இந்தியாவில் அனைத்தும் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கின்றனவா..?

ஆசிய கண்டத்திலேயே மிக முக்கியமானதொரு ஜனநாயக நாடாகக் கருதப்படுகின்ற இந்தியாவில், உள் நாட்டு அரசியல் முதலான அனைத்து விஷயங்களும் மிக இயல்பாகவும், சரியாகவுமே சென்று கொண்டிருப்பதைப் போலான ஒரு தோற்றம் மிக நீண்ட நாட்களாக் இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் அது அப்படி அல்ல என்பது தற்போது வெளி உலகப் பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகி வருகிறது. ஆமாம், அரசின் கொள்கைகளை விமர்சிப்பது போல நாம் ஒரு கருத்து வைத்திருக்கிறோம் என்றால், மிக எளிதாக நாம் ஒரு தேசதுரோகியாகவும், முட்டாளாகவும் கருதப்படுகிறோம். அச்சு ஊடகங்களிலும் சரி, காட்சி ஊடகங்களும் சரி. ஒன்றிரண்டு நிறுவனங்களைத் தவிர மீதம் இருக்கும் அனைத்து ஊடகங்களும் அரசாங்கத்தையும், அதன் மோசமான கொள்கைகளையும் போற்றி துதி பாடவே செய்கின்றன. இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் தாங்கள் செய்யும் வேலைகளை புனித படுத்துவதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் உண்டு.தேர்தல் களத்தில் அவர்கள் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க அது பெரிதும் உதவி செய்யும். தங்களுக்கென தனியாக ஒரு கருத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டிராத மக்கள், தேர்தல் நேரத்தில் அவர்கள் பக்கம் ஆதரவாக வாக்களிக்க அதன் பங்கு மிக அவசியம்.ஆனால்,ஊடகங்களுக்கு இந்த அவசியம் ஏதுமில்லை என்றாலும் கூட, அவர்கள் அரசாங்கத்தைச் சார்ந்தே செயல்படுகிறார்கள். இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்! பெரும்பாலான ஊடகங்கள் அரசாங்கத்திற்கு சேவை செய்வது போலவே தங்களது வேலையை செய்து வருகின்றன. இதைவிட, தற்போதைய இந்தியாவின் உண்மை நிலைகயைப் புரிந்து கொள்ள நமக்கு வேறு என்ன பெரிய ஆதாரம் வேண்டும்..?
மனித நாகரிகம் முதன்முதலில் தோன்றிய நாடு எங்களுடையதுதான் என்றும், உலக மக்கள் அனைவரும் எங்களுக்குக் கீழ்தான் என்று எத்தியோப்பியா எனும் நாடு தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. பெரும் உணவுப் பஞ்சத்திற்கு புகழ்பெற்ற நாடான சோமாலியாவும் கூட, ‘பிளாக் ஹாக் டவுன்’ பற்றி பெருமை கொள்கிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தானும், தன்னை விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு பெரிய நாடான இந்தியாவை இரண்டு முறை தோற்கடித்ததாக தன் நாட்டு மக்களிடம் இப்போது வரை பறைசாற்றி வருகிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தங்களைப் பற்றிய பெருமைகளாக சில ஊதிப் பெருக்கபப்ட்ட பிம்பங்களைக் கட்டி வைத்துள்ளன. மக்களுடைய தனிப்பட்ட அடையாளமும், தேசிய அடையாளமும் ஒன்றுடன் ஒன்று ஆழமாக பின்னிப் பிணைந்துள்ள காரணத்தால், அவர்கள் இந்த பிம்பங்களை எல்லாம் நேர்மறையாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில்,ஒட்டுமொத்தமான ஒரு கூட்டு மயக்கத்திற்கு அவர்கள் ஆளாக நேர்கிறது. பொதுப் பார்வையில், எவருடைய தேசப்பற்றும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதை எவரும் விரும்புவதில்லை. தேசப்பற்று வேறு, அதை ஆளும் அரசு மீதான விமர்சனங்கள் வேறு எனும் புரிதல் பெரும்பாலான மக்களுக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! மேற்கண்ட மற்ற நாடுகளைப் போல, போலி பிம்பங்களைக் கட்டி எழுப்புவததில் இந்திய அரசாங்கமும் விதிவிலக்கு அல்ல.
இந்தியப் பிரதமரும், அமைச்சர்களும் உலகமே இந்தியாவை திரும்பிப் பார்ப்பதாக தொடர்ச்சியாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா எப்படி ஒரு உற்பத்தி மையமாக மாறி உள்ளது என்றும் இந்தியாவின் ‘ஸ்டார்ட் அப்கள்’தான் நாளைய உலகத்தின் எதிர்காலம் என்றும், மிக அண்மையில் கூட நிறைய உரைகளை நிகழ்த்தியுள்ளார்கள்.இதுதான் அரசாங்கத்தின் பார்வையில் இருந்து இந்திய நாட்டை பற்றி சர்வதேச உலகத்தின் முன்னால் நிறுவ ஆசைப்படும் ஒரு பிம்பமாகும். இவர்கள் கட்டமைக்கும் இந்த பிம்பத்தின் மூலம், உலகமே இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியா உலகத்தை பார்க்கிறதா என்கிற கேள்வி பலரிடத்திலும் எழுந்து வருகிறது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில், இந்தியா 85 வது இடத்திலும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் உலகளாவிய வறுமைக் குறியீட்டில் 94வது இடத்திலும் உலகப் பொருளாதார மன்றத்தின் மனித வளக்குறியீட்டில் 131 வது இடத்திலும் உள்ளது. 2014ல் இந்த அரசாங்கம் அமைந்ததிலிருந்து நாம் தொடர்ச்சியாகக் கண்டு வரும் தோல்விகள் இவை. உலக அரங்கில், இந்திய அரசு முன்வைக்கும் பிம்பத்திற்கும், இந்த உண்மை நிலைக்கும் அதிக அளவிலான வேறுபாடுகள் உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
ஒவ்வொரு நாட்டின் குடிமக்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு தான், அந்தந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அமைகிறார்கள் என்பது தொடர்ச்சியாக வரலாற்றில் மெய்ப்பிக்கப்பட்டு வரும் ஓர் உண்மை. ஜனநாயகத்திற்கும் இது பொருந்தும், சர்வாதிகார ஆட்சிக்கும் இது பொருந்தும்! ஹிட்லர் தொடங்கி,பல்வேறு ஆட்சியாளர்களை இதற்கு நாம் எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஜெர்மானிய மக்கள், அன்றிருந்த மனநிலையில் ஹிட்லர் இல்லாவிட்டாலும் கூட அவரைப் போன்ற மற்றொரு கொடுங்கோலரின் ஆட்சிதான் அங்கு அமைந்திருக்கும் என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.ஆகவே, நல்ல ஆட்சியாளர்களைப் பெற விரும்பும் மக்கள் மிகத் தெளிவான அரசியல் அறிவையும், நேர்மையான கொள்கை உணர்வையும் கொண்டிருப்பது இன்றியமையாத ஒன்றாகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான, இன்றைய இந்திய ரூபாய் வீழ்ச்சியை ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்.இது ஏற்றுமதியாளர்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு செயல்பாடுதான் என மீடியாக்கள் தொடர்ச்சியாக நம்மை நம்ப வைக்கின்றன. இந்திய அரசாங்கத்தின் ஆசையும் அதுதான். ஆனால், இந்தியா ஒரு ஏற்றுமதி நாடல்ல அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு எனும் உண்மையையும், இந்த ரூபாய் வீழ்ச்சி இந்தியப் பொருளாதாரத்தை எவ்வளவு மோசமாக பாதிக்கும் என்கிற உண்மையையும் அவர்கள் எடுத்துக் கூறத் தவறியுள்ளார்கள். ரூபாயின் மதிப்பு அதிகமாகும் போது கூட, இதே போல அவர்கள் வேறு ஒரு கதை சொல்லக்கூடும். பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை ஏற்றத்திற்கும் கூட இதே போன்றதொரு உள்ளீடற்ற ஒரு கதை கூறப்படும். இப்போது கூட, எரிபொருட்களுக்கு அதிக வரி செலுத்துவது நமது தேசக்கடமை என்றுதான் ஊடகங்களின் பரப்புரை அமைந்துள்ளது. அரசாங்கத்தின் கைப்பாவையாக ஊடகங்கள் இருப்பதன் கேடுகள் இவை. இன்னும் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியாக இதே போன்ற பரப்புரைகள் அமையும் போதுதான், இது ஒரு அபாயச் சுழல் என்கிற உண்மை நமக்குப் புரிய வரும்.
சுரண்டுபவர்களை மட்டுமே நாம் எப்போதும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தங்களின் மீதான சுரண்டலுக்கு, வாக்களிப்பதன் மூலமோ, கூட்டு மனசாட்சி மூலமோ அனுமதி கொடுக்கும் மக்களையும் சேர்த்தே தான் நாம் விமர்சிக்க வேண்டும்.அதுதான் உள்ளபடியே நியாயமானதொரு விமர்சனமாக அமையும்.மக்கள் என்று மொத்தமாக வருகையில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அதில் குறிப்பிடத் தகுந்த ஒரு பொறுப்பு உள்ளது. சமூகத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு அங்கம் தான். எனவே, அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு பண்பட்ட நிலைக்கு வருவதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கான ஒரே இறுதித் தீர்வாக இருக்க முடியும்.