தைராய்டு குணமாக எளிய வழிகள்.

தைராய்டு என்பது மனித உடலில் சுரக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு ஹார்மோன் ஆகும்! நம்முடைய கழுத்துத் தாடையின் கீழ்புறம் மைந்திருக்கும் சுரப்பிகளிலிருந்து இது சுரக்கிறது! இந்த ஹார்மோன், உடலில் ஓடும் நம் குருதியின் மூலம் உடல் முழுவதும் செலுத்தப்பட்டு, திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றது. தைராய்டு மிகச் சரியாக வேலை செய்ய மூளை மற்றும் உடலின் சில குறிப்பிட்ட பாகங்களின் உதவியும் அவசியம். இது மிக அதிகமாகச் சுரந்தாலும் ஆபத்து, மிகக் குறைவாகச் சுரந்தாலும் ஆபத்துதான். முன்னதை overactive thyroid என்றும், பின்னதை underactive thyroid என்றும் வகைப்படுத்துகிறது மருத்துவ உலகம். மனிதர்களுக்கு தைராய்டு பிரச்சனை ஏற்பட்டால், அவர்களுடைய உடல் இயக்கமே கூட பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உண்டு. எப்போதும் குளிராகவே உணர்தல், அடிக்கடி சோர்வடைதல், தோல் உலர்தல், எடை அதிகரித்தல், ஞாபக மறதி, உளச்சோர்வு, மாதவிடாய் உபாதைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை தைராய்டு நோயின் பொதுவான அறிகுறிகளாகும்.
ஆண்களை விட பெண்களைத்தான் இந்த நோய் அதிகம் தாக்குகிறது. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தைராய்டு விசயத்தில் மிகக் கவனமாக் இருக்க வேண்டியது அவசியம். மருத்துவர்களை அணுகி, அவர்களின் ஆலோசனைகளின் பெயரில், தொடர்ச்சியான மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம், தைராய்டு பிரச்சனைகளைச் சரிசெய்யலாம்.அதனுடன், நம்முடைய வீட்டில் கிடைக்கும் எளிய உணவுகளின் மூலமாகவும் கூட தைராய்டு பிரச்சனையைக் குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் முடியும்.
தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்:
யோகர்ட் & பால்:
தைராய்டை உருவாக்கும் நாளமில்லா சுரப்பிகள் சரியாகவும், சீராகவும் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்கு, அயோடின் சத்து மிக அவசியமான ஒன்றாகும். நாள்தொறும் ஒரு கப் அளவிற்கு கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பதால் நம்மால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் சத்தை அடைய முடியும். அது மட்டுமின்றி, தயிரிலிருந்து தயாரிக்கப்படும் குறைந்த கொழுப்புள்ள தயிரான யோகர்ட் மூலமும் நம்மால் குறிப்பிட்ட அளவு அயோடினைப் பெற முடியும். அன்றாட உணவில் அதைச் செர்ர்த்துக் கொள்வதன் மூலமும் தைராய்டுப் பிரச்சனையை எளிதாக எதிர்கொள்ளலாம்.
இறைச்சி & முட்டை:
அயோடினுக்கு அடுத்தபடியாக, நம் உடலில் ஏற்படும் துத்தநாகக் குறைபாட்டாலும் தைராய்டு நோய் உருவாகும் வாய்ப்புள்ளது. கோழி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சியில் அதிக அளவிளான துத்தநாகம் இருப்பதால் அவற்றை உட்கொள்வது தைராய்டு பிரச்சனைக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும். இதே போல, ஒரு கோழி முட்டையானது, 16% அயோடினும், 20% செல்லினியமும் கொண்டுள்ளது. அதிக முட்டைகள் சாப்பிடுவதன் மூலமும் நம்முடைய தைராய்டு சுரப்பிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தானியங்கள்:
வைட்டமின் B சத்துக் குறைபாட்டாலும் நமக்கு தைராய்டு பிரச்சனைகள் உருவாகலாம். ஆகவே, ஓட்ஸ், பார்லி மற்றும் பிரவுன் அரிசி போன்ற வைட்டமின் B சத்து அடங்கியுள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இவை தைராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை போதுமான அளவில் சுரக்க பெரிதும் உதவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி முதாலான காய்கறிகள், நம் உடலின் அயோடின் கிரகிக்கும் திறனைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்கும். எனவே, தைராய்டு நோய் உள்ளவர்கள் இந்தக் காய்களை முற்றிலுமாகத் தவிர்த்தல் வேண்டும். மேலும், சல்பர் அதிகமாக உள்ள, கார்ன், ஆலிவ் விதைகள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் தவிர்த்து விடுதல் நலம்.
பேக்கரி உணவுகளான, பிரெட், பப்ஸ் உள்ளிட்டவையும் செரிமானப் பிரச்சனைகளை உண்டு பண்ணுவதால், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் அவற்றை உட்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் முடிந்தவரையில் தவிர்த்து விடுவது தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமன்றி, இதய நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக்கூடிய செயல். இவற்றில் பயன்படுத்தப்படும் உப்பு, சோளம் ஆகியவை உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிக்கக் கூடியவை.