மூட்டு வலி ஏன் வருகிறது?

மூட்டு வலி உடலின் பல பாகங்களிலும் ஏற்படலாம். மூட்டு வலி பொதுவாக கைகள், இடுப்பு, முழங்கால்கள், முதுகெலும்பு ஆகியவற்றில் உணரப்படுகிறது. மூட்டு வலியை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை வயது, எடை, காயங்கள், பயன்பாடு, பிற நோய்கள் போன்றவை.
மூட்டில் காயமடைந்தோர், ஒரு தசையை அதிகமாகப் பயன்படுத்துவோர்,கீல்வாதம் போன்ற நாள்பட்ட நோய்களுள்ளோர்,மனச்சோர்வு, <>மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், அதிக எடை கொண்டோர் ஆகியோர் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர்.
மூட்டுகளில் வலி தோன்றப் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:
- வைரஸ் தொற்றுகள், தடிப்புகள், காய்ச்சல் போன்றவற்றின் காரணமாக மூட்டுகளை இயக்கும்போது வலி ஏற்படலாம்.
- காயங்கள், உடைந்த எலும்புகள், சுளுக்கு போன்றவற்றால் மூட்டுவலி உண்டாகலாம்.
- ஒருவரது எடை அதிகமாகிவிட்டால் மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு மூட்டுவலி உண்டாகலாம்.
- மூட்டுப்பிடிப்பிற்கும் மூட்டுவலிக்கும் வயது ஒரு முக்கிய காரணியாகும். பல ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட மூட்டுகளில் தேய்வும் நைவும் ஏற்படுவதால் நடுத்தர வயதினருக்கும் மிக வயதான பெரியோருக்கும் மூட்டு வலிப் பிரச்சினைகள் எழலாம். மூட்டு வலி நிலையானதாகவோ வந்து வந்து போவதாகவோ இருக்கலாம்.
- தேய்மான மூட்டழற்சி அல்லது கீல்வாதம் (osteoarthritis): தேய்மான மூட்டழற்சி என்பது எலும்புகளுக்கு இடையில் உள்ள பாதுகாப்பான அணைவான குருத்தெலும்பு (cartilage) காலப்போக்கில் தேய்ந்து போகும்போது ஏற்படுகிறது. இதனால் மூட்டுகள் வலிப்பதோடு விறைப்பாகவும் மாறும். மெதுவாக உருவாகும் தேய்மான மூட்டழற்சி பொதுவாக நடுத்தர வயதில் ஏற்படுகிறது.
- முடக்க மூட்டழற்சி அல்லது முடக்கு வாதம் (rheumatoid arthritis): முடக்க மூட்டழற்சி என்பது நாள்பட்ட நோயாகும். இது மூட்டுகளில் வீக்கத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறது. இம்மூட்டழற்சி உள்ளோரது விரல்கள், மணிக்கட்டுகள் ஆகியவற்றில் உள்ள மூட்டுகள் பெரும்பாலும் உருக்குலைந்து விடுகின்றன.
- பசைநீர்ப்பையழற்சி அல்லது இழைமப்பை அழற்சி (bursitis): பசைநீர்ப்பை (bursa) அழற்சி அதிகப்படியான பயன்பாட்டால் ஏற்படுகிறது. இது பொதுவாக, முழங்கை, முழங்கால், தோள்பட்டை, இடுப்பு ஆகியவற்றில் ஏற்படுகிறது.
- தசைநாணழற்சி (tendinitis): தசைநாண் (tendon) அழற்சி என்பது எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நெகிழ்வான பட்டைகளான தசைநாண்களின் அழற்சியாகும். இது பொதுவாக முழங்கை, தோள்பட்டை, குதிகால் ஆகியவற்றில் ஏற்படுகிறது. இதுவும் பொதுவாக அதிகப்படியான பயன்பாட்டாலேயே ஏற்படுகிறது.
- படிகத்தேக்க நோய் (gout): படிகத்தேக்க நோய் என்பது உடலில் இருந்து யூரிக் அமிலப் படிகங்கள் மூட்டில் தேங்குவதால் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்படுகின்றன. இது பொதுவாக காற் பெருவிரலில் ஏற்படுகிறது.
மூட்டுவலியை முழுதும் நீக்க சிகிச்சையேதும் இல்லை என்றாலும் நோயாளிக்கு நிவாரணம் ஏற்படுமாறு வலியை மேலாண்மை (pain management) செய்யலாம். வீட்டுவைத்தியத்தாலோ மருந்துச்சீட்டில்லாமலேயே வாங்கக்கூடிய சாதாரண மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ அல்லது எளிய உடற்பயிற்சிகளைத் தினமும் செய்தாலோ சில சமயங்களில் மூட்டுவலி போய்விடும். இவற்றால் வலி போகவில்லையென்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தோ இயன்முறை மருத்துவமோ அல்லது அறுவைசிகிச்சையோ தேவைப்படலாம்.