ஆட்டிசம் ஏன் வருகிறது?

ஆட்டிசம் என்பது ஒருவரது தகவல் செயலாக்கத் திறனைப் பாதிக்கும் மூளை வளர்நிலைக் கோளாறு. ஆட்டிசம் உள்ளவர்களுக்கு சமூகத் திறன்களும் தகவல்தொடர்புத் திறன்களும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆட்டிசத்தின் அறிகுறிகளில் நாம் காணத்தக்க அத்தனை வேறுபாடுகளும் இருப்பதால் இந்த நிலை ஆட்டிசம் முழுவீச்சுக் கோளாறு (autism spectrum disorder) என்று கூறப்படுகிறது.
ஆட்டிசத்திற்கு என்ன காரணம் என்பதை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இக்கோளாறு வருவதற்கு மரபுவழி ஒரு முக்கிய இடர்க் காரணி (risk factor) என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. பல மரபணுக்கள் ஆட்டிசத்துடன் வலுவான தொடர்புடையவையாக இப்போது அறியப்படுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான மரபணுக்கள் மெல்லிய தொடர்புடையவை. மரபணு வேறுபாடுகள் ஒரு பெற்றோரின் டி.என்.ஏ.வின் மூலம் மரபுரிமையாகப் பெறப்படலாம்; அல்லது அவை தன்னிச்சையாக விந்து, முட்டை அல்லது கருவில் ஏற்படலாம். ஆட்டிசம் முழுவீச்சுக் கோளாறுள்ள முதல்நிலை உறவினரைக் கொண்டவருக்கும் அக்கோளாறு வர இடர்க் காரணிகள் உண்டு. ஆனால் தற்போது இந்த இடரை அளவிடுவது சாத்தியமல்ல. ஆட்டிசத்திற்கான மரபணு இடர்க் காரணிகளைக் கொண்டிருந்தாலே ஒருவருக்கு இந்தக் கோளாறு கட்டாயம் ஏற்படும் என்று அர்த்தமல்ல என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
எப்படிப்பட்ட சுற்றுச்சூழல் காரணிகள் ஆட்டிசத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். சிசுவின் குறைந்த பிறப்பு எடை (low birth weight) ஒரு இடர்க் காரணி எனக் கருதப்படுகிறது. சிசுப்பருவத்தில் அதன் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய கரு வயதிற்கேற்ற வளர்ச்சியின்மை (small for gestational age) குறைப்பிரசவம் (premature birth) போன்ற பல விதமான சுற்றுச்சூழல் காரணிகள் சிசுவுக்கு ஆட்டிசம் வரும் இடரை அதிகரிக்கின்றன.
கர்ப்பகாலத்தில் தாய்க்கு கர்ப்பகால நீரிழிவு (gestational diabetes), உயர் இரத்த அழுத்தம், நோய்த்தொற்று போன்றவை ஏற்பட்டால் அவை சேய்க்கு ஆட்டிசம் வரும் இடரை அதிகரிக்கின்றன. வயதான பெற்றோரைக் கொண்ட பல குழந்தைகளுக்கு ஆட்டிசம் உள்ளது ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. தாய் கருத்தரிக்கும்போது தந்தை வயதானவராக இருப்பதும் ஒரு முக்கிய இடர்க் காரணியாகும்; ஏனென்றால் தன்னிச்சையான மரபணுப் பிறழ்வுகள் நேரும் வாய்ப்பு பெற்றோரின் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.
தாயின் கர்ப்பகாலத்திலோ அல்லது சேயின் சிசுப்பருவத்திலோ காற்று மாசுபாட்டால் சேய் பாதிப்பிற்குள்ளாவதற்கும் ஆட்டிசத்தின் தொடக்கத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான சில சான்றுகள் உள்ளன. இருப்பினும், அறிவியலாளர்கள் இந்தத் தொடர்பை நன்கு புரிந்து கொள்ள இன்னும் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். எண்ணற்ற சுற்றுச்சூழல் காரணிகள் இருப்பதால் ஆட்டிசத்திற்கும் எந்தவொரு தனி சுற்றுச்சூழல் காரணிக்கும் இடையிலான தொடர்பைக் கண்டுபிடிப்பது மிகக் கடினமாக உள்ளது.
மொத்தத்தில், ஆட்டிசத்திற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, இன்னும் ஆட்டிசம் ஒருவருக்கு வருவதற்கான தனியொரு காரணத்தை அறிவியலாளர்கள் முழுமையாகக் கண்டறியவில்லை என்ற திருப்தியற்ற விடைதான் கிடைக்கிறது. சுற்றுச்சூழல் காரணிகளை விட மரபியல் காரணிகளே இந்தக் கோளாறு உண்டாவதில் அதிகப் பங்களிக்கின்றன என்பது மட்டுமே தற்போது அறிவியலாளர்களால் உறுதியாகச் சொல்ல முடிகிறது. ஆட்டிசத்திற்கு ஏதோ ஒரு மரபணு அல்லது வாழ்முறைதான் காரணி என்றில்லாமல், பல்வேறு காரணிகளுக்கு இடையிலான சிக்கலான தொடர்புகளின் விளைவே ஆட்டிசம் என்றே தற்போது கருதமுடிகிறது.