செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிர் மாதிரிகள் – நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் கண்டுபிடிப்பு.

விண்வெளி ஆராய்சிக்காக,உலகிலுள்ள ஒவ்வொரு நாடுமே தனக்கென ஒரு பிரத்யேக ஏஜென்சியை உருவாக்கி நடத்தி வருகின்றன. இந்தியாவிலும் கூட, அது இஸ்ரோ (ISRO) எனும் பெயரில் இயங்கி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இதே போன்ற, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்தான் நாசா. (NASA – National Aeronautics and Space Administration). சர்வதேச அரங்கில், அமெரிக்காவனது அரசியல் உள்ளிட்ட எல்லா விசயங்களிலும் முக்கியமான ஒரு நாடாகத் திகழ்வது போலவே, விண்வெளி பற்றிய அனைத்து ஆராய்ச்சிகளிலும் அதன் நிறுவனமான நாசாவின் பங்கும் மிக முக்கியமானதாகக்கக் கருதப்படுகின்றது. அவற்றுள் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியும் ஒன்று.
செவ்வாய் கிரகத்தில் ஆரய்ச்சி மேற்கொள்ளும் காரணத்திற்காக, நாசா இதுவரையிலும் 5 ரோவர்களை அனுப்பி வைத்துள்ளது. அவை முறையே சோஜர்னர் (Sojourner),ஆப்பர்ச்சுயுனிட்டி (Opportunity), ஸ்பிரிட் (Spirit), க்யூரியாசிட்டி (Curiosity) மற்றும் பெர்சவரென்ஸ் (Perseveraந்செ) ஆகும். இவற்றுள் முதல் மூன்று ரோவர்களான சோஜர்னர், ஆப்பர்ச்சுயுனிட்டி மற்றும் ஸ்பிரிட் ஆகியவை சில தொழில்நுட்பக் கோளாறுகளால் செயலிழந்து போய் விட்டன. அணமையில் அனுப்பி வைக்கப்பட்ட க்யூரியாசிட்டி மற்றும் பெர்சவரென்ஸ் ரோவர்களுள், பெர்சவரென்ஸ் கண்டறிந்து புவிக்கு அனுப்பியுள்ள தகவலகள்தான் இப்போது பிரபலமான பேசுபொருள் ஆகியுள்ளது.
பெர்செவரன்ஸ் ரோவரானது, கடந்த 2020 ஜூலை மாதத்தில் புளோரிடாவின் ‘கேப் கனாவரலில்’ இருந்து ஏவப்பட்டு, கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் பயணித்து, 2021 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கிரகத்தின் ‘ஜெசெரோ க்ரேட்டர்’ என்கிற இடத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. கடந்த 18 மாதங்களாக அது செவ்வாய் கிரகத்தில் இயங்கி, தனது பணிகளைச் செய்து வருகின்றது. செவ்வாய் கிரகத்தின், கடந்த கால வரலாற்று ஆதாரங்களைத் தேடுவதன் மூலம் அங்கு மனிதர்கள் வாழும் சாத்தியமுள்ளதா என ஆராய்வது அப்பணிகளின் ஒரு பகுதி. அப்படியாக, தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள மினி ஹெலிகாப்டரை பறக்கவிட்டு, அதன் சுற்றுப்புறங்களைப் பற்றிய பொதுவான தகவல்களைச் சேகரிப்பது முதலான பணிகளைச் செய்து வருகின்றது பெர்செவரன்ஸ். இதே போல, ரோவரில் உள்ள ரோபாட்டிக் துளையிடும் கருவி மூலம் செவ்வாய் கிரகத்தின் பள்ளங்களில் துளையிட்டு அதன் மூலம் கிடைக்கும் பாறைகளை வைத்தும், அதன் மாதிரிகளைச் சேகரித்தும் இந்த ஆய்வு நடந்து தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. பெர்செவரன்ஸ், தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் இடத்தை டெல்டா எனக் குறிப்பிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
பசடேனாவில் அமைந்துள்ள, கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பெர்செவரன்ஸ் திட்ட விஞ்ஞானியான கென் ஃபார்லி இப்பணிகள் பற்றி கூறுகையில், “டெல்டாவில் சேகரிக்கப்பட்ட பாறையின் மாதிரிப் பகுதிகளில் கரிமப் பொருட்களின் செறிவு எந்தளவிற்கு உள்ளது என நாங்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.” என்று கூறினார். பாறைகள் சேகரிக்கப்பட்ட பள்ளமானது, ஒருவேளை எரிமலையால் உருவானதாகவும், அது ஒரு ஏரியைப் போல அமைந்து இருக்கலாம் என்றும் கருதுகிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.
தற்போதைய நிலவரப்படி, மொத்தமாக 12 பாறை மாதிரிகளைச் சேகரித்துள்ளது பெர்செவரன்ஸ் ரோவர். அந்த மாதிரிகள் அனைத்தும், 2030’ம் ஆண்டு இறுதியில் பூமிக்குத் திரும்பும் வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் கிட்டத்தட்ட 550 நாட்களைக் கடந்துள்ள பெர்செவரன்ஸ் ரோவரின் பணி, விஞ்ஞானிகள் முன்பு நினைத்து வைத்திருந்ததை விடவும் இப்போது கடுமையான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தச் சவாலை அது எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதையும் உலகம் கவனமாக உற்று நோக்கிக் கொண்டுள்ளது. உலகத்தோடு சேர்ந்து நாமும் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.