கருப்பைக் கட்டி அறிகுறிகள்

பெண்களின் கருப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளானவை, அவர்களின் இனப்பெருக்க அமைப்புகளில் தோன்றும் சாதாரண பருக்கள் போன்றவைதான். இந்த நீர்க்கட்டிகள், பெரும்பாலான பெண்களின் மாதவிடாய் காலச் சுழற்சியோடு அடிக்கடி வருவதும், போவதும் உண்டு. அப்பருக்களில், நீர் போன்ற திரவம் நிறைந்திருப்பதால்தான் அடிப்படையில் அவை நீர்க்கட்டிகள் என்றே அழைக்கப்படுகின்றன. நீர் போலத் தோன்றும், திசு நிரப்பப்பட்ட அந்தப் பருக்கள் பொதுவாக பலருக்கும் இயல்பாகத் தோன்றுவதுதான். ஆனால், சிலரது உடல்நிலை செயல்பாடுகளைப் ப்ருத்த மட்டில், அவற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பொதுவாக தானாகத் தோன்றி, தானாக மறைந்தும் போகும் இவ்வகை கட்டிகள், 20% பெண்களுக்கு அப்படி தானாக மறைவதில்லை. அவற்றைப் போக்க, அறுவை சிகிச்சை தேவைப்படும்., சில நேரங்களில், புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுவதற்கும் வாய்ப்புண்டு. இந்தக் கட்டிகளால், மாதவிடாய் வருவதற்கு முன்பு அதீத வயிறு மந்தம் மற்றும் கடுமையான இடுப்பு வலி போன்றவை ஏற்படலாம்.
இந்தக் கட்டிகள் பொதுவாக, எந்தவித அறிகுறிகளையும் காட்டதவை. வேறு ஏதாவது ஒரு பிரச்னைக்காக நாம் பரிசோதனை செய்யும் போதுதான் இவை நம் கருப்பையில் இருப்பதையே அறிய முடியும். அதே போல, நாம் ஒரு முறை அறுவைசிகிச்சை செய்து இக்கட்டிகளை நீக்கிவிட்டால், கருப்பையின் அதே இடத்தில் மீண்டும் அவை உருவாக வாய்ப்பில்லை. ஆனால், வேறு ஏதேனும் ஓர் இடத்தில் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான், ஒரு முறை ல்கருப்பை தசைக்கட்டிகள் வந்துவிட்டால், ஆண்டுக்கு ஒருமுறையேனும் பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், இக்கட்டிகள் நம்முடைய ஹார்மோன் சுரத்தலில் எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்துவது கிடையாது. அதனால், அதுகுறித்து பயம் கொள்தல் தேவையற்றது.
இந்தக் கட்டிகளுக்கு என்று குறிப்பான அறிகுறிகள் இல்லை என்றாலும் கூட, சிலவற்றை மேற்கோள் காட்டத்தான் செய்கிறது மருத்துவ உலகம். மாதவிடாய் நேரத்தில் மிக அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, தாங்க முடியாத அளவிற்கு அதிகமான வலி ஏற்பட்டாலோ அது கருப்பை கட்டிகளுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். சில நேரங்களில், இரு மாதவிடாய்களுக்கு இடையே குறைவான அளவில் ரத்தப்போக்கு நிற்காமல் வந்து கொண்டே இருக்கலாம். அதாவது, ஒரு மாதவிடாய் வந்து முடிந்த பிறகு, அடுத்த மாதவிடாய் வருகிற வரை குறிபிடும் படியான அளவு இல்லாமல் தொடர்ச்சியாக இரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும்.
இந்தத் தசைக்கட்டிகள் நாளடைவில் பெரியதாக உருமாற்றம் கொண்டு, சிறுநீர்ப் பையை அழுதும் பட்சத்தில், நமக்கு அடிக்கடி சிறுநீர் வந்து கொண்டே இருக்கலாம். அதே போல, மலக்குடல் மீது அழுத்தினால், மலச்சிக்கல் ஏற்படும். கட்டியின் அளவு இன்னும் அதிகமாக மாறினால், இடுப்பின் கீழ் பகுதியில் வலி தோன்ற ஆரம்பிக்கும். சிறுநீர்ப்பை, மலக்குடல் தவிர, கிட்னியிலிருந்து வருகிற இரண்டு குழாய்களையும் கூட இக்கட்டியின் கனம் அழுத்தலாம். அதனால், கிட்னியில் வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்போது பாதிக்கப்பட்டோரின் வயிறானது 4 மாத கர்ப்பிணி போலத் தோன்றும். சில பெண்களுக்கு 8 மாத கர்ப்ப அளவில் எல்லாம் கூட கட்டிகள் ஏற்படலாம்.
நம்முடைய உடலில் ஏற்படும் எந்தக் கட்டிகளும் தொடர்ச்சியாக வளரும் பட்சத்தில், அவை புற்று நோய்க் கட்டிகளாக மாற அதிக அளவில் வாய்ப்புகள் உண்டு. ஆகவே, கருப்பை கட்டிகளையும் அவ்வாறு கருதி, மேற்கண்ட அறிகுறிகள் தென்படும் நேரத்தில் அதற்குரிய மருத்துவர்களை அணுகி, ஆலோசனைகளையும் தேவையான சிகிச்சைகளையும் பெறுதல் வேண்டும்.