வளையல் ஸ்டாண்ட் செய்வது எப்படி…?

நாம் அணியும் விதவிதமான ஆடைகளுக்கு ஏற்றவாறு அணிவதற்காக, ஒவ்வொருவரிடமும் மிக அதிக எண்ணிக்கையிலான வளையல்கள் இருக்கக் கூடும். அவற்றை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமான செயல். கண்ணாடி வளையல்கள் என்றால் உடைந்தும் கூடப் போகக் கூடும். ஆகவே, அவற்றை ஒழுங்காக ஒரே இடத்தில் சேகரித்து வைத்து, தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள ஒரு ஸ்டாண்ட் இருந்தால் அருமையாக இருக்கும் அல்லவா…? இதற்காக நாம் கடையிலோ, ஆன்லைன் ஸ்டோர்களிலோ சென்று நூற்றுக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் பயன்படாமல் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே நமக்கான வளையல் ஸ்டாண்டை நாமே மிக எளிதாகச் செய்து கொள்ள முடியும்! பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கும்.
வலையல் ஸ்டாண்ட் எப்படிச் செய்வது எனப் பார்ப்போம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை லிட்டர் கூல்டிரிங்ஸ் PET பாட்டில்
- கத்திரிக்கோல்
- Soldering Machine
- கனமான சிறிய அட்டை
- உல்லன் நூல். (பிடித்த நிறம்)
- Glue Gun & ஃபெவிக்கால்
- சில காகிதத் தாள்கள்
- PET பாட்டில் மூடிகள்

செய்முறை:
முதலில் நம்மிடம் உள்ள PET கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலின் அடிப்பாகத்தை, கத்தரிக்கோல் கொண்டு வெட்டி எடுத்து விட வேண்டும். ஏனென்றால் ஸ்டாண்ட் மற்றும் வளையல்களின் கனம் தாங்காமல் அது கவிழ்ந்து விடும் வாய்ப்புள்ளது. பின்பு, கனமான அட்டை ஒன்றை அந்தப் பாட்டிலில் வெட்டிய வடிவத்திற்கு ஏற்ற, அதே அளவிலான வட்ட வடிவில் வெட்டி எடுத்து, Glue Gun பயன்படுத்தி ஒட்டி அடைக்க வேண்டும். இப்போது பாட்டிலானது நிலையாக நிற்கும், எளிதாகக் கவிழாது.
அடுத்தபடியாக நமக்குத் தேவைப்படும் ஸ்டாண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, பாட்டிலின் மேற்பகுதியில் ஆரம்பித்து கீழே வரை, சாலிட்ரின் மிஷின் மூலம் துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும். சாலிட்ரின் இல்லாத பட்சத்தில், ஒரு சிறு கம்பியை மெழுகுவர்த்தி நெருப்பில் சூடுபடுத்திக் கூட நாம் துளைகள் ஏற்படுத்த முடியும். பின், PET பாட்டில் முழுவதும் அடுக்கடுக்காக ஃபெவிக்காலைத் தடவி அதன் மேலே, உல்லன் நூலை வரி வரியாகச் சுற்ற வேண்டும். இப்போது, நூலானது பாட்டிலில் நன்றாக ஒட்டும் வரை சிறிது நேரம் காய வைக்க வேண்டும்.
ஃபெவிக்காலின் ஈரத் தன்மை உலர்ந்து, பாட்டிலில் நூல் நன்றாக ஒட்டிய பிறகு, நாம் ஏற்படுத்திய துளைகளுக்கு முன்பாக உள்ள நூலின் பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து விடல் வேண்டும். அடுத்ததாக, எடுத்து வைத்துள்ள காகிதங்களை மிக உறுதியாக இருக்கும் ஒரு குச்சியைப் போல உருட்டி பாட்டிலின் ஒரு புறத் துளையிலிருந்து, மறுபுறத் துளை வரையிலும் உட்செலுத்தி, இருபுறமும் ஸ்டாண்ட் போல வெளியே நீளமாக நீட்டிக் கொண்டுத் தெரிவது போல நிறுத்தி வைக்க வேண்டும். இந்தக் குச்சிகள் போன்ற அமைப்பில்தான் நாம் வளையல்களைத் தொங்க விடப் போகிறோம்.
பின்பு, இந்தக் குச்சிக் காகிதங்களின் மீதும் ஃபெவிக்கால் தேய்த்து நூலைச் சுற்றி ஒட்டி வைத்தல் வேண்டும். இவையும் நன்றாகக் காய்ந்த பின், PET பாட்டில் மூடிகளை எடுத்து, அவற்றின் உட்புறத்தின் நடுவிலும், காகிதக் குச்சிகளின் இரண்டு முனைகளிலும், Glue Gun மூலம் பசை தடவி, ஒரு தடுப்பு போல ஒட்டி வைக்க வேண்டும். அதுவும் சிறிது நேரத்தில் உலர்ந்து, உறுதியாகி விடும்.
இப்போது, நம்முடைய அழகான வளையல் ஸ்டாண்ட் தயார்.