இந்துத்வாவுக்கும் இந்து மதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?

இப்போதெல்லாம் எந்தச் செய்தித்தாளைத் திறந்தாலும் அதில் இந்துத்வா என்ற சொல் தென்படுகிறது. இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் தலைவர்களும் அந்தக் கட்சியின் பின்னணியில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பினரும் இந்துத்வா கொள்கைகளை முன்வைத்துப் பேசுகிறார்கள் என்பதால், இந்துக்கள் அனைவரும் இந்துத்வாவை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்கிற ஒரு சிந்தனை உருவாகிவிட்டது. குறிப்பாக, பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருக்கும் இந்தியாவில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருப்பதால் பெரும்பான்மை இந்துக்கள் இந்துத்வா கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்று பலரும் நினைக்கிறார்கள்.
உண்மையில், இந்துத்வா, இந்து மதம் இரண்டுக்கும் சில பொருந்தும் புள்ளிகள் இருந்தாலும், இவை இரண்டும் ஒன்றில்லை. அது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இந்துமதம்
உலகின் பழைமையான மதங்களில் ஒன்றாகிய இந்து மதத்தில் சைவர்கள், வைணவர்கள் என்று பல பிரிவினர் காணப்படுகிறார்கள். இவர்கள் இராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை, வேதங்கள் போன்றவற்றைப் புனித நூல்களாகக் கருதுகிறார்கள். இவற்றுடன் தமிழில் திருமுறைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தம் உள்ளிட்ட பல புனித நூல்களும் உள்ளன. இதுபோல் ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு நூல்களைக் காணலாம்.
இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடுகிறார்கள். இவர்களுக்குத் தீபாவளி, ராமநவமி, கோகுலாஷ்டமி, பிள்ளையார் சதுர்த்தி உள்ளிட்ட பல பண்டிகைகள் உள்ளன. வீட்டில் பூஜை அறை வைத்து அதில் கடவுள் திருவுருவங்களை வைத்து இந்துக்கள் வழிபடுகிறார்கள், கடவுள் நம் அனைவருக்கும் மேலானவர், நம்மைக் காத்து நல்லவற்றை வழங்குவார் என்று நம்புகிறார்கள்.
இந்துத்வா
இந்துவாக இருப்பதுதான் இந்துத்வா என்று ஒரு பழைய நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்று அந்த வரையறை மாறிவிட்டது, இந்துத்வா என்பது இந்துக்களுக்கான ஒரு நாட்டை அமைப்பது என்று நம்பப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி வாழ்வதற்கான உரிமையை நம் அரசியல் சட்டம் அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
ஆனால், இந்துத்வா கொள்கையைப் பின்பற்றுகிறவர்கள் இந்தியா ஓர் இந்து நாடாக மாறவேண்டும் என்று விரும்புகிறார்கள். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வாழ்ந்தாலும் அவர்கள் இரண்டாம் நிலைக் குடிமக்களாகதான் மதிக்கப்படவேண்டும், இந்துக்களுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டுதான் அவர்கள் இங்கு வாழவேண்டும் என்பது இவர்களுடைய எண்ணம்.
மதநல்லிணக்கம்
பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை அன்போடு அரவணைக்கவேண்டும், அவர்கள் இங்கு மகிழ்ந்து வாழ்கிற சூழலை உருவாக்கவேண்டும் என்பதுதான் மனிதப்பண்பு. நம்முடைய தேசத் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி நமக்குக் கற்றுத்தந்த பாடமும் அதுதான். மற்ற தலைவர்கள் பலரும் மத நல்லிணக்கக் கொள்கையைத்தான் முதன்மையாக வைத்து நம் நாட்டை வழிநடத்தினார்கள், இந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் பாதுகாப்பற்று உணராதபடி பார்த்துக்கொண்டார்கள்.
ஆனால் இப்போது, இந்து மதத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது, அதிலிருந்து இந்து மதம் பிழைக்கவேண்டுமென்றால் இந்துக்கள் இன்னும் வலிமையாகவேண்டும், அதற்கு இந்து நாடு அமையவேண்டும் என்கிற ஒரு பரப்புரை வலுவாகிவருகிறது. அதன் அடிப்படையில் இந்து அல்லாதவர்கள்மீது வெறுப்புரை பரப்பப்படுகிறது.
உண்மையில் அன்புதான் எல்லா மதங்களுக்கும் அடிப்படை. இந்து மதமும் அன்பை அடிப்படையாகக் கொண்டதுதான். அந்த உண்மையைப் புரிந்துகொண்டவர்கள் பிறர்மீது வெறுப்பைப் பொழியமாட்டார்கள், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும், ஆனால், மதம், சாதி போன்ற அடிப்படையில் ஒருவரை இழிவாக நினைப்பதும் ஒட்டுமொத்தச் சமூகத்தின்மீதும் முத்திரை குத்தி ஒதுக்கிவைப்பதும் தவறு என்றுதான் சொல்வார்கள்.