பங்குச் சந்தை முதலீட்டில் வெற்றி ரகசியம் என்ன?

பங்குச்சந்தை என்பது ஓர் நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்வது ஆகும். ஒரு நிறுவனத்தை மேலும் பெரிய நிறுவனமாக மாற்ற அதன் உரிமையாளருக்கு பணம் தேவைப்படும். அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதை பல பகுதிகளாக பிரித்து அவற்றை விற்க முடிவு செய்வர். இந்த செயல்பாட்டினை ஐபிஓ இணிஷியல் பப்ளிக் ஆபெரிங் (IPO-Initial Public Offering) என்று சொல்வர். பங்குகளை வாங்குபவருக்கு நிறுவனம் பெரும் லாபம் மற்றும் நஷ்டத்தில் பங்கு உண்டு.
இங்கு பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும், விற்கவும் ஏலம் உண்டு. இது ஒரு மிகப்பெரிய ஏல சந்தை. விற்பவரும், வாங்குபவரும் பங்குபெறும் ஏல சந்தை.
இவ்வாறான மிகப்பெரிய சந்தையையும் அதன் முரண்பாடுகளையும் கண்காணிக்க அரசு அமைப்பு உண்டு. இந்தியாவில் பங்கு சந்தையை கண்காணிக்கும் அமைப்பின் பெயர் செபி ( SEBI- Securities and Exchange Board Of India). இவ்வாறு பங்குகளை விற்க வாங்க பல ஏல சந்தைகள் உண்டு. இந்தியாவில் இருக்கும் ஏல சந்தைகள்- மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ( NSE-National Stock Exchange, BSE- Bombay Stock Exchange).
பாம்பே பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 30 பெரிய நிறுவனங்கள் சார்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 50 பெரிய நிறுவனங்களை சார்ந்ததாக உள்ளது.
இந்த குறியீடு மூலமாக பங்குச் சந்தை நிலவரத்தை அறிய முடியும். பங்குச் சந்தையின் குறியீடு ஏற்றத்தில் இருந்தால் இந்தியாவில் நிறுவனங்களுக்கு சாதகமான நிலைமை மற்றும் குறியீடு வீழ்ச்சி அடைந்தால் சாதகமான நிலைமை இல்லை என்றும் அறிந்து கொள்ளலாம். இந்த குறியீடுகளை வைத்து பங்குகளை அறிந்துகொள்ள முடியும். ஒரு நிறுவனத்தின் பங்குகளை நாம் வாங்கும் போது அதன் லாப நஷ்டத்தோடு இணைக்கப்படுகிறோம். பங்குகள் அதிகமாகும்போது நாம் முதலீடு செய்வதை விட அதிகமாகவும், பங்குகள் குறைந்தால் குறைவாகவும் கிடைக்கும்.
ஒருவர் எவ்வளவு பங்குகளை வேண்டுமானாலும் வாங்க முடியும். முதலீடு செய்ததை விட அதிகமாக விற்றால் லாபம் பெற முடியும். பங்குகள் வீழ்ச்சி அடைந்தால் நாம் முதலீடு செய்ததை இழக்க நேரிடும். பங்குகளின் விலை நாளுக்கு நாள் வேறுபடும். ஆகையால் முதலீடு செய்து காத்திருக்கும் நிலைமையும் உண்டு. பங்குச் சந்தை, வர்த்தகம் போன்றவற்றை பற்றி நல்ல புரிதல் அவசியமாகிறது. முக்கியமாக குறைந்த விலையை அடையாளம் காணவும், பின்னர் விலை அதிகரிக்கும்போது விற்பனை செய்யவும் திறன் வேண்டும்.
இதில் தொடர் கண்காணித்தல் என்பது அவசியமாகிறது. பொறுமையாக சரியான முடிவுகளை எடுத்தல் வேண்டும். இங்கே அதிர்ஷ்டத்திற்கு இடமில்லை. ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன் அந்த நிறுவனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதன் நிகழ்காலத்தை மட்டும் பார்க்காமல், எதிர்காலத்தில் அதன் வாய்ப்புகளை தெரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்ய வேண்டும். நாம் முதலீடு செய்யும் நிறுவனம், பங்குச் சந்தையின் நிலவரம் போன்றவற்றை அறிந்து செயல்பட வேண்டும். உபரி நிதிகளை மட்டும் முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. பங்குச்சந்தையில் முக்கியமாக கருதுவது அடிக்கடி நிகழும் ஏற்றத்தாழ்வு. இது தற்காலிக இழப்பை ஏற்படுத்தும்.
இதில் நிபுணத்துவம் பெறுவதற்க்கு, முதலீடு செய்வதும், அப்பொழுது உள்ள நிலைமையை புரிந்து கொள்ளுதலும் மிகவும் முக்கியம். இவ்வாறு செய்தால் மட்டுமே இழப்புகளை சமாளிக்க முடியும். எப்போது விற்க வேண்டும், எப்போது வெளியேறவேண்டும், சந்தையின் நுழைவு புள்ளி, முதலீடு செய்ததை பாதுகாப்பது, எப்படி வெளியேறுவது, இழப்பைப் பொறுத்து எப்போது இருக்க வேண்டும் என்பதில் எல்லாம் கவனமாக இருத்தல் வேண்டும்.
ஆனால் சரியான நேரத்தில் முதலீடு செய்தால் கவலை கொள்ள தேவையில்லை. பங்குச் சந்தையின் அடிப்படை விதியாக கருதுவது விலை குறைவாக இருக்கும்போது வாங்கவும் அதிகரிக்கும்போது விற்கவும் வேண்டும் என்பதே ஆகும். இதை பின்பற்றுவது கடினம். ஏனெனில், சரியாக கணித்திடுவதில் சிரமம் உண்டு. எப்போது வாங்க, விற்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள தெளிவான ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் முதலீட்டாளர்கள் கொடுக்கும் மதிப்பீடு மாறும். ஒரு பங்கில் நமக்கு லாபம் கிடைத்தால் கடந்த காலத்தைப் போல் வருங்காலத்திலும் அதில் லாபம் அதிகரிக்கும் என்று கூற முடியாது. இதை சில விகிதங்களை வைத்து கணக்கிட முடியும். இதைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள தினம் செய்திகளை வாசிப்பது மற்றும் முக்கிய செய்திகளை தொடர்ந்து கவனிப்பது, அதற்கான புத்தகங்ளைப் படிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். பங்குசந்தையில் முதலீடு செய்ய மின்னணு கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். அதை டிமேட் அக்கவுண்ட் (demat account) என்பர். அதற்கு தேவையான ஆவணங்களாவன- தொலைபேசி எண், புகைப்படம், ஆதார் கார்ட் ஆகியவை.
இதை புரோக்கர் (தரகர்கள்) மூலம் செய்ய முடியும். அவர்கள் மூலமே பங்குகளை வாங்க விற்க முதலீடு செய்யும் நிறுவனத்தையும், அதன் கடந்த காலத்தை பற்றியும் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. நாம் வாங்கிய பங்குகள் நம்முடைய அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இவையே எவ்வாறு முதலீடு செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு சில குறிப்புகளாக கருதப்படுபவனாகும்.