீக்கியர்களால் தங்களுடைய உயிருக்கு நிகராக மதித்துப் போற்றப்பட்டும், பொற்கோயிலின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு, உலகம் முழுதும் வாழும் அவர்களிடமிருந்து பெரும் கண்டனக் குரல்கள் எழுந்தன. தங்கள் மதத்தின் நம்பிக்கை அடையாளம், முழு முற்றாகத் தகர்க்கப்பட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.
இதன் பின், சரியாக நான்கு மாதங்கள் கழித்து, 1984 அக்டோபர் 31-ம் நாள், மெய்ப் பாதுகாவலர்கள் இருவர் சூழ தன் டெல்லி இல்லத்திலிருந்து நடந்து வெளியே வந்தார் பிரதமர் இந்திரா காந்தி. சத்வந்த் சிங் மற்றும் பீன்ட் சிங்’தான் அந்த இரு பாதுகாவலர்கள். கண்ணிமைக்கும் நேரத்தில், அவர்கள் இருவரின் துப்பாக்கிகளும் இந்திராவை நோக்கி சுட ஆரம்பித்தன. மொத்தமாக 30 குண்டுகள் அவரின் உடலைத் துளைத்து வெளியேற, இரத்த வெள்ளத்தில் பரிதாபமாகச் சரிந்து இறந்தார் இந்தியப் பிரதமர். பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளே, அவரின் உயிரைக் குடித்தன.
இரு சீக்கியர்களால், அதுவும் அவருடைய மெய்ப் பாதுகாவலர்களாக இருந்தவர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நிகழ்வு, நாடு முழுக்க காட்டுத் தீ போலப் பரவியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைத்துத் தொண்டர்களும் கொந்தளிப்பிற்கு உள்ளானார்கள். அவர்களின் கோபம், மொத்த சீக்கியர்கள் மேலும் திரும்பியது. இந்திரா காந்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த அன்றைய குடியரசுத் தலைவர், ஜெயில் சிங் ஒரு சீக்கியர் என்பதால், அவர் மீதே கூட தாக்குதல் நடத்துமளவிற்கு ஆக்ரோஷமாக இருந்தனர் காங்கிரஸ் கட்சியினர்.
குடியரசுத் தலைவர் மீது சிறியதாக ஆரம்பித்த அந்தத் தாக்குதல், அடுத்த நான்கு நாட்களுக்கு, அதாவது ‘1984, நவம்பர் 1 முதல் 4-ம் நாள் வரை’ டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் மாபெரும் வன்முறை வெறியாட்டமாக உருமாறியது. கண்கள் படும் சீக்கியர்கள் அனைவருமே, தயவு தாட்சயண்யமின்றி கொல்லப்பட்டனர். கைகளில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு சீக்கியரின் வீடும் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டு, அங்கிருந்த அனைவரும் துள்ளத் துடிக்கக் கொல்லப்பட்டனர். சீக்கியப் பெண்கள் பலர், பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர், சீக்கியர்களின் வாகனங்கள், சொத்துகள், உடைமைகள், கடைகள் என அனைத்து நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டன. ஒரு சீக்கியரைக் கொன்றால், இவ்வளவு ரூபாய் சன்மானம் தரப்படும் என விலை வைக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சியினர் வெறியாட்டம் ஆடினார்கள்.
ஆயுதங்களும், பணமும் வன்முறையாளர்களுக்கு பெருமளவில் வாரி வழங்கப்பட்டன. காவல்துறையினரும் கூட, கலவரக்காரர்களுக்குதான் உதவிகள் செய்து கொண்டிருந்தார்கள். சீக்கியர்களைச் சோதனையிட்டு, தற்காப்புக்காக அவர்கள் எப்போதும் வைத்திருக்கும் ஆயுதங்களைப் பறித்தனர் காவல்துறையினர். காவல்துறை பணியில் இருந்த சீக்கியர்கள்ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சீக்கியர்களின் கொல்லப்பட்ட உடல்களை அப்புறப்படுத்தும் பணியையும் கூட அங்கு காவல்துறையினரே பொறுப்பேற்று செய்து கொண்டிருந்தனர். அந்தளவிற்கு, ஒரு மிகப் பெரிய ‘சீக்கிய இனப்படுகொலை’ அரசப் பயங்கரவாதத்தால் முறைப்படுத்தப்பட்டு தலைநகர் டெல்லியில் அரங்கேறிக் கொண்டிருந்தது.
ஒரு வழியாக 1984, நவம்பர் 5 அன்றுக்கு கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு, டெல்லி தன் இயல்பு வாழ்வுக்குத் திரும்பியது.
அந்த நான்கு நாட்களின் வன்முறையில், டெல்லியில் மட்டுமே ஏறக்குறைய 2,700 சீக்கியர்கள் கொலையுண்டதாகவும், இந்த எண்ணிக்கை, மொத்த இந்தியாவிலும் சேர்த்து 3,300 எனவும் அரசு தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில் கொலை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேல எனக் கூறுகின்றன மனித உரிமை அமைப்புகள்.
மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான அழுத்தங்களுக்குப் பிறகு, வன்முறைக் கலவரங்களைப் பற்றி விசாரிக்க ‘இரங்கநாத் மிஸ்ரா’ என்பவரது தலைமையில் தனிநபர் ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது. அவர் ஓர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார். அவர் விசாரித்து, அரசுக்கு அளித்த அறிக்கையின் சாரமாக, “காங்கிரஸ் கட்சிக்கும், சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை நிகழ்வுகளுக்கும் எந்த விதமான தொடர்புகளும் இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது.