அஜினமோட்டோ – முதுமை, இதயப் பிரச்சனைகளை வேகமாக ஏற்படுத்தும். – அலகாபாத் பல்கலைக் கழகம் ஆய்வு.


அஜினமோட்டோ, எனப்படுவது உணவுப் பொருட்களின் சுவையை மிகுதிப்படுத்துவதற்காகச் சேர்க்கப்படும் ஒரு வேதிப் பொருளாகும். இது குறிப்பாக, மஞ்சூரியன், நூடுல்ஸ், பேல் முதலான சீன உணவு வகைகளில்தான் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. அஜினமோட்டோ இல்லாமல் சீன உணவு வகைகளே கிடையாது என்று கூடச் சொல்லப்படும் அளவிற்கு, அவ்வகை உணவுகளின் மிக முக்கியமான அத்தியாவசிய சேர்மானப் பொருள் இது.
மோனோசோடியம் குளுட்டமேட் ( Monosodium Glutamate, MSG) என அழைக்கப்படும் ஒரு வேதி உப்பின் வர்த்தகப் பெயர்தான் அஜினமோட்டோ. சுவைக்காகச் சேர்க்கப்படும் இந்த உப்பு, உயர் இரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள் மற்றும் விரைவாக முதுமையடைய வைத்தல் போன்ற பல தீவிரமான உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கும் காரணியாக இருப்பதாக, அண்மையில் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகின்றது. இந்திய மருத்துவ உயிர் வேதியியலுக்கான புகழ்பெற்ற இதழில் (Indian Journal of Clinical Biochemistry) இந்த ஆய்வானது பதிப்பிக்கபப்ட்டு வெளி வந்திருக்கிறது.
பேராசிரியர் எஸ்.ஐ.ரிஸ்வியின் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்ட உயிர் வேதியல் விஞ்ஞானிகள், குறைந்த அளவில் நாம் அஜனமோட்டோவை எடுத்துக் கொண்டாலும் கூட அது ஆரோக்கியத்திற்கு தீங்கானது எனத் தெரிவித்துள்ளனர். பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் வரும் செறிவுகளிலும், அஜனமோட்டோவானது ஆக்சிடேட்டிவ் அழுத்தம், உள் வீக்கம் போன்ற உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என இந்த அலகாபாத் பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கின்றது. தவிர, அஜனமோட்டோவின் உமாமி (umami) சுவைக்கு குழந்தைகளை அடிமையாக்கும் தன்மை கொண்டது என்பதும் இந்த ஆய்வின் முடிவு. இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் உப்பு ஆகிய சுவை மொட்டுகளுக்கு அடுத்த படியாக வரும் ஐந்தாவது முக்கிய சுவைதான் ‘உமாமி’ எனப்படும் இந்தச் சுவையாகும்! இது, நாவில் நீண்ட நேரம் நீடித்திருக்கும் வகையிலான ஒரு சுவை அனுபவத்தைத் தர வல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அஜனமோட்டோவின் சுவையால் கவரப்பட்டு, அது கலந்த துரித வகை உணவுப் பொருட்களை நாம் அடிக்கடி சாப்பிட ஆரம்பித்தால், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட இதயப் பிரச்ச்னைகளும், இளமையிலேயே முதுமை போன்ற பிரச்சனைகள் வரும் என்கிறார் பேராசியர் எஸ்.ஐ. ரிஸ்வி. தற்போதைய சில ஆண்டுகளில், அஜனமோட்டோ எனப்படும் MSG நிறைந்த துரித உணவுகளைச் சாப்பிடுவது மகக்ளிடையே பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட சிப்ஸ், மோமோஸ் போன்ற உணவுகளிலும் கூட MSG’யின் கலவை அதிகமாகத் தென்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும் ரிஸ்வி அவர்கள் தன் ஆய்வறிக்கையில், MSG நம் உடலில் உண்டாக்கும் இரசாயன மாற்றம் மிக அதிகமான தீங்கை விளைவிக்கக்கூடியது என்றும் இதே வகையிலான தீங்குகள்தான், கோவிட்-19 பாதிக்கப்பட்டோரின் உடல்நிலையில் அடிக்கடி காணப்படுகின்றன எனவும் கூறியிருக்கிறார். எலிகளுக்கு, ஒரு குறிப்பிட்ட டோஸ் அளவிலான அஜனமோட்டோ கொடுத்து சோதிக்கப்பட்ட ஆய்வில், அந்த உப்பை தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு உட்கொண்ட பிறகு, அவற்றின் மூளைப் பகுதியில் சில மாற்றங்கள் காணப்பட்டன.
ஒரு கிலோ உடல் எடைக்கு, 30 mg வீதம் மற்றும் 100 mg வீதம் என இரு வெவ்வேறு செறிவுகளில் MSG உப்பை எடுத்துக் கொண்டு, அதன் விளைவுகளை விஞ்ஞானிகள் சோதித்துப் பார்த்தனர். இதில், 30 mg அளவானது எந்த ஒரு விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், 100 mg அளவில், ஆரோக்கியத்திற்கு ஆபத்தான பல பக்க விளைவுகள் இருந்தன.
குழந்தைகளைப் பொறுத்த வரையில், அஜனமோட்டோ என்பது கருவில் இருக்கும் சிசுக்களுக்குக் கூட மூளையில் இரத்தக் கசிவை உண்டாக்கும் அளவுக்குக் கேடு விளைவிக்கும் என்கிறார் பேராசிரியர் ரிஸ்வி. வளரும் குழந்தைகளின் உடல் நலனில், MSG உண்டாக்கும் சீரழிவைப் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வைத் தரும் ஓர் ஆய்வு இது.