ஜாதகம் பார்ப்பது எப்படி..?

ஜாதகம் என்பதை ஒரு மனிதனின் ஆதாரப் புத்தகம் எனச் சொல்லலாம். காரணம் இந்து மதத்தில், ஒரு குழந்தை பிறக்கும் போதே அது பிறக்கும் நேரம், கிரக நிலை, நடசத்திரம் உள்ளிட்ட பல காரணிகளை வைத்து கணிக்கப் படுவதுதான் ஜாதகம். ஜனித்தலின் அடிப்படையில் அமைவதால்தான் அதன் பெயர் ஜாதகம். அதுவே ஒரு மனிதனின் அனைத்து பிறவிப் பயன்களையும், பாவங்களையும், நல்ல, கெட்ட நேரங்களையும் கிரக நிலைகளின் அடிப்படையில் நிர்மாணிக்கிறது. பிறந்த நேரமோ, தேதியோ சிறிதளவு பிசகினாலும் கூட அந்த மனிதனின் ஜாதக பலன்கள் ஜோதிடத்தில் சரியாக அமையாது. ஆகவே, ஜாதகம் எழுதப்படும் போதே எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக கவனத்தில் கொண்டு கவனமாக எழுதப் பட வேண்டும். அதே போல, ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானது. ஆனால், ஜாதகத்தின் கூறுகள் பொதுவானவை. ஜோதிட உலகில் அனைவருக்குமே அதே 12 இராசிகளும் 27 நட்சத்திரங்களும்தானே..? அதன் இடங்களையும், தன்மைகளையும் புரிந்து கொண்டால் ஜாதக பலன்களை, ஒரு ஜோதிடர் அளவுக்கு நம்மாலும் கணிக்க இயலும்.
எந்த ஒரு ஜாதகத்தின் நடுக் கட்டத்திலும் அந்த ஜாதகதாரரின் இராசி நடுவில் அமைந்திருக்கும். அதைச் சுற்றி, 12 இராசிகளுக்கென்று 12 தனித்தனி கட்டங்கள் அமைந்திருக்கும். ‘ல’ எனும் எழுத்தால் குறிப்பிடப்பட்டிருப்பது லக்னம். அதுதான் முதல் கட்டமாக கணக்குப் பெறும்! அதிலிருந்துதான் நாம் 12 கட்டங்களை எண்ண வேண்டும். இவற்றில், 1,4,7 மற்றும் 10 ஆகிய சதுர இடங்கள், கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கப்படுகின்றது. எடுத்துக் காட்டிற்கும் கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்.
- ஒரு ஜாதகத்தின் முதல் கட்டமான லக்னம்தான், அந்த ஜாதகத்தின் தோற்றத்தைப் பற்றிச் சொல்வதாகும். ஜாதகதாரரின் வாழ்க்கை முன்னேற்றம், சுகம் ஆகியவறை இது விவரிக்கும். ல்கக்னத்தில் ஒருவருக்கு புதனோ, குருவோ இருந்தால் அது ‘திக் பரம்’ பெற்ற ஜாதகமென ஜோதிட சாத்திரம் சொல்கிறது. திக் பரம் என்றால், ஜாதகத்தில் உள்ள தோஷக் குறைகளை தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மை ஆகும்.
- ஜாதகத்தின் இரண்டாம் கட்டம் என்பது குடும்ப ஸ்தானமாகக் கொள்ளப்படும். இது போக, தனம், வாக்கு ஆகியவற்றைக் குறித்தும் இதன் மூலம் அறியலாம்.
- மூன்றாம் கட்டம், தைரிய ஸ்தானம் எனப்படுகிறது. இதில் ஜாதகதாரரிம் தைரியம், வீரம், வீரியம், இளைய சகோதர சகோதரிகளுடனான உறவு, சிறு தூரப் பயணங்கள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்.
- நான்காம் கட்டத்தை சுக ஸ்தானம் என்பார்கள். இதில், உடல் நலம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
- ஐந்தாம் இடம், பூர்வ புண்ணிய ஸ்தானம். இதில், எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்தால் அது ஒரு சுத்தமான ஜாதகம் எனப்படுகிறது.
- ஆறாம் இடத்தை, இரண, ரோக. சத்ரு ஸ்தானம். அதாவது ஜாதகதாரருடைய எதிரிகளைப் பற்றிச் சொல்லக் கூடிய ஸ்தானம். தீராத கடன், வம்பு, தும்பு, வழக்கு, துக்கம் ஆகியவற்றைப் பற்றி இந்த இடம் விளக்கும்.
- ஏழாம் இடமானது, களத்திர ஸ்தானம். இது திருமணமான பெண்ணுக்குக் கணவனையும், ஆணுக்கு மனைவியையும் பற்றி எடுத்துக் கூறும் இடமாகும், அது தவிர, ஜாதகதாரரின் நெருங்கிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகளைப் பற்றியும் சொல்லும். மகிழ்ச்சி, நெடுந்தூரப் பயணங்கள், வருமானம் பற்றியும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
- எட்டாம் இடம், ஆயுள் ஸ்தானம் எனப்படும். ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி கூறும் ஸ்தானம். அஷ்டம ஸ்தானம், மறைவு ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் என்றும் சொல்லப்படும். இது பெண்களுக்கு அவர்களின் கணவர்களின் வாழ்நாளைப் பற்றி எடுத்துக் கூறும் கட்டமாக அமைகிறது.
- ஒன்பதாம் கட்டம், யோக ஸ்தானம் அல்லது பாக்கிய ஸ்தானம் எனச் சொல்லப்படும். இது குறிப்பாக தகப்பனாரைப் பற்றிக் குறிப்பிடுவதால், நல்ல தகப்பனார் அமைய அவர் மூலம் உதவிகள் கிடைக்க இந்த இடம் பலமாக அமையப் பெற வேண்டும். ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு என்கிற பழமொழி மிகப் பிரபலம் வாய்ந்தது.
- பத்தாம் இடம் என்பது, தொழில் ஸ்தானம் அல்லது ஜீவன ஸ்தானம். கர்ம ஸ்தான,ம் இராஜ்ய ஸ்தான எனவும் சொல்லப்படும். இதன் மூலம் ஜாதகதாரரின் தொழில், வியாபரம், வேலை உள்ளிட்ட விசயங்களை கணித்து அறிந்து கொள்ளலாம்.
- பதினொன்றாம் கட்டம் என்பது, இலாப ஸ்தானம் எனப்படுகிறது. ஆங்கிலத்தில் என்கிறார்கள். நாம் செய்யும் தொழிலால் வரக் கூடிய இலாபத்தை இந்தக் கட்டம் மூலம் கணிக்கலாம். ஆடை, அணிகலன்கள், சினிமா, நாடக வாய்ப்புகள் பற்றியும் இந்த பதினொன்றாம் இடம் மூலம் அறியலாம்.
- பனிரெண்டாம் இடம், அயன, சயன, விரய, போக, முக்தி ஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தின் வழியாக ஒருவரின் தூக்கம், சாப்பாடு, இல்வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இறந்த பின், கிடைக்கும் மோட்சம், முக்தி பற்றியும் இந்தக் கட்டத்தின் மூலம் கணிக்கலாம்.
இது ஜாதகம் பர்ப்பதற்குண்டான அடிப்படை விசயம் மட்டுமே…இதை முதலாக வைத்து, இன்னும் விரிவாக முயலும் பட்சத்தில், ஜாதகம் பார்க்கும் கலை அனைவருக்கும் கை கூடும்.