மனு எழுதுவது எப்படி…?

மனு என்றால் நமக்குத் தேவையான ஒன்றை விண்ணப்பித்து பெறுவதற்காக, எழுத்தின் வழியாகச் செய்யப்படும் ஒரு விண்ணப்பம் ஆகும். வாய்மொழியாக முறையிட்டால், அதற்கு பலன் கிடையாது. எழுத்துக்கான பலம்தான் எப்போதும் அதிகம்.
மனுக்கள், பொதுவாக இரண்டு வகைபப்டும், ஒன்று கோரிக்கை மனு, இரண்டாவது, புகார் மனு. நமக்குத் தேவையான ஏதேனும் ஒரு வசதியையோ, சலுகையையோ அரசு நிர்வாகத்திடம், வேண்வி விண்ணப்பித்து எழுதுவது கோரிக்கை மனு ஆகும். ஏற்கனவே நமக்கு இருக்கும் ஒரு வசதி, உரிமை அல்லது சலுகையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதைத் தீர்த்து வைப்பதற்காக விண்ணப்பிப்பது புகார் மனு ஆகும்!
அரசாங்கத்திற்கும், குடிமகனுக்கும் ஒரு தொடர்பு பாலமாக இருப்பது மனுக்கள்தான். அதனால், நமக்கு என்ன தேவையோ அதை தெளிவாக அரசுக்குத் தெரியப்படுத்தக் கூடிய அந்த மனுவானது மிகத் தெளிவாக இருத்தல் வேண்டும். கூடிய மட்டும், கருப்பு மையில் நல்ல குண்டு குண்டான கையெழுத்தில் எழுதுதல் நல்லது. அடித்தல், திருத்தல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் அடுத்த பணி.
எந்த ஒரு மனுவுக்கும் தலைப்பு கட்டாயம் தேவை. தலைப்பே, நம்முடைய மனுவின் பாதி வேலையைச் செய்து விடும் தன்மை கொண்டது. இன்ன செயலுக்காக நாம் விண்ணப்பிக்கிறோம் என்பதை ஒரு அடிக்கோடிட்டு காட்டி, தலைப்பில் எழுதி விட வேண்டும். அதன் பின்பு, தாளின் விளிம்பை கொஞ்சமாக மடித்து விட்டதன் இடது ஓரத்தில், அனுப்புநர், பெறுநர் முகவரிகளை எழுதுதல் வேண்டும். அனுப்புநர் முகவரியில், நம்முடைய கதவு எண், தெரு பெயர், ஊர், வட்டம், மாவட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக இருக்க வேண்டும். அதே போல, பெறுநர் முகவரியும் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். மனுக்களில், மிக மிக முக்கியமான விசயமே இந்தப் பெறுநர் முகவரிதான். எந்தப் பிரச்சனைக்கு, எந்தக் கோரிக்கைக்கு யாரிடம் மனு செய்ய வேண்டும் என முன்பே விசாரித்து, அவர்கள் பெறும் வகையில் பெறுநர் முகவரி வைத்து மனு எழுத வேண்டும். அப்போதுதான் நம்முடைய மனுவானது, சரியான நபரின் கைகளில் கிடைத்து, அதற்குரிய சரியான நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும். வட்டாட்சியருக்கு எழுத வேண்டிய மனுவை, மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது வேறு யாருக்கும் மாற்றி எழுதினாலோ எப்போதும் நம்முடைய பிரச்சனை தீர்க்கவே படாமல் போகக்கூடும். ஆகவே, நம்முடைய பிரச்சனையைத் தீர்த்து வைக்க அதிகாரம் உள்ள அதிகாரி யார் என மனு எழுதும் முன்பே நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
அனுப்புநர், பெறுநர் முகவரிகளுக்கு அடுத்ததாக, ஒரு மனுவில் நாம் குறிப்பிட்டு எழுத வேண்டியது,’பொருள்’. பொருள் எனப்படுவது, ஒரு உப தலைப்பு. முன்பே நாம் மனுவின் ஆரம்பத்தில் எழுதிய தலைப்புதான் இங்கே பொருள். அதாவது, நாம் மனு எழுதுவதன் பொருளை, மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு நினைவூட்டுவது போல அமையும் ஒரு வரிச் சுருக்கம்.
பொருள் எழுதிய பின், ‘மதிப்பிற்குரிய ஐயா/அம்மா’ என விளித்து நம்முடைய மனுவின் கோரிக்கைப் பகுதியையோ, புகார் பகுதியையோ ஆரம்பிக்க வேண்டும். முன்னமே சொன்னாற் போல, தெளிவான நல்ல குண்டு குண்டான கையெழுத்தில் வரிக்கு வரி சீரான இடைவெளி விட்டு பிரச்சனையின் சாரம்சத்தை, வாசிப்பவருக்கு எளிதாகப் புரியும் படி சுருக்கமாக எழுத வேண்டும். நடந்தவற்றை அலல்து நமக்கு வேண்டியவற்றை கண்ணாடி போலத் தெளிவாக எழுத வேண்டும். பத்தி அல்லது எண் வாரியாகப் பிரித்து, நம்முடைய விவரங்கள், இப்போதைய நிலை, அதில் நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை அல்லது நமக்குத் தேவையான கோரிக்கை, அதிகாரி எடுக்க வேண்டிய நடவடிக்கை, எந்தச் சட்டத்தின் படி நாம் இந்த மனுவைச் செய்திருக்கிறோம் என்பன போன்ற விவரங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு எழுத வேண்டும்.
இறுதியாக, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு விண்ணப்பித்து விட்டு, நன்றி சொல்லி முடித்து மனுவின் வலது ஓரத்தில். ‘தங்கள் உண்மையுள்ள’ என்கிற விளியின் கீழ் நம்முடைய கையொப்பத்தை இட வேண்டும். அதன் கீழே, அடைப்புக்குறிக்குள் நம்முடைய பெயரைத் தெளிவாக எழுதவும் வேண்டும். பின், அதற்கு நேராக இடது ஓரத்தில், இடம் மற்றும் அன்றைய தேதியைக் குறிப்பிடுதல் அவசியம்.
நம்முடைய மனுவின் புகாருக்கோ, கோரிக்கைக்கோ வலு சேர்க்கும்படியான ஆவணங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றையும் மனுவுடன் சேர்த்து அனுப்ப மறக்கக் கூடாது. அப்படி அனுப்பும் பட்சத்தில், அந்த ஆவணங்களுக்கு வரிசையாக எண்கள் இட்டு, மனுவில் இணைப்புகள் எனக் குறிப்பிட்டு இணைத்து அனுப்ப வேண்டும். அதே போல, நாம் எழுதியிருக்கும் இந்த மனுவின் நகல் இவரைத் தவிர, வேறு சில அதிகாரிகளுக்கும் நாம் அனுப்ப வேண்டியத் தேவை இருந்தால், நகல், எனக் குறிப்பிட்டு அந்தந்த அலுவலகங்கள் /அதிகாரிகள் விவரத்தையும் நாம் மனுவில் குறிப்பிடுவது அவசியம்.