இந்துத்துவா என்றால் என்ன?

Hinduism அல்லது இந்து சமயம் சுமார் 4,௦௦௦ ஆண்டுகளுக்கு முன் தோன்றி தழைத்த சமயம் ஆகும். ஆனால் பின் வந்த காலங்களில், இந்திய மண்ணில் நடந்த வெளிநாட்டு படையெடுப்புகள் (foreign invasions) மற்றும் மத மாற்றங்களின் (religious conversions) காரணமாக, இந்து தர்மம் (Hinduism) வலுவிழக்கத் தொடங்கியது. ஆகையால், ஒரு புத்துணர்ச்சி தேவை பட்டது. இந்துத்துவம் அல்லது இந்துத்துவா (Hindutva) என்ற இயக்கம், உலகின் மிக பழமையான இந்து மதத்தை பலப்படுத்தத் தோன்றியது.
முதன்முதலில் சந்திரநாத் பாசு என்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த இலக்கியவாதியால் உருவாக்கப்பட்ட இந்துத்துவா என்ற சொல், பின்னர் 1923-இல் பிரபல சுதந்திரப் போராட்ட வீரரான விநாயக் தாமோதர் சாவர்க்கரால் விருத்தியாக்கப் பட்டது.
இன்று ‘இந்து’ என்பதை ஒரு மதமாக குறிப்பிட்டாலும், ஆரம்ப நாட்களில் இது ஒரு மதமாகவோ, சமயமாகவோ கருதப்படவில்லை. மாறாக, ஒரு தர்மமாகவும், வாழ்க்கை நெறியாகவும், உண்மையுடனும், ஒழுக்கத்துடனும் மனிதர்கள் வாழ வழிகாட்டியாகவும்தான் இருந்தது. இதில் கூறப்பட்ட அறிவுரைகளும் கொள்கைகளும் வேதங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.
மிக உயர்ந்த இந்து துறவியும், தத்துவவாதியுமான சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) கூறியதாவது: வேதக் கொள்கைகளை ஒரு நபர் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தினால், அன்றாட வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த கூற்று வேதங்கள் எவ்வாறு மனிதர்களை நெறி படுத்த உதவுகின்றன என்பதன் எடுத்துக்காட்டாகும்.
இந்துத்துவா என்பது ஒரு எல்லைக்குள் உட்பட்டதல்ல. ஒற்றுமையே பலம் என்பதற்கேற்ப சாதிகளாலும், வர்கங்களாலும், செய்யும் தொழிலாலும் வேறுபட்டிருக்கும் நாட்டையே ஒருங்கிணைப்பதிலும், இந்துத்துவாவின் பங்கு உள்ளது. ஒருங்கிணைந்த நாடே முன்னேற்றம் அடைய முடியும்.
முன்கூறிய அந்நிய நாட்டு படையெடுப்புகளால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு இந்துக்கள் கடும் பாதிப்பிக்கு உள்ளாகும் நிலையில் இருந்தனர். இந்துத்துவா அவர்களின் வழிமுறைகள், வழிபாட்டு மற்றும் மற்ற உரிமைகளை பாதுகாப்பதோடு, அவர்களது நம்பிக்கை மற்றும் உணர்வுகளையும் பாதுகாக்க முயல்கிறது.
இந்து மதம் மற்றும் இந்துத்துவம்:
இந்து மதம் மற்றும் இந்துத்துவம், ஆகிய இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து விளங்குகின்றன. இந்து மதமானது தர்மத்தின் படி செல்லவேண்டிய பாதையை வகுக்கிறது. மேற்கண்டது போல இந்துத்துவம் என்பது அந்த பாதையில் செல்லும் இந்துக்களின் பண்பாட்டு உரிமைகளை காக்கிறது. மேலும், இந்துஸ்தானம் என்ற பெயரைக் கொண்டு, இமாலய பர்வதத்திலிருந்து குமரி வரை பரந்து விரிந்த இந்தியாவை, வழி வழியாக கடை பிடித்துவந்த தர்மத்தை வைத்தே ஒருங்கிணைக்க உதவும் முன்முயற்சி என்றும் கூறலாம்.
தற்போது இந்துத்துவம் பல விதமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. எனினும் இந்து சமயத்தின் வேரான வேதங்களில் கூறப்பட்டுள்ள படி நம்முடைய தொன்மையான பயிற்சி மற்றும் சிகிச்சை முறைகளான யோகாசனம், தியானம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உணவுமுறை இன்றும் மக்களின் வாழ்வை செம்மைப்படுத்திதான் வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளால், இந்த பழக்கங்கள் இந்தியாவையம் கடந்து பரவியுள்ளது.