fbpx
LOADING

Type to search

அறிவியல்

சிக்கல்களைத் தீர்ப்பதற்கான மூன்று விதிகள்

பல துறைகளில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான கருவிகள் இவை
இங்கே கூறப்பட்டுள்ள இந்த மூன்று விதிகளையும் பெரும்பாலும் “வடிவமைப்பு விதிகள்” என்று அழைக்கலாம். ஆனால் உண்மையில் இவை இயந்திரம் முதல் மனிதர் வரையிலான எதைப்பற்றிய எந்த வகையான சிக்கல்களையும் தீர்ப்பதற்கான கருவிகளாகும்.

சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்த மூன்று விதிகளை இங்கே நாம் பார்க்கப்போகிறோம். அவை ஒவ்வொன்றும் மேலோட்டமாக எளிமையானவை, சுருக்கமானவை. ஆனால் அவற்றைப் பின்பற்றுவது என்று வரும்போது, அவை பெரும்பாலும் உள்ளுணர்வுக்கு எதிர்மாறானவை என்பதையும் உங்கள் தரப்பில் தீவிர முயற்சி தேவை என்பதையும் நீங்கள் உணரலாம். ஆனால் என் அனுபவம் என்னவென்றால், அவற்றைப் பின்பற்றுவது எளிதில் கையாள முடியாத சிக்கல்களைத் தீர்ப்பதை சாத்தியமாக்குகின்றது.

முக்கியத்துவத்தின் இறங்குவரிசையில் மூன்று விதிகளும் இங்கே தரப்பட்டுள்ளன:
1. நீங்கள் எங்காவது செல்ல விரும்பினால், முதலில் நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறியவும்; பின்னர் அங்கு எப்படிச் செல்வது என்பதைக் கண்டறியவும்.
2. நீங்கள் தீர்க்கும் சிக்கல்களின் மீது பற்றுக்கொள்ளுங்கள்; நீங்கள் உருவாக்கிய குறிப்பிட்ட தீர்வுகள் மீதல்ல. முதலாவது நிலையானது; இரண்டாவது தற்காலிகமானது.
3. மந்திரத்திலிருந்து வேறுபடுத்தக்கூடிய எந்தவொரு தொழில்நுட்பமும் போதுமான அளவு மேம்படுத்தப்படவில்லை.

முதல் விதி

இந்த கட்டுரையிலிருந்து நீங்கள் நினைவில் வைத்திருக்கப்போவது ஒன்றே ஒன்று என்றால், அது இந்த முதல்விதியாக இருக்கட்டும். எந்தச் சிக்கலையும் தீர்ப்பதற்கு இது முற்றிலும் அவசியம் என்று நான் அனுபவத்தில் கண்டறிந்தேன். இந்த விதி எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் தெரிந்தாலும் இதைப் பின்பற்றுவது வியக்கத்தக்கவகையில் சவாலாக இருக்கும்.

நீங்கள் எங்காவது செல்ல விரும்பினால், முதலில் நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறியவும்; பின்னர் அங்கு எவ்வாறு செல்வது என்பதைக் கண்டறியவும்.

இதில் உள்ள முக்கிய வார்த்தை, வெளிப்படையானதல்ல. “பின்னர்” என்பதே அது. இந்தப் படிகளுக்கு ஒரு வரிசை உள்ளது. படிகளை ஒன்றிணைக்காமல் வரிசைப்படி செய்வது மிகவும் இன்றியமையாதது.

ஒரு சிக்கலைத் தீர்க்க முயற்சிக்கும்போது, இப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொள்வது எப்போதும் தூண்டுதலாக இருக்கிறது. நாம் செய்வதை மேலும் சிறப்பாக்க விஷயங்களை எப்படிச் சரிசெய்ய முடியும் என்று நாம் யோசிக்கிறோம். இது வெளிப்படையாக சரியான விஷயம் போல் தெரிகிறது. இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், நீங்கள் இந்த வழியில் திட்டமிட்டால், நீங்கள் இன்று இருக்கும் இடத்தில் உள்ள அனைத்து மோசமான விஷயங்களையும் மறைமுகமாகத் திட்டமிடுகிறீர்கள். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து சிறந்த சிறிய மாற்றங்களைப் பார்க்கிறீர்கள். இது உண்மையில் நீங்கள் இருக்க விரும்பும் இடத்திற்கு அருகில் கூட உங்களை அழைத்துச்செல்லாது.

பொறியியல் திட்டங்களில், நான் இதை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன்: அணிகள் தொடர்ச்சியான சிறிய மாற்றங்களைச் செய்கின்றன. அவர்கள் தாம் உருவாக்கிய அமைப்பு இனி தங்கள் வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாது என்பதை உணர்வதில்லை. மேலும், இருக்கும் வாடிக்கையாளர்கள் மாற்றத்தின் செலவைக் கண்டு அஞ்சுவதால் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் கடைசியாக அமைப்பை நிறுத்தவேண்டியதாகிறது. அப்போது வாடிக்கையாளர்கள் வெளியேறுகிறார்கள். அவர்களைத் திரும்பப் பெற உங்களுக்கு வழி இல்லை; ஏனென்றால் நீங்கள் உண்மையில் இருக்க வேண்டிய இடத்திற்குச் செல்வதற்காக எந்த முதலீடுகளையும் செய்யவில்லை.

நீங்கள் இதைத் தவிர்க்கும் வழி இரண்டு படிகளையும் தெளிவாக வேறுபடுத்துவதாகும். முதலில், நீங்கள் எங்கு இருக்க விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறியவும்: தீர்க்க வேண்டிய சிக்கல்கள் யாவை? நீங்கள் அவற்றை தீர்க்கவேண்டுமென யார் விரும்புகிறார்கள்? ஒரு தீர்விலிருந்து அவர்கள் உண்மையில் விரும்புவது என்ன? ஒரு நல்ல தீர்வு எப்படி இருக்கும்? உங்களிடம் இருப்பதை முற்றிலும் புறக்கணித்து, உங்களிடம் உள்ளதைக் குறிப்பிடாமல் உங்களால் செய்ய முடிந்ததை மட்டுமே கட்டுப்படுத்தி, ஒரு புத்தம்புதிய வடிவமைப்பைச் (clean-sheet design) செய்வது உள்ளுணர்வுக்கு எதிரானதாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் நீங்கள் எங்கு இருக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான தெளிவான படம். உங்கள் மனதில் அந்தப் படம் தெளிவாக இருந்தால் மட்டுமே நீங்கள் இங்கிருந்து அங்கு எவ்வாறு நகர வேண்டும் என்று கேட்பது மிகவும் உறுதியான கேள்வியாகிறது. உங்கள் தற்போதைய தீர்வை நீங்கள் மாற்றியமைத்திருந்தால் நீங்கள் எவ்வாறு நகர்ந்திருப்பீர்கள் என்பதில் இருந்து இது பெரிதும் வேறுபட்டது.
ஆக, முதல் கட்டம் புத்தம்புதிய வடிவமைப்பு. இந்த கட்டத்தில், நாம் கேட்க மூன்று முக்கியமான கேள்விகள் உள்ளன :

1. நாம் தீர்க்க முயற்சிக்கும் சிக்கல் என்ன?
2. நாம் அதை தீர்க்க வேண்டும் (அல்லது வேண்டாம்!), இது தீர்க்கப்படவேண்டும் என எண்ணும் நபர்கள் யார்? சிக்கலை நாம் வடிவமைப்பதில் அவர்கள் உடன்படுகிறார்களா?
3. ஒரு நல்ல (ஆனால் அடையக்கூடிய) தீர்வு எப்படி இருக்கும்? அது உண்மையில் சிக்கலுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்று இந்த நபர்கள் ஒப்புக்கொள்கிறார்களா? இத்தீர்வில் கவனிக்காமல் விட்டுவிடப்பட்ட விஷயங்கள் உள்ளனவா?

இந்த வரிசையில் நீங்கள் அவர்களிடம் கேட்கிறீர்கள். இந்த சரிபார்ப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். வாய்வழியாக மட்டுமல்லாமல், எழுத்தில் இந்த படிகளைச் செய்யுங்கள். என் அனுபவத்தில், இரண்டு பேர் தாங்கள் கற்பனை செய்வதைப் பற்றிப் பேசுவதும், உரையாடலில் மற்ற நபர் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றிய ஒருவரின் கற்பனையைத் திணிப்பதும் மிகவும் எளிதானது. விவாதிக்கப்படுவது குறித்து எந்தக் குழப்பமும் இல்லாதவண்ணம் தீர்வை ஒரு நிலையான வடிவத்தில் காண்பிப்பதற்கு ஈடான முறை வேறெதுவும் இல்லை.
இந்த மூன்று கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் கிடைத்தவுடன், நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தவுடன், நீங்கள் திட்டமிடல் கட்டத்திற்கு செல்கிறீர்கள். இந்தக் கட்டத்தின் முக்கியப் பணி இந்த வேலையை மைல்கற்களாகப் பிரிப்பதாகும். ஒரு நல்ல மைல்கல்லின் வரையறுக்கும் அம்சம் உள்ளுணர்வால் (intuition) அறியப்படுவதல்ல. “ஒரு பொருளை வெளியிடுவது (launching a product)” என்பது ஒரு நல்ல மைல்கல் அல்ல. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மைல்கல்லும் தனித்த ஒரு மதிப்பைப் பெற்றிருக்கவேண்டும் (capture the value) என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

ஏன்? ஏனென்றால், நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட மைல்கல்லையாவது அடைவதற்குள், நிலைமை மாறலாம்; முன்னுரிமைகள் (priorities) மாறலாம். முழு சிக்கலிலேயுமே இனி நீங்கள் கவனம் செலுத்த விரும்பாமல் போகலாம். திட்டத்தைக் கைவிடுவதே புத்திசாலித்தனமாக இருக்க நிறைய நல்ல காரணங்கள் இருக்கலாம். ஆயினும் ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு தனித்த மதிப்பைப் பெற்றிருந்தால், இம்முயற்சி வீண் அல்ல.

இரண்டாவது விதி
திட்டத்தையே கைவிடுவதற்கான இந்த சாத்தியம் நம்மை வடிவமைப்பின் இரண்டாவது விதிக்கு அழைத்து வருகிறது, இதுவும் எளிமையானதாகத் தெரிந்தாலும் உண்மையில் சில ஆழமான உள்ளுணர்வுகளுக்கு எதிராகச் செல்கிறது.
நீங்கள் உருவாக்கும் அமைப்புகள் இலக்குகளை நோக்கிய வழிமுறைகள்; அவை ஒவ்வொன்றும் தற்காலிகமானவை. ஒரு நாள் நீங்கள் எதிர்த்துப் போராடும் குப்பைத் தடையாக அவை மாறும். உங்கள் அமைப்புகளின் மீது பற்றுக்கொள்ள வேண்டாம்; நீங்கள் தீர்க்கும் சிக்கல்களின் மீது பற்றுக்கொள்ளுங்கள்.

நாம் பல ஆண்டுகள் முயற்சி செய்துக் கட்டியெழுப்பிய அமைப்புகள் மீது பற்றுக்கொள்வதும், அவை மாற்றப்பட வேண்டும் என்ற எந்தவொரு பரிந்துரையையும் எதிர்ப்பதும் இயற்கையே. அவை உலகத்தை மேம்படுத்தியது உண்மைதான். அவை மாற்றப்படும் கட்டத்தை அடைந்திருந்தால், அவை தோல்வியுற்றன என்று அர்த்தமல்ல – அவை வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அவை பயனளித்த நேரம் முடிந்துவிட்டது. இது அவை கெளரவமான ஓய்வு பெற வேண்டிய நேரம். அவற்றுக்குப் பதிலாகத் தோன்றும் புதியவை, பழையவற்றை உருவாக்குவதிலிருந்தும் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும் நாம் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களிலிருந்தும் உருவாக்கப்பட்டவை. நம் குழந்தைகள் என்றாவது ஒரு நாள் நம்மை மிஞ்ச வேண்டும் என்று நாம் விரும்புவதைப் போலவே, நாம் உருவாக்கியவற்றுக்குப் பின்வருவன அவற்றை விடச் சிறந்தவையாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
நினைத்துப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் இதுவரை எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று, நான் உருவாக்கிய ஒரு அமைப்பு – ஒரு பத்தாண்டுக்கும் மேலாக கூகுள் தேடலில் காட்டப்பட்ட 20 ஆவணங்களில் 19-ஐ வழங்கிய ஒரு அமைப்பு – திரும்பப்பெறப்பட்ட நாள். அந்த அமைப்பு ஒரு அற்புதமான வேலையைச் செய்தது. அது கட்டமைக்கவும் பராமரிக்கவும் நம்பமுடியாத அளவிற்கு நுட்பமானது; தேடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த எங்கள் புரிதலில் மாற்றங்களை உருவாக்கியது; மென்பொருள் மற்றும் வன்பொருள் கட்டமைப்பு இரண்டிலும் அனைத்து வகையான மாற்றங்களையும் ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பத்தாண்டுகளில் அந்த அமைப்பிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் நாங்கள் கற்றுக்கொண்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டு அந்தப் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு புதிய தலைமுறைச் சிக்கல்களை இன்னும் சிறந்த முறையில் தீர்த்தது. அந்த புதிய அமைப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அது உருவாக்கப்பட்ட காரணத்திற்காகவே இன்று அந்த அமைப்பிற்குப் பதிலாக வேறொன்று உருவாக்கப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த நாள் அவ்வமைப்பின் இறுதிச்சடங்கு தினமல்ல; இந்த சாதனைகளை எண்ணிப்பார்ப்பதற்கும் எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்குமான பட்டமளிப்பு தினம்.

ஏனெனில் அது அதன் இலக்கை அடைந்துவிட்டது: சிறந்த தேடுபொறிகள் (search engines) கையாளக்கூடியதை விட நூறு மடங்கு பெரிய ஒரு இணையத்தை நாங்கள் எதைக்கொண்டு தேடுவோம்? அது அன்றைய அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்துவிட்டது; புதிய அமைப்பு அடுத்த தலைமுறைச் சிக்கல்களை தீர்க்கும். வாழ்க்கையில் தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் பெரும்பாலும் முடிவற்றவை. அவை நம் வாழ்நாளில் அல்லது நம் பிள்ளைகளின் வாழ்நாளில் தீர்க்கப்படமாட்டா. இதன் பொருள் என்னவென்றால், அவற்றின் தீர்வை நோக்கிய படிகளை நாம் உருவாக்க வேண்டும். நம் காலத்தில் வெளிப்படும் அவற்றின் சிக்கல்களின் அம்சங்களைத் தீர்க்க வேண்டும். நம் சந்ததியினர், அடையக்கூடிய இறுதி இலக்கை நோக்கித் தொடர வேண்டும்.

மூன்றாவது விதி
ஆர்தர் சி. கிளார்க்கின் “போதுமான அளவு மேம்பட்ட எந்த தொழில்நுட்பமும் மந்திரத்திலிருந்து பிரித்தறிய முடியாதது” என்ற கூற்று பிரபலமானது. அதை நாம் இப்படியும் சொல்லலாம்:
மந்திரத்திலிருந்து பிரித்தறிய முடியும் எந்தவொரு தொழில்நுட்பமும் போதுமான அளவு முன்னேறவில்லை.
சில நேரங்களில் பென்ஃபோர்டின் விதி என்று குறிப்பிடப்படும் இந்த வாசகம், “சிறப்பாகச் செய்யுங்கள்!” என்று சொல்லும் புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டைத் தவிர வேறொன்றும் இல்லை என்று தோன்றுகிறது! ஆனால் இது ஒரு உண்மையான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த வாசகத்தில் ‘மந்திரம்’ என்ற வார்த்தைக்கு உண்மையில் என்ன அர்த்தம், அதிலிருந்து பிரித்தறிவது என்றால் என்ன என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளும்போது இது தெளிவாகிறது.

பிரபலமான மந்திர வார்த்தையான “அப்ரகடாப்ராவில்” (abracadabra) உட்பொதிக்கப்பட்ட கருத்தினைப் பார்ப்போம். இது (பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக) அர்த்தமற்ற வார்த்தையல்ல; இது அரமேயிக் மொழி. இதன் பொருள் “நான் பேசியபடி அது நடக்கட்டும்” என்பது. இந்தக் கண்ணோட்டத்தில் மந்திரத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், அது உலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒருவரின் உள் பார்வையை (inner vision) நேரடியாக பௌதிக உண்மையாக மொழிபெயர்க்க முடியும் என்பது.
ஒரு தொழில்நுட்பம் உண்மையிலேயே ‘மந்திரமாக’ விளங்க, அது சில விஷயங்களைச் செய்ய வேண்டும்:
1. நீங்கள் கற்பனை செய்வதை நீங்கள் கற்பனை செய்யும் அதே மொழியில் விவரிக்க அது உங்களை அனுமதிக்க வேண்டும்;
2. உலகின் தற்போதைய நிலையை, அதன் விரும்பிய நிலையை விவரிக்க நீங்கள் பயன்படுத்தும் அதே மொழியில் பார்க்க இது உங்களை அனுமதிக்க வேண்டும்;
3. “இதை இப்படிச் செய்” என்று கூறி, அதே மொழியில் உலகின் நிலையைக் கையாள இது உங்களை அனுமதிக்க வேண்டும்.
எனது மூன்று வடிவமைப்பு விதிகளில் இது ஒரு இடத்தைப் பெறுவதற்கான காரணம், இது நாம் தீர்க்கும் சிக்கல்களைப் பற்றி நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதைப் பேசுகிறது. முதல் விதியைக் கவனித்தால், அதன் மூன்றாவது படியை நாம் செயல்படுத்தும்போது – நல்ல தீர்வை விவரிக்கும்போது – இந்த மூன்றாம் விதி ‘நல்லது’ என்பதை வரையறுக்க முக்கியமாகிறது. இன்னும் முக்கியமாக, இது உண்மையில் பங்குதாரர்களின் சிக்கலைத் தீர்க்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அவர்களுடன் உரையாடலை மேற்கொள்வதை சாத்தியமாக்குகிறது. ஏனென்றால் பயன்படுத்த அதிக சிந்தனை தேவைப்படும் ஒரு அமைப்பு நீங்கள் கற்பனை செய்யும் விஷயத்தைச் சரியாகச் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம்.
ஒரு மந்திர வடிவமைப்பின் (magical design) மூன்று பண்புகளைப் பிரிப்பதும் உள்நோக்கம் கொண்டது. விவரிப்பது, பார்ப்பது, கையாளுவது ஆகியவை ஒரு மொழியைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய மூன்று தனித்துவமான செயல்கள். மைல்கற்களை வரையறுப்பதன் அடிப்படையில், ஒரு சிக்கலுக்கு இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வதற்கான திறன் இருந்தாலே ஒரு பெரிய முன்னேற்றமாகும்.

முடிவுரை:
இந்த மூன்று விதிகளும் தனித்தனியாக எளிமையானவை; ஆனால் உண்மையில் அவற்றைக் கவனமாகச் செயல்படுத்துவது மிகவும் கடினம். நான் முன்வைத்த மூன்று விதிகளின் மேலே உள்ள வரையறைகள் நான் அவற்றை முதலில் புரிந்துகொண்ட விதத்திலிருந்து வெகு தூரம். அவை, அவற்றின் அர்த்தம், அவற்றின் பயன்பாடு ஆகியவை குறித்த எனது புரிதலை மெருகேற்றவும் மேம்படுத்தவும் பல ஆண்டுகள் செலவிட்டதன் பயன் இது. இந்த வடிவமைப்புகள் காலப்போக்கில் தொடர்ந்து பரிணமித்து மேம்படும் என்று நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன், (இரண்டாவது விதிக்கு முழுமையாக இணங்க) காலப்போக்கில் அவை அவற்றைவிடச் சிறந்தவைகளால் மாற்றக்கூடப்படலாம். அந்த முன்னேற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். அதற்கிடையில், இந்த விதிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

யோனாதன் ஸுங்கர்
யோனாதன் ஸுங்கர் ட்விட்டரில் மதிப்புவாய்ந்த பொறியாளர். அவர் ஹூமு, கூகுள் ஆகிய நிறுவனங்களிலும் இதேபோன்ற பொறுப்புக்களை வகித்துள்ளார். அங்கு அவர் உயர்திறன் தேடல், கிரக அளவிலான சேமிப்பகம், சமூக வலைப்பின்னல் ஆகிய துறைகளை இயக்கியுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள் :

பசிபிக் பெருங்கடலில் ஆழ்கடல் சுரங்கம் தோண்டும் இடத்தில் 5,000க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டு...
திகட்ட திகட்ட பாலியல் இன்பம் பெற உதவும் ஹிப்னாசிஸ்
மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள உதவும் பில் ட்ராக்கர்: இந்திய வம்சாவளி மாணவி சாதனை
அமில ரிப்ளக்ஸ் மருந்துகளைப் பயன்படுத்தினால் டிமென்ஷியா அதிகரிக்கலாம்! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள...
 மெதுவாக இயங்கும் பிரபஞ்சம் : முற்காலத்தை விட ஐந்து மடங்கு மெதுவாக இயங்குவதாக ஆய்வு முடிவு!
சிறுநீர்பாதைத் தொற்று பற்றி நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள்! தெரிவோம்… தெளிவோம்!!
வழுக்கை விழுந்த ஆண்கள் ஆண்மை மிக்கவர்களா? - அமெரிக்க மருத்துவர் முடி உதிர்தலுக்கும் செக்ஸ் ஆசைக்கும்...
செவ்வாய் கிரகத்தில் இருந்துநேரடி ஒளிபரப்பு!
உங்கள் துணை மீது அதிக அக்கறை செலுத்துங்கள் - அப்புறம் பாருங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கை எப்படி மாறுகி...
Depression Meaning in Tamil 
Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *