fbpx
LOADING

Type to search

பல்பொருள்

வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர்

வாழ்க்கையிலும் பணியிலும் நீங்கள் அதிக திருப்தியை உணர உதவும் 3 புத்தகங்கள் இவை: மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர்
‘புத்தகங்கள் உலகத்தைக் காட்டும் ஜன்னல்’ என்ற பழமொழி நாம் அறிந்தது. அதன் உண்மையும் நாம் உணர்ந்ததே. ஏனெனில் புத்தகங்கள்தாம் நம் மனதிற்குப் புதிய விஷயங்களையும் யதார்த்தங்களையும் காட்டுகின்றன. ஆனால் புத்தகங்கள் நம்மையே நமக்குக் காட்டும் ஜன்னலாகவும் ஆகலாம். எதெல்லாம் நமக்கு மகிழ்ச்சியையும் (happiness) ஆக்கத்திறனையும் (productivity) அளிக்கின்றன என்பதை நாம் கண்டறிந்துகொள்ளப் புத்தகங்கள் நமக்கு உதவுகின்றன.


பணியிட நலப் பயிற்சியாளரும் மகிழ்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்தவருமான டாக்டர் கோர்ட்னி ஆல்ஸ்டன், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அவரது மனநலத்தையும் உடல்நலத்தையும் வளர்த்துக்கொள்வதற்கு ஒரு அடிப்படைக் கருவியாக இருந்ததாகக் கூறுகிறார். இப்பழக்கம் பணியிடத்தில் அவர் சிறந்த முறையில் பணியாற்றுபவராகத் தன்னை ஆக்கிக்கொள்ள உதவியது.


“புத்தகங்கள் தனிநபர்கள் வளர உதவும் பல சிறந்த வழிமுறைகளை அளிக்கின்றன” என்று ஆல்ஸ்டன் கூறுகிறார். அவை மக்களை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை (optimism) கொள்ள ஊக்குவிக்கலாம். மகிழ்ச்சியின் மதிப்பையும் (value) தாக்கத்தையும் (impact) மக்கள் புரிந்துகொள்ளுமாறு செய்யலாம்.


உலகில் பணவீக்கம் முதல் கொவிட் வரை மன அழுத்தத்தைத் தூண்டும் காரணிகளுக்குக் குறைவில்லை. இப்படிப்பட்ட காலத்தில், மக்கள் தங்கள் மனநலனையும் உடல்நலனையும் பேணுவது மிக முக்கியம். அதற்கு உதவக்கூடிய பின்வரும் இந்த மூன்று சுயஉதவிப் புத்தகங்களையும் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் பட்டியலில் சேர்க்குமாறு ஆல்ஸ்டன் பரிந்துரைக்கிறார்.


புத்தகம் 1: எப்படி மகிழ்ச்சியாக இருப்பது: நீங்கள் விரும்பும் வாழ்க்கையைப் பெறுவதற்கான ஒரு புதிய அணுகுமுறை


எழுத்தாளர்: டாக்டர் சோன்யா லியுபோமிர்ஸ்கி


(The How of Happiness: A New Approach to Getting the Life You Want – By Dr. Sonja Lyubomirsky)


நீங்கள் எப்போதாவது ‘மகிழ்ச்சியின் உண்மையான அர்த்தம் என்ன?’ என்றோ ‘என் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி?’ என்றோ உங்களையே கேட்டுக்கொண்டிருந்தால், இந்த புத்தகம் உங்களுக்கானது எனலாம்.
மகிழ்ச்சி என்றால் என்ன, மகிழ்ச்சியை எவ்வாறு அடைவது, எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதையெல்லாம் நன்கு புரிந்துகொள்வதற்கான வழிகாட்டி எப்படி மகிழ்ச்சியாக இருப்பது. பேராசிரியரும் சமூக உளவியலாளருமான லியூபோமிர்ஸ்கி இரண்டு சகாக்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியின் நன்மைகள் குறித்துக் கண்டறிய 225 ஆய்வுகளின் ‘மெட்டா பகுப்பாய்வை’ (meta-analysis) மேற்கொண்டார். மகிழ்ச்சியான நபர்கள் வேலையில் அதிக ஆக்கத்திறனும் (productivity) படைப்பாற்றலும் (creativity) கொண்டுள்ளார்கள், அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள், அதிக நண்பர்களைக் கொண்டுள்ளார்கள், வலுவான நோயெதிர்ப்பு மண்டலங்களைக் (immune systems) கொண்டுள்ளார்கள், என்பதோடு மன அழுத்தத்திலிருந்து விரைவில் மீளும்திறனும் (resilience) படைத்துள்ளார்கள் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.


இந்தப் புத்தகம் மகிழ்ச்சிக்கான ஒரு அறிவியல் அணுகுமுறையை ஆராய்வதோடு ஒருவரது மரபியல், வாழ்க்கைச் சூழ்நிலைகள், திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆகிய அனைத்தும் அவரது நிறைவான மனநிலைக்கும் நலனுக்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதையும் விவரிக்கிறது.


புத்தகம் 2: தீவிரமான சுயஇரக்கம்: பெண்கள் எவ்வாறு கனிவைப் பயன்படுத்தி வெளிப்படையாகப் பேசலாம், தங்கள் அதிகாரத்திற்கு உரிமைகொண்டாடலாம், முன்னேறி வளரலாம்


எழுத்தாளர்: டாக்டர் கிறிஸ்டின் நெஃப்
(Fierce Self-Compassion: How Women Can Harness Kindness To Speak Up, Claim Their Power, and Thrive – By Dr. Kristin Neff)


உங்களையே நீங்கள் பேணுவதற்கு சுயஇரக்கமும் கனிவும் கொண்டிருப்பது முக்கியம். இது மற்றவர்கள் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதிலும் ஒரு பங்கு வகிக்கிறது.


சமூகப் பாலின விதிமுறைகள் பெண்களை மென்மையாகப் பேசுபவர்களாகவும் கனிவாகவும் இருக்கக் கட்டாயப்படுத்துகின்றன. நெஃப் தீவிரமான சுயஇரக்கம் என்னும் இந்தப் புத்தகத்தில் பணியிடத்திலிருந்து தனிப்பட்ட உறவுகள்வரை பல அமைப்புகளில் பெண்கள் சக்திவாய்ந்தவர்களாகவும் சுயஉந்துதல் கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்று ஊக்குவிக்கிறார். தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த அனுபவத்தையும் பயன்படுத்தி, பெண்கள் மகிழ்ச்சியான, மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ உதவுவதை நெஃப் நோக்கமாகக் கொண்டுள்ளார்.


புத்தகம் 3: உங்கள் பணியை ஓர் உள் உந்தும் அழைப்பாக மாற்றுங்கள்: வாழ்க்கைத்தொழில் பற்றிய அறிவியல் ஆய்வு உங்கள் பணிவாழ்க்கையை எப்படி மாற்றும்


எழுத்தாளர்கள்: டாக்டர் பிரையன் டிக் & டாக்டர் ரியான் டஃபி
(Make Your Job A Calling: How the Psychology of Vocation Can Change Your Life at Work – By Dr. Bryan Dik and Dr. Ryan Duffy)


தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், மக்கள் தங்கள் வாழ்க்கையின் சிறப்பம்சங்களையும், தங்கள் பணிகளையும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இடுகையிடுகிறார்கள். இயற்கையாகவே தன் வேலையில் மகிழ்ச்சி இல்லாத ஒருவர், வேறொருவர் தம் வேலையில் மிகவும் திருப்தியடைந்திருப்பதைப் பார்த்து இன்னும் சோர்வடையக்கூடும்; ஆனால் அது இனி அப்படி இருக்க வேண்டியதில்லை.
டிக், டஃபி இருவரும் யார் வேண்டுமானாலும் தங்கள் வேலையில் மகிழ்ச்சியையும் அர்த்தத்தையும் கண்டுபிடிக்கலாம் என்று நம்புகிறார்கள். உங்கள் பணியை ஓர் உள் உந்தும் அழைப்பாக மாற்றுங்கள் என்னும் இந்தப் புத்தகத்தில் ‘உள் உந்தும் அழைப்பு (calling)’ என்றால் என்ன, ஒருவருடைய உள் உந்தும் அழைப்பு எதுவாக இருக்கும் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அவர்கள் விளக்குகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சி விவரங்களும் குறிப்பான வழிகாட்டுதல்களும் கொண்ட முழுமையான இந்தப் புத்தகம், பணியிடத்திலும் வாழ்க்கையிலும் உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கான ஒரு விரிவான விளக்கமாகத் திகழ்கிறது.

Tags:
முன்னைய பதிவு

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *