

பாலினத்தின் படி பார்க்கையில், இயற்கையாகவே ஆண் பலம் வாய்ந்தவனாகவும் பெண் பலம் குன்றியவளாகவும் கருதப்படுவதுதான் பெண், ஆணுக்கு அடிமையாக மாறிப் போனதன் முதற்காரணம். இது தவிர, பெண்ணின் மேல் மட்டுமே அதிகமாக சுமத்தப்படும் கற்பு, ஒழுக்கம் உள்ளிட்ட சில புனிதப் பட்டங்களும் பெண், அடிமையாகக் காரணம்தான்.
பெண்களுக்கு, ‘கற்பு’ என்கிற ஒரு சொல் இருப்பதைப் போல, ஆண்களுக்கு ஏதேனும் ஒரு சொல் புழக்கத்தில் இருக்கிறதா என யோசித்துப் பாருங்களேன். அப்படியே ஒரு வேளை ஒரு சொல் இருந்தாலும் கூட, பெண்களின் அளவிற்கு ஆண்களால் அது கடை பிடிக்கப்படுகிறதா..? கற்பு என்பதன், இன்னொரு பொருளான ‘பதிவிரதம்’ என்பதில் வரும், பதி என்பதே ஆணைத்தான் குறிக்கிறது. அதாவது, பெண்ணானவள் ஆணுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்கிறன சடங்குகள். ஆனால், இதுவே ஒரு கணவன் எனப்படும் ஆணுக்கு, அப்படியான கட்டுப்பாடுகள் இல்லை.
முற்காலத்தில், ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொண்டதற்கும், பெண்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்டதுதான் காரணம். அது மட்டுமல்லாமல், பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட முக்கிய உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்தது. பெண் சிசுக் கொலையின் அடிப்படைக் காரணமும், பெண் அடிமைத்தனம்தான்.
அடுத்ததாக, நம் சமூகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் திருமணச் சடங்குகள்தான் பெண் அடிமையாக நடத்தப்பட பெரும் காரணம் என்கிறார்கள் பெண்ணுரிமைப் போராளிகள். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பதே அவளை அடிமையாக்கிக் கொள்வது எனதான் பார்க்கப்படுகிறது. அதை நாசூக்காக மறைத்து, புனிதம், மதம் என்கிற பெயர்களில் சில பல சடங்குகளை செய்துவிக்கும் பழக்கமும் தொன்று தொட்டு நடந்து வருகிறது.
மக்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக செலுத்திக் கொள்ளும் அன்பும், மரியாதையும், காதலும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, இவருடன்தான் இனி நாம் வாழப் போகிறோம் என எடுக்கப்பட வேண்டிய ஒரு உறுதி மொழிதான் திருமணம். ஆனால், இங்கு வேலைக்குச் செல்லும் ஒரு பெண் திருமணமானவுடன் தன் வேலையை விட்டு விட்டு குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும், கணவனின் குடும்பத்தாருக்கு அனைத்து பணி விடைகளையும் செய்து, அவர்களுக்கு சமைத்து வைத்து எல்லா வேலைகளையும் பார்ப்பது அவசியம். அவள் வேலையை விடாமல் தொடர்ச்சியாகச் சென்றாலும் கூட, அலுவலகப் பணிகளைப் பார்ப்பதோடு வீட்டிலும் இந்தப் பணிகளை அவளேதான் செய்ய வேண்டுமென்பது கட்டாயம். சில ஆண்கள், வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும் பெரும்பாலும் பெண்களேதான் ஓர் அடிமையைப் போல எல்லா வேலைகளையும் செய்ய நேர்கின்றது.
அதே போல, திருமணம் செய்து கணவன் இறந்து விட்டால், விதவையான பெண் மறுமணம் செய்யக்கூடாது எனும் கொடுமையும் அந்தக் காலத்தில் அதிகமாக இருந்து வந்ததும் பெண் அடிமைத்தனத்தின் எச்சம்தான். இப்போது இந்த அடிமைத்தானம், காலப் போக்கில் குறைந்து விட்டது. இதுவே பழங்காலத்தில், உடன்கட்டை ஏறுதல் எனும் கொடூரமாகக் கூட இருந்தது. அதாவது, கணவன் இறந்து விட்டால் அவனுடைய சிதையில் மனைவியும் தன் உயிரை விட்டு விட வேண்டும். பல்வேறு சமூகப் போராளிகள் போராடித்தான் இந்த நிலைமை இப்போது இல்லாதவாறு அறவே ஒழித்துள்ளார்கள்.
இன்னமும் கூட சில சமூகங்களிலும், நாடுகளிலும் மாலை நேரங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, குறிப்பிட்ட உடைகள்தான் அணிய வேண்டும், முகத்தை மறைத்துக் கொண்டுதான் உலவ வேண்டும், ஆண் துணையின்றி வெளியேறக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுத்தான் உள்ளன. இந்த மூடப்பழக்க வழக்கங்களும், பெண்களின் தன்னம்பிக்கையைக் கலைத்து அவர்களை அடிமையாக்கத்தான் செய்கின்றன.
பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருப்பதோ அல்லது அவர்களாகவே அடிமைகளாக இருப்பதோ இரண்டுமே வெறும் பெண்களை மட்டுமே பாதிப்பதில்லை. ஆண்களையும் உள்ளடக்கிய, நம் ஒட்டு மொத்த சமூகத்தையேதான் பாதிக்கும். பெண் சொத்துரிமை, கல்வி, மறுமணம், விவாகரத்து முதலான விசயங்களில், இப்போது பெருமளவில் பெண் அடிமைத்தனமானது மாறிக் கொண்டு வந்தாலும், இன்னும் முழுமையாக மாற்றம் வர வேண்டியது மிக அவசியம்.