நரம்பு தளர்ச்சி வர என்ன காரணம்?

சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற ஒருவருக்குத் திடீரென்று வலி வருகிறது, அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் களைப்பாக உணர்கிறார் என்றால், ஒருவேளை அவருக்கு நரம்புத் தளர்ச்சிப் பிரச்சனை இருக்கக்கூடும்.
அது என்ன நரம்புத் தளர்ச்சி?
நம்முடைய உடல்முழுவதும் நரம்புகள் இருக்கின்றன. அவற்றின்மூலம்தான் தகவல் தொடர்பு நடைபெறுகிறது. எடுத்துக்காட்டாக, கையில் ஒரு முள் குத்துகிறது என்றால் அந்தத் தகவல் நரம்புகளின் வழியாகத்தான் மூளை அல்லது முதுகெலும்புக்குச் செல்கிறது, மூளையோ முதுகெலும்போ கையை எடுத்துவிடச்சொல்லிக் கட்டளையிடுகிறது, அந்தக் கட்டளையும் நரம்புகளின் வழியாகத்தான் கைக்கு வருகிறது. இப்படிச் சிறியதும் பெரியதுமாகப் பலப்பல தகவல் தொடர்புகள் நரம்புகளின்வழியாக நடைபெறுகின்றன.
இந்த முக்கியமான தகவல் தொடர்புப் பாதையில் ஒரு தடங்கல் ஏற்பட்டால் என்ன ஆகும்? பெரிய நெடுஞ்சாலையில் ஓர் இடம் அடைக்கப்பட்டால் அங்கு நெரிசல் ஏற்பட்டு வண்டிகள் ஓட்டத்துக்குத் தடை உண்டாகுமில்லையா? அதைப்போல்தான் நரம்புத் தளர்ச்சி மனிதர்களுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கக்கூடும்.
அதனால், நரம்புத் தளர்ச்சியை இயன்றவரை முன்கூட்டியே கண்டறிந்து வல்லுனரிடம் சிகிச்சை பெறவேண்டும். அதன்மூலம் பிரச்சனையைச் சரிசெய்கிற வாய்ப்பு மிகுதியாகும்.
நரம்புத் தளர்ச்சி ஏன் வருகிறது?
நரம்புத் தளர்ச்சிக்கு வல்லுனர்கள் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் முக்கியமான சில:
- மது அருந்தும் பழக்கம்
- வேறு சில மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்
- நீரிழிவு
- அதிர்ச்சியான நிகழ்வுகளைச் சந்தித்தல்
நரம்புத் தளர்ச்சி எப்படி வெளிப்படுகிறது?
நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இடத்தில் ஊசி குத்துவதுபோல் உணர்வார்கள். சில நேரங்களில் இது மிகுந்த வலியாகவும் வெளிப்படக்கூடும்.
சிலர் நரம்புத் தளர்ச்சியால் விழுந்துவிடக்கூடும், தாங்கள் தொடுகிற, அல்லது கால் வைக்கிற இடங்களில் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் உணர இயலாமல் போகலாம்.
சிலருக்குத் தசைகள் வலுவிழக்கலாம். இதனால், அவர்களால் நடக்க இயலாது, அல்லது, கை, கால்களை அசைக்க இயலாது.
நரம்புத் தளர்ச்சியால் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவையும் பாதிக்கப்படலாம், வியர்வை மிகுதியாக வரலாம், சிறுநீர் கழித்தல், செரிமானம் போன்றவை பாதிக்கப்படலாம், பாலியல் செயல்பாடுகளும் பாதிக்கப்படக்கூடும்.
நரம்புத் தளர்ச்சிக்கான சிகிச்சைகள்
மேலுள்ளதுபோல் இத்தனை வகைகளில் வெளிப்படுகிற ஒரு பிரச்சனைக்கு இதுமட்டும்தான் சிகிச்சை என்று எதையும் சொல்லிவிட இயலாது. எந்தப் பகுதியில் பிரச்சனை, அது எப்படிப்பட்ட பிரச்சனை, அது எவ்வாறு வெளிப்படுகிறது என்பவற்றைப் பொறுத்துச் சிகிச்சையின் வகையும் மாறுபடும். அதனால், இந்தத் துறையில் நல்ல திறமையும் அனுபவமும் கொண்ட மருத்துவ வல்லுனர்களைச் சந்தித்துப் பேசவேண்டும், நம்முடைய பிரச்சனையைப்பற்றிய விரிவான தகவல்களை அவர்களுக்கு வழங்கவேண்டும், உரிய நரம்பியல், ரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களால் பிரச்சனையைத் துல்லியமாக அடையாளம் காண இயலும், அதற்கு என்ன சிகிச்சை என்று பரிந்துரைக்க இயலும்.
நரம்புத் தளர்ச்சிக்குப் பலவிதமான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அத்துடன், பிரச்சனை எங்கு உள்ளது என்பதைப் பொறுத்துக் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், மசாஜ் போன்றவையும் பயன்படலாம். சில நரம்புத் தளர்ச்சிப் பிரச்சனைகளுக்கு அறுவைச் சிகிச்சையும் தேவைப்படக்கூடும்.
உணவின் முக்கியத்துவம்
நல்ல உணவு நம்முடைய நலனைப் பாதுகாக்கக்கூடியது. நரம்புத் தளர்ச்சிப் பிரச்சனை கொண்டோர் தங்களுடைய நரம்புகளைப் பாதுகாக்கும் உணவுவகைகளை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றை முறையாகப் பின்பற்றினால், வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செயல்படுத்தினால் அவர்களுடைய சிகிச்சை இன்னும் நல்ல பலன் தரும்.