
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். யாரைப் பார்த்தாலும் நாம் முதலில் கவனிக்கிற விஷயம் அவர்களுடைய முகம்தான், அதைக் கொண்டுதான் நாம் மனிதர்களை நினைவில் கொள்கிறோம் என்பதால் முகத்தோற்றம் ஒவ்வொருவருடைய தனிச்சிறப்பாக அமைகிறது, அதை நன்கு பராமரிக்கவேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்துகிறார்கள்.
அப்படிப்பட்ட முகம் சில நேரங்களில் வண்ணம் மாறினால், அதுவும் கருப்பாக ஆனால் மக்கள் திகைத்துப்போவது இயல்பு. அதற்கு என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்துகொள்வது என்று அவர்கள் சிந்திக்கிறார்கள், பதில்களைத் தேடுகிறார்கள்.
கருப்பு நிறம் இழிவானது இல்லை. தமிழர்களின் பொதுவான வண்ணமும் அதுதான். எனினும், திடீரென்று நிறம் மாறுவது வேறு சில பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டக்கூடும். அவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.
முகம் நிறம் மாறுதல் என்றால் என்ன?
முகத்தில் உள்ள தோல் நிறம் மாறும்போது அதை Pigmentation என்பார்கள், அதாவது, இயல்பான நிறம் மாறுதல். இதில் இரண்டு வகைகள் உள்ளன:
- Hyperpigmentation என்றால் முகத்தில் அடர்த்தியான தோல் புள்ளிகள் தோன்றுவது
- Hypopigmentation என்றால் முகத்தில் லேசான தோல் புள்ளிகள் தோன்றுவது
இந்தக் கட்டுரையில் நம்முடைய கவனம் முகத்தின் தோல் கருப்பதில்தான் என்பதால், நாம் Hyperpigmentationபற்றிக் கூடுதலாகப் பேசவிருக்கிறோம். எனினும், Hypopigmentation பிரச்சனையும் முக்கியமானதுதான், அதுவும் ஆராய்ந்து முறைப்படி சிகிச்சை பெற்றுக் குணப்படுத்தவேண்டியதுதான்.
முகத்தின் நிறம் எதனால் மாறுகிறது?
எங்கெல்லாம் நம்முடைய தோல் வெளிப்படுகிறதோ அங்கெல்லாம் அதில் மாற்றங்கள் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, முகம் பெரும்பாலும் ஆடைகளால் மூடப்படாமல் இருப்பதால் அதன் தோல் நிறம் மாறுவதற்கு வாய்ப்புகள் மிகுதியாகின்றன. இதற்குச் சில பொதுவான காரணங்கள்:
- சூரிய ஒளி மிகுதியாகப் படுதல்
- தோலில் ஏற்படும் காயங்கள்
- மற்ற தோல் நோய்கள்
- மருந்துகள்
- ஹார்மோன் மாற்றங்கள்
- மற்றவை
இப்படி முகத்தின் தோல் நிறம் மாறுவதற்குப் பல காரணங்கள் இருப்பதால், இதனால்தான் இந்தப் பிரச்சனை வந்தது என்று பொதுமக்கள் சட்டென்று தீர்மானிப்பது கடினம். ஒவ்வொன்றாகச் சரி செய்ய முயலவேண்டும், அது சரிப்படாவிட்டால் மருத்துவரைச் சந்தித்து அறிவுரை பெறவேண்டும்.
எடுத்துக்காட்டாக, மிகுதியாக வெய்யிலில் அலைந்து திரிந்த ஒருவர் அதன்மூலம் தன்னுடைய முகம் கருத்துவிட்டதாகக் கருதினால், சில நாட்கள் வெய்யில் நேரத்தில் வெளியில் செல்லாமல் இருக்க முயலலாம். அதன்மூலம் தன்னுடைய தோலின் நிறம் பழையபடி மாறுகிறதா என்று பார்க்கலாம்.
எளிய சிகிச்சைகள்
தோல் பிரச்சனைகளைத் தீர்க்கிற எளிய சிகிச்சைகள் உலகெங்கும் உள்ளன. எடுத்துக்காட்டாக, கற்றாழை போன்றவற்றைப் பூசுகிறார்கள், தோலைச் செழுமையாக்கக்கூடிய உணவுவகைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற இயற்கையான முறைகளை முயன்றுபார்க்கலாம். செயற்கையான, அதாவது, தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எதையும் பூசுவதற்குமுன் உரிய வல்லுனரிடம் பேசவேண்டும்.
மருத்துவச் சிகிச்சைகள்
சில தோல் பிரச்சனைகளுக்குக் குறிப்பிட்ட மாத்திரைகள் அல்லது பூச்சுகள் தேவைப்படலாம். தேவைப்பட்டால் லேசர் சிகிச்சை போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஆனால் இவை அனைத்தும் இந்தத் துறையில் திறனும் அனுபவமும் கொண்ட மருத்துவர்களால்மட்டும்தான் செய்யப்படவேண்டும்.
தேவைப்பட்டால், உங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் சிகிச்சையைப்பற்றி இன்னொரு மருத்துவரிடம் பேசி அவருடைய கருத்தையும் கேட்டறியலாம். இதன்மூலம் நாம் செய்துகொள்ளும் சிகிச்சை சரியானதுதான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
அத்துடன், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களையும் கவனமாகப் பின்பற்றவேண்டும். இதுவும் சிகிச்சையின் வெற்றியை விரைவாக்கும், நெடுநாள் நீடிக்கவைக்கும்.