மார்பகப்புற்றுநோயின்அறிகுறிகள்

உலகம் முழுக்கவெமே புற்றுநோய்களுள் பல வகைகள் உள்ளன. நம் உடலில் எத்தனை உறுப்புகள் உள்ளனவோ, அத்தனை வகையான புற்றுநோய்கள் உள்ளன என்று கூடச் சொல்லலாம்! இதில் குறிப்பாக பெண்களை மட்டும் தாக்கும் புற்றுநோய்தான் மார்பகப் புற்றுநோய். கடந்த 20 ஆண்டுளில் இந்நோயின் வீச்சும் பாதிப்பும் மிக அதிகமாகக் காணப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முன்பு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடையே மட்டும் கண்டறியப் பட்ட மார்பகப் புற்று, இன்றைய காலகட்டத்தில் 25 முதல் 30 வரையிலான பெண்களிடத்திலும் சர்வ சாதாரணமாகக் காணப்படுகின்றது. இந்திய புற்றுநோய் மையம் அளித்துள்ள ஓரு அண்மைய அறிக்கையின் படி, இலட்சம் இந்தியப் பெண்களுள் கிட்டத்தட்ட 26 பேருக்கு மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. அதிலும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, புனே, திருவனந்தபுரம் போன்ற நவீன நகரங்களில் வாழும் பெண்கள்தான் இந்தப் புற்றுநோயால், அதிகமாக பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள்.
புற்றுநோய் என்றில்லாமல், அனைத்து நோய்களுக்குமே ‘வருமுன் காப்போம்’ எனும் பழமொழி மிகப் பொருந்தும். நோய்களின் அறிகுறிகளை முன்னமே அறிந்து கொள்ளும் அறிவு இருந்தால், தொடக்க நிலையிலேயே அவற்றைக் கண்டறிந்து முறையான சிகிச்சைகளை நம்மால் பெற முடியும். புற்று நோய்களைப் பொருத்த வரையில், மிகச் சீக்கிரம் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வது மிக மிக அவசியமான ஒரு செயலாகும். ஏனென்றால், பெரும்பாலும் புற்றுநோய் முற்றிய நிலையில் அதாவது ‘ஸ்டேஜ் 3, ஸ்டேஜ் 4’ ல் கண்டறியப் படுவதால்தான் இந்தியாவில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவ்வகையில், மார்பகப் புற்றுநோயின் அறிகுறிளை நாம் இக்கட்டுரையில் அறிந்து கொள்வோம். வருமுன் காப்போம்!
- கைக்குக் கீழ் அல்லது மார்பெலும்புகளைத் தோள்பகுதியுடன் இணைக்கும் காலர் எலும்பில், வீங்கியது போல நிணநீர்க் கட்டிகள் தோன்றலாம். பெரும்பாலானவர்களுக்கு, மார்பகப் புற்றுநோயின் முதல் அறிகுறியாக இதுதான் அமையும். மார்பகங்களில் வரும் புற்று நோய்க் கட்டிகளுக்கு வெகு முன்பாகவே இந்த அறிகுறி தென்பட வாய்ப்புண்டு.
- ஓர் ஆரஞ்சுப் பழத்தின் வெளித் தோல் போன்ற தடிமனாக மார்பகத் தோல் மாறுதல். மார்பகங்களை அழுத்திப் பார்ப்பதன் மூலம், ஓடு போல இருப்பதை வைத்து இத இஎளிதாகக் கண்டறிய முடியும். சில நேரத்தில், மார்பகக் காம்பைச் சுற்றியுள்ள தோல் மிக அதிகமாக உலர்ந்து, சிவந்து போய் மீனின் செதில்கள் போலக் காணப்படலாம்.
- மார்பகத்தின் அனைத்து பாகங்களிலும் வீக்கம் ஏற்படுதல். உள்ளே ஏதேனும் கொழுப்புக் கட்டிகள் இல்லாத பட்சத்திலும் கூட இவ்வீக்கம் காணப்படலாம்.
- மார்பகம் மற்றும் அதன் காம்புகளில், வழக்கத்திற்கு மாறாக எரிச்சல் மற்றும் வலி உண்டாகுதல். குறிப்பாக, மார்பகத்தின் காம்பு உள்நோக்கி குழிந்து உள்ளே செல்வது போன்று இருத்தல்.
- மார்பகத்தில் உள்ள நரம்புகளின் வளர்ச்சி வரி வரியாக ந்மாறி நன்றாக வெளியே தெரிவது போல, மிக அதீதமாக இருத்தல்.
- தாய்ப்பால் தவிர்த்து, மார்பகக் காம்புகளில் வேறு ஏதேனும் ஒரு திரவம் போல சுரத்தல். காம்புகளில் அடிக்கடி புண்கள் ஏற்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகளுள், இரண்டுக்கு மேற்பட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களை அணுகுவது நல்லது. மிக சீக்கிரமாக மருத்துவரை அணுகி, நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் பட்சத்தில், புற்றுநோயானது முழுக்க முழுக்க 100% குணப்படுத்தக் கூடிய ஒரு நோய்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.