ஓவியம் வரைவது எப்படி..?

எந்த ஒரு ஓவியம் வரைவதற்கும் அடிப்படையான சில கூறுகள் உள்ளன. காரணம், ஓவியம் என்பது மிகப் பாரமரியமிக்க ஒரு தகவல் தொடர்பு சாதனம். ஆதி மனிதன் பேசத் தொடங்குவதற்கு முன், சுவர் ஓவியங்கள் மூலம்தான் செய்திகளைப் பரிமாறிக் கொண்டான் என்பது வரலாற்று உண்மை. ஆகவே, ஓவியம் வரையத் தொடங்குவதற்கு முன், அதைப் பற்றிய அடிப்படைக் கூறுகளை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அவற்றைப் பின்பற்றுவதன் மூலம், ஒரு சிறப்பான ஓவியத்தை நம்மால் மிக எளிமையாக வரைந்து விட முடியும்.
ஓவியம் வரைவதற்கான முதல் அடிப்படை, திட்டம் (Plan). அதாவது, நாம் வரையப் போகின்ற ஓவியமானது எதில் அமையப் போகிறது, அதை வரைவதற்கான கருவிகளாக நாம் எதைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்வது திட்டத்தில் அடங்கும்! எடுத்துக்காட்டாக, ஒரு ஓவியத்தை தாள், சுவர், துணி உள்ளிட்ட எந்தப் பொருளிலும் வரையலாம். தாள் என்றால், பென்சில், ஸ்கெட்ச் போன்றவை கொண்டோ, சுவர் என்றால் பெயிண்ட், துணி என்றால் வாட்டர் கலர் உள்ளிட்ட கருவிகளை வைத்து வரையலாம். ஆகவே, முதலில் நம்முடைய ஓவியம் எதில் அமையப் போகிறது என்பதை நாம் தீர்மானித்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, ஓவியத்தில் பயன்படுத்தப் போகும் வடிவங்களை தீர்மானிக்க வேண்டும். ஒரு ஓவியத்தில், வட்டம், நீள்வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், ஐங்கோணம் முதலான எந்த வடிவங்களும் இடம் பெறலாம். அந்த வடிவங்களின் பயன்பாடுகளையும் நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டும். அடுத்தது, வடிவமைப்பு. வடிவங்களானவே ஓவியத்தில் எந்த இடத்தில் எவ்வாறு அமையப் போகின்றன என்கிற Composing’தான் வடிவமைப்பு. அவற்றை நாம் முன்கூட்டியே நம்முடைய மனக்கண்ணில் ஒரு முறை நிறுத்திப் பார்த்து அமைத்து வைத்து விட்டால், ஓவியத்தில் தத்ரூபமாகக்கொண்டு வர அந்த Composing பெரும் உதவி செய்யும். ஒரு ஓவியத்தின் பின்புலம், காட்சிகள் முதலானவை வடிவமைப்பில் அடங்கும். நிலக்காட்சிகளை (Landscape) நாம் வரையப் போகிறோமா அல்லது உருவப்படங்களை (Portrait) வரையப் போகிறோமா என்கிற தெளிவு வடிவமைப்பைத் தீர்மானிக்கும் போதுதான் நமக்குத் தெளிவாகக் கிடைக்கும்.
ஓவியத்தின் வடிவமைப்பிற்குப் பிறகு, நாம் தீர்மானிக்க வேண்டியது. ஓவியத்தின் கோணம்! நாம் வரையப் போகும் ஓவியம் எந்தக் கோணத்தில் அமையப் போகிறது என நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். அது நேருக்கு நேர் பார்க்கும் காட்சியா அலல்து கீழ் அலல்து மேல் நோக்கிய கோணத்தில் பார்ப்பதாக அமையப் போகின்ற ஓவியமா என்பதைத் தீர்மானித்தல் அவசியம், காரணம், ஒவ்வொரு பொருளின் தோற்றமும் நாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தே அமையப் பெறும். யானையின் துதிக்கையை நாம் தனியாகப் பார்த்தால் அது பாம்பு போலத் தோன்றுவதை இவ்விடத்தில் ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். அடுத்தது, நம்முடைய ஓவியம் தட்டையான இரண்டு அளவீடுகளைக் கொண்ட (2D) தோற்றம் கொண்டதா அல்லது முப்பரிமாண (3D) வடிவம் கொண்டதா என்பதையும் முன்னமே முடிவு செய்து கொள்ளல் நல்லது. அதற்கேற்றாற் போல, நம்முடைய ஓவிய முன்னேற்பாடுகளை எளிதாகச் செய்து கொள்ளலாம்.
இறுதியாக, ஒரு ஓவியத்தின் அடிப்படைக் கூறுகளாக அமையப் பெறுவன தெளிவும் தீர்வும். உள்ளபடியே, எந்த ஒரு ஓவியமும் தெளிவாக அமைதல் அவசியம். நாம் எடுத்துக் கொண்ட பின்புலத்தை சிதைக்காத, எந்த வகையிலும் உறுத்தாத வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது முதல் கோடுகளின் வளைவு சுளிவு வரை தெளிவாக இருப்பதுதான் ஒரு ஓவியத்தின் அழகு. தெளிவில்லாத சின்ன ஒரு விஷயமும் கூட ஒரு ஓவியத்தை முழுமை பெற விடாது. அடுத்த அடிப்படையான தீர்வு என்பது, தெளிவான ஒவ்வொரு ஓவியத்தின் முக்கியமான அம்சமாகும்! நம்முடைய ஓவியம், அதை இரசிப்பவருக்கு ஒரு முடிவைத் தர வேண்டும். ஓவியத்தில் இருப்பது இன்னதுதான் எனும் தீர்க்கத்தைத் தர வேண்டும். எடுத்துக் காட்டாக, ஒரு தேநீர்க் குவளையை வரையும் போது அதன் மேல் ஆவி பறப்பதாக வரைந்தால், அதில் உள்ள தேநீரானது சூடாக உள்ளது என பார்ப்பவர் புரிந்து கொள்வார். அதே போல, பேராசை கொண்ட ஒரு மனிதனை வரைகையில் அவன் கண்களில் ஒரு ஆசை ஒளியைக் கூட்டி வரைதல், வஞ்சகம் கொண்ட ஒரு மிருகத்தை வரைகையில் அதன் நாவில் எச்சில் ஒழுகல் போன்றவற்றையும் தீர்க்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.