நம்மைப்பற்றிய விவரங்கள் வலைதளங்களில் கசிவதை நாமே கண்டறிந்து கட்டுப்படுத்தலாம். – Google தேடுபொறியின் சைபர் பாதுகாப்பில் புதிய அம்சம்.

செய்தி சுருக்கம்:
ஒவ்வொரு தனிநபரின் பல்வேறு விவரங்களும் பல்வேறு வலைதளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கண்டறிய Google நமக்கு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. நம்முடைய தொடர்பு எண், முகவரி மற்றும் இமெயில் முகவரி போன்றவை எந்தெந்த வலைதளங்களில் வெளிப்படையாக உள்ளன என்றும், அவற்றில் தேவையில்லாத வலைப்பக்கத்தில் உள்ள நம் விவரங்களை நாமே அழித்துக் கொள்ளவும் உதவும் முக்கியமான அப்டேட்டை Google தேடுபொறியில் இணைக்க உள்ளனர். இதுவரை எங்கெல்லாம் நம் விவரங்கள் பதிவேற்றப்பட்டு உள்ளதோ அவற்றை பார்க்கவும், இனிமேல் எங்காவது பதிவேற்றம் செய்யப்பட்டால் அதனை ஒரு எச்சரிக்கை நோட்டிபிகேசன் மூலம் நமக்கு தெரியப்படுத்தவும் Google வசதி செய்துள்ளது.
இந்த வசதியால் நாம் நம்முடைய விவரங்கள் பல இடங்களில் தேவை இல்லாமல் உலா வருவதை தவிர்க்க முடியும், மேலும் நமக்கே தெரியாமல் நம் விவரங்களை வெளிப்படுத்தும் வலைதளங்களின் மொத்த பட்டியலையும் பார்க்க முடியும், வேண்டாத அல்லது விரும்ப தகாத இடங்களில் உள்ள நம் விவரங்களை நாம் அங்கிருந்து நீக்கி விட முடியும்.
ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது?
வருகின்ற செப்டம்பர் மாத இறுதியில் Google இந்த வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் நாம் நம்முடைய கைபேசி அல்லது கணினியில் உள்ள Google தேடுபொறியில், “results about you” என்று டைப் செய்து தேடும்போது நம்மை பற்றிய விவரங்களை கொண்டிருக்கும் அனைத்து வலைதள முகவரிகளும் காண்பிக்கப்படும். இந்த விவரங்களை நாம் எடுக்க நிறைய தேடல்களை செய்ய வேண்டி இருந்தது தற்போது இவ்வளவு எளிதாக ஒரே பட்டியலாக பார்க்க முடியும் என்பது சிறந்த அம்சமாக பார்க்கப்படுகிறது. நாம் மறந்துபோன அல்லது நமக்கே தெரியாத பல வலைதளங்கள் நம் விவரங்களை கொண்டுள்ளன, இனிமேல் அவை அனைத்தும் ஒரு கிளிக்கில் தெரிந்து விடும்.
Google வடிவமைத்துள்ள இந்த வசதியில், நாம் நம் விவரங்களை அதற்குரிய படிவத்தில் நிரப்பி “results about you” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் போது அந்த படிவத்தில் நாம் தந்துள்ள விவரங்களுக்கு ஒத்துப்போகும் அனைத்து வலைதளங்களையும் கண்டறிந்து நம்மிடம் காண்பிக்கும். அவற்றில் எவை எல்லாம் நம் அனுமதியின்றி நம் விவரங்களை வெளியிட்டு உள்ளன என்பதை அறிந்து அவற்றை நீக்கிவிட அதே வலைத்தளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
என்றோ, எப்போதோ நாம் உள்ளிட்ட நம் விவரங்கள் அனைத்தும் அப்படியே அந்த வலைதளங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும், இந்த வலைதளங்களை எல்லாம் நாம் கண்டறிய பெருமுயற்சி செய்ய வேண்டி இருந்த சூழ்நிலையில், Google அறிமுகப்படுத்த உள்ள இந்த வசதியானது அதை மிக எளிதாக்கி உள்ளது. எளிதாக ஒரே கிளிக்கில் நம் விவரங்கள் அடங்கியுள்ள அனைத்து வலைதளங்களையும் பார்வையிட்டு பரிசோதித்து தேவை இல்லையெனில் நீக்கி விட வழிவகை செய்துள்ளது.
இந்த புதிய அம்சத்தில் இன்னும் கூடுதலான பலன்கள் என்னவெனில், நம்முடைய விவரங்கள் எதிர்காலத்தில் எந்தவொரு வலைத்தளத்தில் வெளியானாலும் நமக்கு உடனடியாக எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கும், அதுபோக நம்முடைய விரங்களை நீக்க கோரியிருந்த விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளது என்றும் பரிசோதித்து கொள்ளலாம். அதன் செயல்பாடு நிலவரம், நீகப்பட்டதா அல்லது வேண்டுகோள் நிராகரிக்க பட்டதா என்பதை எல்லாம் நாம் Google Hub மூலம் நிர்வகித்து கொள்ள முடியும்.
இன்னொரு முக்கியமான விசயத்தையும் நாம் இங்கு தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது, அதாவது நாம் Google மூலமாக நம்முடைய விவரங்கள் வெளியாகியுள்ள வலைதளங்களில் இருந்து அவற்றை நீக்கி விட்டாலும் கூட அந்த தகவல்கள் அங்கிருந்து முற்றிலுமாக அழிந்து விடாது. வெளிப்படையாக காண்பிப்பது மட்டுமே நீக்கப்படும், அந்த வலைதளங்களில் ஆழமான தேடல்களை செய்தால் உங்கள் விவரங்களை அங்கிருந்து அறிந்து கொள்ள முடியும்.
Google புதிதாக அறிமுகம் செய்யவுள்ள இந்த வசதியில் அது சில கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. தனிநபர்களின் விவரங்களை கொண்டிருக்கும் அரசாங்க வலைதளங்களில் மற்றும் கல்வி நிறுவன வலைதளங்களில் இருந்து நாம் அவற்றை நீக்க முடியாது, அங்கெல்லாம் இந்த வசதி எந்த மாற்றத்தையும் செய்ய அனுமதிக்காது. Facebook மற்றும் Gmail போன்ற வலைதளங்களில் உள்ள நம்மால் பதிவேற்றப்பட்ட விவரங்கள் எதையும் நீக்க முடியாது.
நமக்கு சம்பதமில்லாத அல்லது விளம்பர அழைப்புகள் வந்து தொல்லை தரும் சமயங்களில் Google அளித்துள்ள இந்த வசதியின் மூலம் எந்த வலைத்தளம் நம் தொடர்பு எண்ணை அம்பலப்படுத்தி உள்ளது என்று விரைவில் கண்டறிந்து அதனை நீக்கிவிட முடியும். நம் விவரங்களை வெளியாட்கள் அறிந்து கொள்ளாமல் பாதுகாப்பாக இருக்க இது உதவும். தற்போது அமெரிக்காவில் மட்டுமே ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த வசதி இன்னும் சில தினங்களில் உலக நாடுகள் அனைத்திலும் அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது என்று Google தெரிவித்தது.
பின்னணி:
அமெரிக்காவில் வெள்ளோட்டம் பார்க்க அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதியின் பயன்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தும், மாற்றங்கள் தேவைப்படும் பட்சத்தில் மாற்றியும் விரைவில் முழுமையான ஒரு வசதியாக உலக மக்கள் அனைவரின் பயன்பாட்டிற்காக வரவுள்ளது. இதன்மூலம் நம்முடைய அந்தரங்க விவரங்கள் வலைதளங்களில் உலவுவதை நாம் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த முடியும்.
அறிவியல் வளர்ச்சியின் சாதக பாதகங்கள் அனைத்தும் அடுத்தவொரு புதிய கண்டுபிடிப்பால் மனிதனுக்கு உதவும் வகையில் மாற்றிக்கொள்ள முடிகிறது அறிவியலால். நம் விவரங்கள் நமக்கே தெரியாமல் பல வலைதளங்களில் இருப்பது நமக்கு பாதகமான அம்சமாக இருக்கு பட்சத்தில் அவற்றை நீக்கிவிட Google இப்படிப்பட்ட ஒரு எளிதான வசதியை நமக்கு அளித்துள்ளது. இதன் மூலம் நாம் நம்முடைய சுய விவரங்கள் எங்கெங்கு காண்பிக்க பட வேண்டும் என்று கட்டுப்படுத்தி கொள்ள முடியும்.