பங்குச்சந்தைமுதலீட்டின்வெற்றிஇரகசியம்என்ன..?


எந்த ஒரு செயல் அல்லது தொழிலிலும் வெற்றி பெறுவதற்கான முதல் இரகசியமே, ‘ஆழம் தெரியாமல் காலை விடக் கூடாது’ என்பதுதான். பங்குச் சந்தையைப் பொறுத்த மட்டில், இது நுறு சதவீதம் பொருந்தக் கூடிய ஒரு வழிமுறை. பங்குச் சந்தையில் நாம் வர்த்தகம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால், சந்தை எவ்வளவு பெரியது, ஆழமானது என அதைப் பற்றி நன்றாகப் படித்துத் தெரிந்து கொள்வது அவசியம். நாம் வாங்க நினைக்கும் பங்கைப் பற்றியும், சந்தையில் அதன் மதிப்பு என்ன என்பதைப் பற்றியும், எந்த வித அவசரமும் இல்லாமல், ஆற அமர ஆராய்ந்து படிக்க வேண்டும். அப்படி ஆராயும் போதே, நமக்கு அந்தப் பங்கின் சாதக பாதக அம்சங்கள் அனைத்தும் தெரிந்து விடும். இதுதான் பங்குச் சந்தை வெற்றி இரகசியத்தின் முதல் படி.
முழுமையான ஆய்வு முதல் படி என்றால், சரியான நேரத்திற்காகக் காத்திருத்தல் என்பதுதான் அடுத்த படி. ஒரு பங்கின் தற்போதைய நிலை வாங்குவதற்கு ஏற்றதா இல்லையா எனப் பார்த்து, சரியான விலைக்காகக் காத்திருக்க வேண்டும். உண்மையில், நம்முடைய முதல் படியான ஆய்வை ஒழுங்காகச் செய்திருந்தாலே, இந்தப் படி தானாகவே மிகவும் எளிமையான ஒன்றாக அமைந்து விடும். சரியான பங்கில், சரியான நேரத்தில், சரியான அளவு என்பதுதான் பங்குச் சந்தை முதலீட்டுக்கான தாரக மந்திரம்.
ஒரு பங்கில் முதலீடு செய்வதற்கு எப்படி காத்திருக்கிறோமோ, அதே போல முதலீடு செய்த பிறகும் காத்திருத்தலும் முக்கியம். எந்த ஒரு பங்கும், ஒரே இரவில் வானாளவ வலர்ந்து நமக்கு பணம் ஈட்டித் தந்து விடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய முதலீட்டுப் பணம், படிப்படியாக வளர்வதைக் காண்பதும் ஒரு மகிழ்ச்சிதானே..? அது வளர்வதைப் பார்த்து நாம் இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நம் பணம், சந்தையில் முதலீடாக இருக்கும் போது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றோர் இரகசியம், Stop loss. அதாவது, நட்டத்தை மட்டுப்படுத்துதல். எவ்வளவு ஆய்வு செய்தாலும் சரி, பங்குச் சந்தை என்பது யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாதது. எப்போது அங்கு என்ன நேரும் என்பது யாருக்கும் புரியாது. ஆகவே, நாம் நன்றாக ஆய்வு செய்து சரியான நேரத்தில் முதலீடு செய்து வைத்திருக்கும் பங்குகள் தீடிரென அதல பாதாளத்திற்கு வீழவும் நேரலாம். அப்படி வீழும் நேரத்தில், குறைவான சேதாரத்துடன் தப்பிக்கவே இந்த Stop loss யுக்தி. தொடர்ச்சியான கவனித்தலில் நாம் நிர்ணயித்து வைத்திருக்கும் நட்டத்தை விட அதிகமாகச் சென்றால் உடனே அந்தப் பங்குகளை விற்று விட்டு வெளியேறுதலே வெற்றி தரும். இதற்காக நாம் முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட விலையை என நிர்ணயித்து வைத்துக் கொண்டு, பங்குச் சந்தையில் இறங்க வேண்டும்.
பங்குச் சந்தை வெற்றிக்கு முக்கியமான இன்னொன்று, ஒழுக்கம். சந்தையில் நமக்கிருக்கும் முதலீட்டின் பாதுகாப்பு, நட்டத்தை மட்டுப்படுத்தல் என மேற்சொன்ன இரண்டையும் இராணுவக் கட்டுப்பாட்டு ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும். எதில் பிசகு நடந்தாலும், சமரசமில்லாமல் மீட்பு நடவடிக்கை உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தது, நம்முடைய மொத்த முதலீட்டையும் ஒரே வகையான பங்குகளில் குவித்து வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு குறிப்பிட்ட வகைமைகளிலான (SETOR) பங்குகளில் மட்டுமே நாம் முதலீடு செய்து வைத்திருந்தால், என்றைக்காக இருந்தாலும் அது ஆபத்து என்பதை உணர வேண்டும். எடுத்துக் காட்டிற்கு, நம்முடைய சந்தை முதலீடுகள் அனைத்தும் வங்கிகள் சார்ந்தே இருந்தால் ரிசர்வ் வங்கி மூலம் அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவுக்கும் நம் பங்குகள் இலாப நட்டத்தில் பங்கெடுக்க நேரிடும். ஆகவேதான் நாம் வங்கி, ரியல் எஸ்டேட், பைனான்ஸ், பார்மா, சிறு தொழில்கள் என பலவாறான வகைமைகளில் முதலீட்டை பரப்பி வைத்துக் கொள்தல் அறிவார்ந்த செயல். ஒரு வகைமையில் நட்டம் என்றாலும், மற்றதன் மூலம் நம்மால் ஈடு கட்டிக் கொள்ள முடியும்.
இறுதியாக, பங்குச் சந்தை முதலீட்டில், குறுகிய கால முதலீடு நீண்ட கால முதலீடு என பிரித்துப் பார்க்க எதுவும் இல்லை. நம்முடைய எந்த முதலீடு என்பதும் பணம்தான். அது இலாபத்தை ஈட்ட வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டே நாம் செயல்பட வேண்டும். அது வெற்றியின் இன்னொரு பெரிய இரகசியம்.