
கடினமான விஷயங்களைப்பற்றிப் பேசும்போது ‘அது பெரிய தலைவலி’ என்று சொல்கிறோம். அப்படியானால், தலைவலி என்பது மனிதனுக்கு எப்படிப்பட்ட துன்பத்தைத் தரக்கூடியது என்பது தெளிவாகப் புரியும்.
நமக்குத் தலைவலி பல இடங்களில் பல விதங்களில் வரக்கூடும். அதில் குறிப்பாக, பின்மண்டையில் வருகிற தலைவலியைப்பற்றியும் அதற்குப் பொதுவாக என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பதுபற்றியும் இந்தக் கட்டுரையில் காண்போம்.
தவறாக அமர்வதால் வரும் தலைவலி
இன்றைய உலகில் நாள்முழுக்க அமர்ந்திருக்கும் பணிகள் மிகுதியாகிவிட்டன. இதனால் நமக்கு உடற்பயிற்சி குறைவது ஒருபக்கமிருக்க, நாம் எப்படி அமர்கிறோம் என்பதும் நம்முடைய நலனுக்கு முக்கியம். ஒருவேளை நாம் எப்போதும் சோர்வாகச் சரிந்து அமர்ந்திருந்தால் அது நம்முடைய தலை, மேல் முதுகு, கழுத்து, தாடை ஆகிய பகுதிகளில் அழுத்தத்தை உண்டாக்கலாம், அங்குள்ள நரம்புகளைப் பாதிக்கலாம், அதன்மூலம் பின் மண்டைத் தலைவலி வரலாம். இதைத் தவிர்க்கவேண்டுமென்றால் நம்முடைய அமரும் நிலை, நிற்கும் நிலை ஆகியவற்றைக் கூர்ந்து கவனிக்கவேண்டும், இயன்றவரை நேராக நிமிர்ந்து உட்காரப் பழகவேண்டும். தேவைப்பட்டால் வல்லுனர்களிடம் ஆலோசனை, சிகிச்சை பெறலாம்.
அழுத்தத்தால் வரும் தலைவலி
பணி அல்லது தனிப்பட்ட அழுத்தத்தால் ஒருவர் பதற்றத்துடன் இருந்தால், அல்லது, பசி, சினம், மனச்சோர்வு, களைப்பு போன்ற உணர்ச்சிகளை எதிர்கொண்டால் அதுவும் தலைவலியை உண்டாக்கக்கூடும். நம்முடைய மனநிலைக்கும் உடல்நிலைக்கும் தொடர்பு உண்டு என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலமுறை உறுதிசெய்திருக்கிறார்கள். அதனால், இவ்வகை அழுத்தத்தைச் சந்திக்கிறவர்கள் தங்களுடைய பின் மண்டையில் இறுக்கமான உணர்வை அனுபவிப்பார்கள், சிலருக்கு இது வாரக்கணக்கில் தொடர்ந்து துன்பத்தைத் தரக்கூடும்.
அவர்கள் இந்தத் தலைவலி எந்த நேரங்களில் வருகிறது என்பதைக் கவனித்துக் குறித்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு, அப்போது என்னமாதிரியான உணர்ச்சிகள் தங்களை ஆட்கொண்டிருந்தன என்பதை அறிந்து அவற்றைச் சரிசெய்ய முயலலாம்.
ஆர்த்ரிடிஸ் (கீல்வாதத்) தலைவலி
பொதுவாக ஆர்த்ரிடிஸ் என்றால் எல்லாரும் கால் மூட்டில் வரும் வலியைத்தான் நினைப்பார்கள். ஆனால், இந்தப் பிரச்சனை முதுகெலும்பிலும் வரக்கூடும். அதுபோன்ற நேரங்களில் பின் மண்டை வலி உண்டாகலாம்.
இந்தப் பிரச்சனை கொண்டவர்கள் சிறப்புத் தகுதி பெற்ற மருத்துவ வல்லுனரைச் சந்தித்துப் பேசவேண்டும். பின்னர், அவர்கள் அவருடைய ஆலோசனையின்படி தேவையான பரிசோதனைகளைச் செய்துகொண்டு சிகிச்சை பெறலாம்.
Occipital Neuralgia தலைவலி
இதுவும் நரம்பு தொடர்பான பிரச்சனைதான். ஆனால், இது மக்களிடம் அரிதாகதான் காணப்படுகிறது. இவர்களுடைய முதுகெலும்பிலிருந்து தலைக்குச் செல்லும் நரம்பில் வீக்கம் அல்லது காயம் ஏற்படுவதால் பின் மண்டை வலியை உணர்கிறார்கள். இதற்கும் நரம்பியல் வல்லுனர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுவதும் அவர்களுடைய நோய்க் கண்டறிதலின்படி சிகிச்சை எடுத்துக்கொள்வதும் அவசியம்.
பின் மண்டை வலிக்கான சிகிச்சைகள்
எப்போதும் எந்த வலிக்கும் நாமாகச் சிகிச்சை எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் ஒரே பிரச்சனைக்குப் பல காரணங்கள் இருக்கலாம், அந்தக் காரணத்தைக் கண்டறிந்து உரிய மருந்துகள் அல்லது வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பரிந்துரைக்கும் வல்லுனரிடம் சென்றால்தான் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க இயலும். இல்லாவிட்டால் நாமாக எதையேனும் செய்து பிரச்சனையை இன்னும் பெரிதாக்கிக்கொண்டுவிடுவது சாத்தியம்தான்.
அதனால், பின் மண்டை வலியைச் சரிசெய்யச் சரியான அமர்தல், நிற்றல், அழுத்தத்தைக் குறைத்தல், சிறு உடற்பயிற்சிகள் போன்றவற்றை முயன்றுபார்க்கலாம். ஆனால், அவற்றால் பிரச்சனை சரியாகாவிட்டால் முறைப்படி மருத்துவ உதவி பெறுவது நல்லது.