
இயற்கை ஏன் போற்றத்தக்கது என்றால், இந்த உலகில் இயற்கை இல்லாமல் எதுவுமே இல்லை. இயற்கையைப் பழித்துக் கொண்டு எதுவும் நிலை பெற முடியாத அளவிற்கு, மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் அதனோடுதான் இயைந்து இருக்கின்றது. அதனால்தான் நம்முடைய சங்க காலம் தொட்டு இப்போது வரை நாம் இயற்கையை பல்வேறு வழிகளில் போற்றி வருகின்றோம்.
மனித இனம் இல்லாவிட்டாலும் கூட, மரம் செடி கொடி உள்ளிட்ட இயற்கை உயிரினங்கள் அனைத்தாலும் மிக நல்லபடியாகவே உயிர் வாழ இயலும்! ஆனால், அவை இல்லாமல் மனிதனால் உயிர் வாழவே முடியாது என்பதுதான் இயற்கையின் சிறப்பம்சம். அப்படிப்பட்ட இயற்கையைப் போற்றிப் பாதுகாப்பது நம் கடமை.
மரம், செடி முதலான இயற்கைத் தாவரங்கள் இல்லாவிட்டால், அவை தரும் ஆக்சிஜன் இல்லாவிட்டால், மனிதனுக்கு பிராண வாயு கிடைப்பதே அரிதுதான். மரம் செடி கொடியினங்களுக்கு முன்னதாக, பறவைகளும் விலங்குகளுமே இயற்கையின் கூறுகள்தான். உலகின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு பறவையானது, மறு மூலைக்கு வலசை வருவதும, அப்படி வரும் வழியில் அதன் எச்சம் மூலம் நூற்றுக்கணக்கான விதைகளை மண்ணில் விட்டுச் செல்வதும் இயற்கையால் அமைந்ததுதான். விலங்குகளும் அப்படித்தான், காடுகளில் அவை நடந்து செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு மரம் நடப்படுகின்றது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அவை உண்டு செரிக்காத விதைகள்தான் மரமாகி, காடுகளாக உருப்பெறுகின்றன. அந்தக் காடுகளில் இருந்து அவற்றுக்கு மீண்டும் உணவு கிடைக்கின்றது. அந்தத் தாவரத்தை உண்ணும் விலங்குகளை, ஊன் உண்ணும் விலங்குகள் வேட்டையாடி உண்கின்றன. ஊன் உண்ணிகள் இறந்தது அவற்றின் உடல்கள் மண்ணில் கிடந்து மட்கி, புழுக்களுக்கு உணவாகின்றன. புழுக்கள், மண்ணின் வளத்தைக் காக்கின்றன. அந்த வளத்தால், பறவை, விலங்குகளின் எச்சத்தால் இடப்படும் விதைகள் மரமாக வளர்கின்றன. இது இயற்கையின் ஒப்பற்ற ஒரு சுழற்சி. இப்படி எந்த விதமான மனித உதவியும் இல்லாமல், தானே தகவமைந்து கொண்ட இந்த இயற்கையை நாம் போற்ற வேண்டாமா..?
மேற்சொன்னது போல உருவான அடர் வனங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு மட்டுமலலது மனித வாழ்வுக்கும் எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன. பூமியில் காடுகள் இல்லையென்றால் மண்ணில் மழை பெய்ய வாய்ப்பே இல்லை. மழை இல்லாவிட்டால், ஆறுகள் இல்லை. ஆறுகள் இல்லாவிட்டால், மனித வாழ்விற்கு இன்றியமையாத பொருளான நீருக்கே வழியில்லை. இதை உணர்ந்துதான், ‘நீரின்றி அமையாது உலகு’ என்றெழுதினார் திருவள்ளுவர்.
வள்ளுவர் மட்டுமல்லாது, சிலப்பதிகாரம், புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் உள்ளிட்ட எல்லா சங்க இலக்கியங்களிலும் இயற்கையைப் போற்றும் பாடல்கள் உள்ளன. ஞாயிறு போற்றுதும், திங்கள் போற்றுதும், மாமழை போற்றுதும் என சூரியன், சந்திரன், மழை என இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாகப் போற்றும்படியான செய்யுள்களும், பாடல்களும் இயற்றப் பெற்றிருக்கின்றன. இவை தவிரவும், நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு எனும் ஐம்பெரும்பூதங்களுமே இயற்கையின் பாற்பட்டவைதான். நாம் மட்டுமல்லாது, உலகின் எல்லா இன மக்களுக்குமே, இயற்கையானது தெய்வமாகவும், இறைவனாகவும்தான் இருந்து வருகின்றது. அந்தளவிற்கு, இயற்கையைப் போற்றுவது என்பது உலகம் முழுவதிலுமே ஒரு தொன்மையான மரபு.
இயற்கையில் எதுவுமே தனித்து அமையவில்லை. இந்த இயற்கைப் படிநிலையின் ஒரு பகுதியில் உண்டாகும் பாதிப்பு, எல்லாப் பகுதிகளிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும். பூக்களில் இருந்து மகரந்தத்தை எடுத்துச் சேர்க்கும் தேனீ முதலான சிறு உயிர் முதல், தன் வாழ் நாளில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நடக்கும் யானை வரை பெரிய உயிர் வரை பின்னிப் பிணைந்துள்ள இயற்கையின் கண்ணியில் நாம் எதில் கை வைத்து அழித்தாலும் அது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீங்குதான்.